இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, 1977ஆம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக நாட்டின் எந்தவொரு மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லாத நிலை உருவாகியுள்ளது.
கேரளாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியை வீழ்த்தி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இமாலய வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 98 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகால இடதுசாரி ஆட்சிக்கு கேரள வாக்காளர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். முதல்வர் பினராயி விஜயன் தனது தர்மடம் தொகுதியில் வெற்றி பெற்ற போதிலும், மாநில அளவில் அவரது கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்த தேர்தல் முடிவுகள் 'இந்தியா கூட்டணியில் இடதுசாரிகளின் செல்வாக்கை வெகுவாக குறைக்கும் என கருதப்படுகிறது. கேரளாவை போலவே மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸும், தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக-வும் இந்தத் தேர்தலில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
முன்னதாக, தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்தியாவில் கம்யூனிஸ்ட்களின் ஆட்சி எங்கும் இருக்காது என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் கணித்திருந்தது தற்போது உண்மையாகியுள்ளது. இடதுசாரிகளின் வீழ்ச்சி இந்திய அரசியலில் ஒரு புதிய விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
Edited by Siva

