தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், மாநிலத்தின் அரசியல் களம் இன்று மிக முக்கியமான நகர்வுகளை கண்டுள்ளது.
இன்று காலை 10:30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத அர்லேகர் சென்னை வந்தடைந்தார். இதற்கிடையே, 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், ஆளுநருக்கு ஒரு முக்கியமான கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், தமிழகத்தில் ஆட்சி அமைக்க தமக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என்றும் அவர் ஆளுநரிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலையில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதால், இந்த அரசியல் நகர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் இருக்க, ஆளுநர் இன்று மதியம் 1:30 மணிக்கே மீண்டும் கேரளா புறப்பட உள்ளார். இதனால், இந்த இடைப்பட்ட குறுகிய நேரத்திற்குள் விஜய் மற்றும் ஆளுநர் இடையிலான சந்திப்பு அல்லது அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகுமா என்பதில் மிகுந்த விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு புதிய ஆட்சி அமைவதற்கான முதல் அதிகாரப்பூர்வ படிநிலையாக இது பார்க்கப்படுகிறது.
Edited by Siva

