தமிழகச் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை திமுகவிற்கு சாதகமாக இருந்தாலும், 'ஆக்சிஸ் மை இந்தியா' நிறுவனம் மட்டும் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விஜய் விரிவாக விளக்கினார்.
குறிப்பாக, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், பிற கட்சியினரின் சதித்திட்டங்களை எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், வெற்றிக்கு பிறகு செய்ய வேண்டிய பணிகள் மற்றும் எதிர்காலத்தில் ஆட்சியை சிறப்பாக நடத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் வேட்பாளர்களுடன் அவர் விவாதித்தார்.
மக்களின் தீர்ப்பை மதித்து நேர்மையாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய விஜய், தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள் குறித்து தனது கட்சியினரை தயார்படுத்தி வருகிறார். தவெக-வின் முதல் தேர்தல் களம் என்பதால், இந்த ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva

