தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, கடந்த சில நாட்களாக வழங்கப்பட்டு வந்த கூடுதல் பாதுகாப்பு மற்றும் கான்வாய் வாகனங்கள் திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் முதலமைச்சருக்கு இணையான பலத்த பாதுகாப்பு மற்றும் கான்வாய் வாகனங்கள் அவருக்கு வழங்கப்பட்டன. ஆனால், ஆட்சி அமைப்பதில் தற்போது நிலவி வரும் இழுபறி மற்றும் பெரும்பான்மையை நிரூபிப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக இந்த பாதுகாப்பு நேற்றிரவு அதிரடியாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
குறிப்பாக, இசட் பிளஸ் அந்தஸ்துக்கு இணையான பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது வழக்கமான பாதுகாப்பு நிலைக்குக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் தனது நீலாங்கரை இல்லத்திற்கு எவ்வித அதிகாரப்பூர்வ கான்வாய் வாகனங்களும் இன்றிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்துக் காவல்துறை தரப்பில் கேட்டபோது, தவெக தரப்பிலிருந்தே கான்வாய் பாதுகாப்பு வேண்டாம் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாக ஒரு தரப்பு கூறினாலும், ஆட்சி அமைப்பதில் நிலவும் முட்டுக்கட்டை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆளுநர் மாளிகையிலிருந்து முறையான அழைப்பு வராத நிலையில், பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது விஜய்யின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva

