தமிழக அரசியல் களத்தில் ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மறுபுறம் திருச்சி கிழக்கு தொகுதிக்கு நடைபெற வாய்ப்புள்ள இடைத்தேர்தல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன.
த.வெ.க தலைவர் விஜய்யிடம், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை இந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்த அக்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.
திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிட்ட நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அந்த வெற்றிடத்தை நிரப்ப நேர்மையான அதிகாரி என பெயரெடுத்த சகாயம் சரியான தேர்வாக இருப்பார் என த.வெ.கவினர் கருதுகின்றனர்.
குறிப்பாக, திமுக ஆட்சிக் காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கனிம வள கொள்ளையை தடுக்க, சகாயம் வெற்றி பெற்றால் அவருக்கென கனிமவளத்துறை என்ற தனித்துறையை உருவாக்கி அதிகாரத்தை வழங்கலாம் என்றும் விஜய்க்கு யோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த தொகுதியின் சமூக கட்டமைப்பை கருத்தில் கொண்டு, அதே மதத்தை சேர்ந்த சகாயத்தை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. கனிம வள ஊழலுக்கு எதிராக துணிச்சலாக செயல்பட்ட சகாயத்தின் வருகை, த.வெ.க-வின் ஊழல் எதிர்ப்பு பிம்பத்தை மக்களிடையே மேலும் வலுப்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Edited by Siva

