தமிழக அரசியலில் நிலவி வரும் ஆட்சி அமைப்பதற்கான இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்குத் தங்கள் கட்சி எந்த விதமான இடையூறுகளையும் செய்யாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ரீதியாக அதிக இடங்களைப் பெற்றுள்ள ஒரு கட்சிக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்பதை அவர் தனது பேட்டியில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
முக்கியமாக, தமிழகம் தற்போது மற்றொரு தேர்தலைச் சந்திக்கும் நிலையில் இல்லை என்றும், மக்கள் ஏற்கனவே தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்ட நிலையில் மீண்டும் ஒரு தேர்தலைத் திணிப்பது தேவையற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநரின் முடிவுகளில் தலையிடப் போவதில்லை என்றும், தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சிப்பதில் திமுக தடையாக இருக்காது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திராவிடக் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கும் என்ற ஊகங்களுக்கு இந்தப் பேட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே தற்போதைய பிரதான நோக்கம் என்றும், மக்களின் விருப்பத்திற்கு எதிராக திமுக செயல்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
Edited by Siva

