தமிழக மருத்துவத்துறையில் ஒரு வரலாற்றுச் சாதனையாக, சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ள இலவச செயற்கை கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்ற பெண் ஒருவருக்கு வெற்றிகரமாக இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்த தம்பதிக்கு, கடந்த 2025 ஆம் ஆண்டு இந்த மையத்தில் செயற்கை முறையில் கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது அந்த பெண்ணுக்கு ஆரோக்கியமான முறையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. தாயும் இரு குழந்தைகளும் முற்றிலும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து மேற்கொள்ளப்படும் இந்த அதிநவீன ஐ.வி.எஃப் சிகிச்சையை, ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில், கடந்த 2024 ஆம் ஆண்டு சுமார் 7 கோடி ரூபாய் செலவில் இந்த அரசு மையத்தை தமிழக அரசு அமைத்தது. பொதுவாக இச்சிகிச்சையில் 30 முதல் 50 சதவீதம் வரை மட்டுமே வெற்றி வாய்ப்பு எனக் கூறப்படும் சூழலில், எழும்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் தீவிர முயற்சியால் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது.
ஒரு பைசா கூட கட்டணம் இல்லாமல் முற்றிலும் இலவசமாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது, குழந்தை பாக்கியம் இல்லாத ஏழை தம்பதிகளிடையே ஒரு மிகப்பெரிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva

