தமிழக முதல்வர் விஜய்யை போல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோ மூலம் பொதுமக்களை ஏமாற்ற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறையின் சிபி-சிஐடி சைபர் கிரைம் பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
சைபர் கண்காணிப்பின்போது, விஜய் பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்குவதாக சித்தரிக்கும் AI deepfake வீடியோ ஒன்று Facebook-ல் பரப்பப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்த வீடியோவில் இந்தி ஆடியோ இடம்பெற்றிருந்ததுடன், உதவி தேவைப்படுபவர்கள் குறிப்பிட்ட WhatsApp எண்ணை தொடர்புகொள்ளுமாறும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி சிபி-சிஐடி சைபர் கிரைம் பிரிவு வழக்குப்பதிவு செய்து, போலி வீடியோவை உருவாக்கி பரப்பியவர்களை கண்டறியும் பணியில் இறங்கியுள்ளது. மேலும், வீடியோ பரப்பப்பட்ட போலி Facebook கணக்கு தொடர்பான தகவல்கள் மற்றும் பதிவுகளை வழங்குமாறு Meta நிறுவனத்திடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விசாரணையில், இதேபோன்று விஜய்யை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல deepfake வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவது தெரியவந்துள்ளது. சில வீடியோக்கள் பாகிஸ்தானை சேர்ந்ததாக கூறப்படும் Facebook கணக்குகள் மூலம் பகிரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற வீடியோக்களை நம்பி தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளவோ, WhatsApp குழுக்களில் இணையவோ வேண்டாம் என காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. சந்தேகமான வீடியோக்களை குடும்பத்தினரிடமும் பகிர்ந்து, அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Edited by Siva

