பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம், ரியல்மி நிறுவனத்துடன் தனது உலகளாவிய செயல்பாடுகளை இணைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய சந்தைகளில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறைந்து வரும் வேளையில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பின் மூலம் இரண்டு நிறுவனங்களும் தயாரிப்பு திட்டமிடல், சந்தைப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை ஒரே மையத்தின் கீழ் கொண்டுவரும்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் பீட் லாவ் இந்த ஒருங்கிணைந்த செயல்பாடுகளை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு செலவுகளை குறைக்கவும், ஸ்மார்ட்போன் சந்தையில் நிலவும் கடும் போட்டியை சமாளிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வருங்காலத்தில் ஒன்பிளஸ் போன்களின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிகள் ரியல்மி அல்லது ஓப்போ சாதனங்களை போலவே இருக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும், இந்தியாவை பொறுத்தவரை ஒன்பிளஸ் ஒரு மிகப்பெரிய சந்தையை கொண்டுள்ளதால், அங்கு வழக்கம்போல புதிய சாதனங்கள் அறிமுகம் மற்றும் நேரடி விற்பனை நிலையங்கள் தொடரும் என்று கூறப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் தனித்துவமான அடையாளமும் "Flagship Killer" என்ற பெயரும் இந்த இணைப்பிற்குப் பிறகு நீடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Siva

