தென்னிந்தியாவில் அடுத்த மூன்று நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அக்டோபர் 15-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், அடுத்த 2 அல்லது 3 தினங்களில் தென்மேற்கு பருவமழை காலம் முழுமையாக விலகும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் அக்டோபர் 15 முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

