தஞ்சாவூர் மாவட்டத்தில் காவலர் ஒருவரின் கை முறிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களிலும், சில ஊடகங்களிலும் பரப்பப்பட்ட செய்திக்கு தஞ்சாவூர் மாவட்டக் காவல்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மே 28, 2026 தேதியிட்ட அதிகாரப்பூர்வ மறுப்பு செய்தியில், அந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த மே 23, 2026 அன்று, உள்ளூர் தெருத் திருவிழாவிற்காக பேனர்கள் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இருவருக்கும், ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கும் இடையே போக்குவரத்து இடையூறு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை வைத்து, காவலர் தேவதானின் கை முறிந்ததாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால், காவலர் தேவதானுக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை என்றும், அந்த நபர்கள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல என்றும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பரப்புவது பொதுமக்களிடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்குகிறது. எந்தவொரு தகவலையும் அதன் உண்மைத்தன்மையை அறியாமல் பகிர்வது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற வதந்திகளைக் கண்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டும் நம்புமாறும் தஞ்சாவூர் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பொறுப்பற்ற முறையில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் எச்சரிக்கையாக விடுக்கப்பட்டுள்ளது.
Edited by Siva

