Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Minister Raj Mohan: இயக்குநர் டூ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்... ராஜ்மோகன் கடந்து வந்த பாதை!

Minister Raj Mohan: இயக்குநர் டூ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்... ராஜ்மோகன் கடந்து வந்த பாதை!

ABP Nadu 3 weeks ago

மிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் கடந்து வந்த பாதை பற்றிக் காணலாம்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ் கட்சி ஆகியவை ஆதரவளிக்க தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்தது. தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றார். அவருடன் சேர்த்து 9 அமைச்சர்களும் பங்கேற்றார்கள். இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகனும் ஒருவர்.

ராஜ்மோகனை பலரும் நன்கு அறிந்திருப்பார்கள். சமூக வலைத்தளம், யூட்யூப் பிரபலமாக தொடங்கிய காலத்திலேயே மக்களிடத்தில் நன்கு பரீட்சையமானார். புட் சட்னி என்ற யூட்யூப் சேனல் இன்றளவும் அவருக்கு அடையாளமாக உள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளநிலை ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் படித்துள்ள அவருக்கு கவிதா என்ற மனைவியும், பகத் சிங், தீரன் என இரு மகன்களும் உள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியின் சீசன் 2வில் பேச்சாளராக களம் கண்டு டைட்டில் பட்டம் வென்றார். தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகளில் பேச்சாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் கண்ட ராஜ்மோகன் ஒரு கட்டத்தில் சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். நட்பே துணை, வேலையில்லா பட்டதாரி 2, தானா சேர்ந்த கூட்டம், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கடந்த 2023ம் ஆண்டு பள்ளி வாழ்க்கையை மையமாகக் கொண்ட பாபா பிளாக் ஷீப் படத்தையும் ராஜ்மோகன் இயக்கியுள்ளார்.

தனது சரளமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தமிழ் பேச்சால் மக்களிடையே பாராட்டைப் பெற்ற அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது மிகப்பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. ஆனால் அதனையெல்லாம் உடைத்தெறிந்து எம்.எல்.ஏ.,வாகி தற்போது அமைச்சராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். விஜய்யின் குட் புக்கில் இடம்பெற்ற ராஜ்மோகன் தான் விஜயின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வேட்பாளராக எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட ராஜ்மோகன் திமுக வேட்பாளர் தமிழன் பிரச்சனாவை சுமார் 10,804 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் ராஜ்மோகனுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டாலும் அவர் சார்ந்த பட்டியலின சமூகம் அடிப்படையில் அவருக்கு ஆதிதிராவிட நலத்துறை வழங்கப்படலாம் என பேச்சு எழுந்தது. இதற்கு கடும் விமர்சனம் எழுந்தது. ஆனால் முதலமைச்சர் விஜய் அவரை பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக்கி சிறப்பித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை ராஜ்மோகன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவின்போது ஆண்டவன் மீது ஆணையாக என ஆணையிட்டு என சொல்லும்போது விஜயை கைகாட்டி அவர் பதவியேற்றது தவெக தொண்டர்களிடையே சிலிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

நிச்சயம் ராஜ்மோகன் தனக்கு கொடுக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை ஆகிய பொறுப்புகளை திறம்பட செயல்படுத்தி மக்களிடையே நன்மதிப்பை பெறுவார் என தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Author : பேச்சி ஆவுடையப்பன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu