ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் புதிய நகைச்சுவை இணையத்தொடரான 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆபிஸ்' வரும் நவம்பர் 18-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
கார்ப்பரேட் அலுவலக பின்னணியில் உருவாகியுள்ள இத்தொடரை அப்துல் கபீஸ் இயக்கியுள்ளார், ஜெகன் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.
குடும்ப செலவுகளை சமாளிக்க போராடும் இளம் தம்பதிகளான அறிவு மற்றும் ஐஸ்வர்யாவுக்கு ஒரே ஐடி நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. ஆனால், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக பணிபுரியக் கூடாது என்ற நிறுவனத்தின் கடுமையான விதியால், தங்களது திருமண உறவை மறைத்து அறிமுகமில்லாதவர்கள் போல் நடிக்கின்றனர். கண்டிப்பான மேலாளர், ஆர்வமுள்ள சக ஊழியர்கள் மற்றும் அலுவலக சூழல்களுக்கு இடையே தங்களது ரகசியத்தை காப்பாற்ற அவர்கள் கூறும் பொய்களும், சந்திக்கும் பதற்றமான தருணங்களுமே இத்தொடரின் முதன்மை நகைச்சுவை களமாகும்.
இன்றைய ஐடி தம்பதிகளின் பொருளாதார நெருக்கடி மற்றும் கார்ப்பரேட் வாழ்க்கையின் யதார்த்தங்களை நகைச்சுவையோடு இத்தொடர் பேசுகிறது. இதில் அறிவு மற்றும் ஐஸ்வர்யாவாக பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி மற்றும் ஸ்மேஹா மணிமேகலை நடித்துள்ளனர். இவர்களுடன் சனம் ஷெட்டி மற்றும் பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடர் ஒவ்வொரு புதன்கிழமையும் நான்கு எபிசோடுகளுடன் வெளியாகவுள்ளது.

