தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் அதிகாரப்பூர்வமாத் தொடங்கியுள்ளது.
இதற்கான அறிவிப்பை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் tngasa.in என்ற இணையதளம் வாயிலாக மே 29-ஆம் தேதி வரை தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் நிலவி வரும் சூழலில், இந்த ஆண்டும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வசதி இல்லாத மாணவர்கள் அல்லது தொழில்நுட்ப உதவி தேவைப்படும் மாணவர்களுக்காக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் இந்த மையங்களை நேரில் அணுகி தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதோடு, விண்ணப்பப் பதிவையும் மேற்கொள்ளலாம்.
மே 29-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு, அவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பின்னர் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படும். மாணவர்கள் சரியான ஆவணங்களுடன் உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு உயர்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Edited by Siva

