Dailyhunt
விஜய் நல்லாட்சி தருவார் என நம்புகிறேன், ஆதரவு உண்டா என்பது நாளை முடிவு: திருமாவளவன்

விஜய் நல்லாட்சி தருவார் என நம்புகிறேன், ஆதரவு உண்டா என்பது நாளை முடிவு: திருமாவளவன்

Webdunia 3 days ago

மிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கோரி த.வெ.க தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப, விஜய் ஒரு சிறப்பான நல்லாட்சியைத் தருவார் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

விஜய்யின் ஆதரவு கோரிக்கை குறித்து திருமாவளவன் பேசுகையில், தங்களது கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் நாளை விரிவான ஆலோசனை நடத்த இருப்பதாகவும், அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், நீண்ட காலமாக தாங்கள் திமுக கூட்டணியில் பயணித்து வருவதாகவும், அந்த நட்பு இப்போதும் நீடிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் முடிவுகளை கடந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளின் கருத்தறிந்து விசிக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றார்.

இதேவேளை, த.வெ.க அரசுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்காமல், "நன்றி, வணக்கம்" என்று மட்டும் கூறிவிட்டு அவர் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு சென்றார்.

Edited by Siva

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil