Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழ்நாடு MP, MLA-கள் அனைவரின் வருகைப்பதிவுகளையும் கண்காணிக்கிறாரா முதல்வர் விஜய்?

தமிழ்நாடு MP, MLA-கள் அனைவரின் வருகைப்பதிவுகளையும் கண்காணிக்கிறாரா முதல்வர் விஜய்?

YouTurn Tamil 1 week ago

2026 சட்டமன்றத்தில் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் சட்டமன்ற கூட்டத்தொடர்களில் பங்கேற்கும் MLA மற்றும் MP-களின் வருகைப்பதிவுகளை முதல்வர் விஜய் நேரடியாக கண்காணிப்பதாகவும், குறைவான வருகைப்பதிவு உள்ள உறுப்பினர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் படி உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?

முதலில் MP-கள் என்று சொல்லப்படக்கூடியவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் தான் கலந்துகொள்வார்கள். அவர்கள் சட்டமன்றத்தில் பங்கேற்கமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் ஒன்றிய அளவிலான மக்கள் பிரதிநிதிகள் ஆவர். இதனால் சட்டமன்றம், முதல்வர், தலைமைச் செயலகம் என எதுவும் MP-களின் வருகைப்பதிவுகளை கண்காணிக்க முடியாது. அதோடு தவெக கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், முதல்வர் நேரடியாக சட்டமன்ற உறுப்பினர்களின் வருகைப்பதிவுகளை கண்காணிப்பது, வருகைப்பதிவு குறைவாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்போ செய்தியோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக கட்சிக் கொறடாவின் உத்தரவிற்கு மாறாக சட்டமன்றத்தில் கலந்து கொள்ளாமல் இருக்கும் MLA மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க அவரது கட்சி தலைமைக்கு உரிமையுண்டு. ஆனால் அந்தக் கட்சியால் மற்ற கட்சியின் MLA-கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியாது.

அதேநேரத்தில், சட்டமன்றத்தில் MLA-கள் மற்றும் அமைச்சர்களின் வருகைப்பதிவு, விடுப்புகள் குறித்த தகவல்களை கையாளும் பொறுப்பு சட்டமன்றத்தின் செயலாளருக்கு தான் உண்டு. மேலும், ஒரு MLA தொடர்ந்து 60 நாட்கள் சட்டமன்றத்திற்கு வரவில்லை என்றால், அவரது தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்குமாறு தீர்மானம் கொண்டு வர மற்ற உறுப்பினர்களுக்கு உரிமையுண்டு. இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தி சட்டமன்றத்தில் முடிவு எடுக்கப்படும்.

இதிலிருந்து, அனைத்து கட்சிகளைச் சேர்ந்த MLA-களின் வருகைப்பதிவுகள் குறித்து முடிவெடுக்க முதல்வருக்கு தன்னிச்சையான அதிகாரம் ஏதுமில்லை என்பது தெரியவருகிறது.

முடிவு:

தமிழ்நாட்டின் MLA மற்றும் MP-களின் வருகைப்பதிவுகளை முதல்வர் விஜய் நேரடியாக கண்காணிப்பதாகவும், குறைவான வருகைப்பதிவு உள்ள உறுப்பினர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: YouTurn Tamil