Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கீழடி ஆய்வறிக்கை தெளிவற்றதா? - அமர்நாத் ராமகிருஷ்ணா விளக்கம்

கீழடி ஆய்வறிக்கை தெளிவற்றதா? - அமர்நாத் ராமகிருஷ்ணா விளக்கம்

APC News Tamil 3 weeks ago

கீழடி ஆய்வறிக்கை முழுமையான அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது என தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா விளக்கமளித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இந்திய தொல்லியல் ஆய்வு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு, தமிழகத்தின் பழமையான நகர நாகரிக வரலாற்றை வெளிக்கொண்டு வந்த முக்கிய ஆய்வாக கருதப்படுகிறது. இந்த அகழாய்வின் முதல் இரண்டு கட்ட ஆய்வுகளை மேற்பார்வை செய்த அதிகாரியான அமர்நாத் ராமகிருஷ்ணா, 2023ஆம் ஆண்டு ஜனவரியில் விரிவான ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பித்திருந்தார்.

சுமார் 982 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், கீழடியில் வாழ்ந்த மக்களின் நகரமயமான வாழ்க்கை முறை, கலாச்சாரம், விவசாயம், சமூக அமைப்பு, பயன்படுத்தப்பட்ட விலங்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விரிவாக பதிவு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அகழாய்வில் கண்டறியப்பட்ட 5,765 தொல்லியல் பொருட்கள் குறித்தும் தனிப்பட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

கீழடி நாகரிகம் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், கிமு 800 முதல் 500ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த நகர தமிழ் நாகரிகத்தின் முக்கிய சான்றுகள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆய்வு சர்வதேச அளவிலும் கவனம் பெற்றது. ஆனால், ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் அது இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணா சமர்ப்பித்த ஆய்வறிக்கை தெளிவற்றது, முழுமையற்றது மற்றும் போதுமான விளக்கங்கள் இல்லாதது என தொல்லியல் துறையின் உள் மதிப்பீட்டு குழு கருத்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, தேவையான திருத்தங்களை செய்து அறிக்கையை மீண்டும் சமர்ப்பிக்குமாறு இந்திய தொல்லியல் துறை அவருக்கு கடிதம் அனுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்த அமர்நாத் ராமகிருஷ்ணா, தனது ஆய்வறிக்கை முழுமையாக அறிவியல் மற்றும் தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என விளக்கம் அளித்துள்ளார். அறிக்கையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மதிப்பீட்டு குழுவின் விமர்சனங்கள் துல்லியமற்றவை என்றும், அவை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தயாரிக்கப்பட்டதாக தோன்றுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம், உள் மதிப்பீட்டு குழுவுக்கும் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தற்போது தொல்லியல் துறையின் நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் தேசிய பணிக்குழு இயக்குநராக பணியாற்றி வரும் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு, கடந்த மார்ச் 27ஆம் தேதி மீண்டும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், மதிப்பீட்டு குழு சுட்டிக்காட்டியுள்ள அம்சங்களை கருத்தில் கொண்டு ஆய்வறிக்கையை திருத்தி சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கு மறுப்பு தெரிவித்து அமர்நாத் ராமகிருஷ்ணா அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், "கீழடி அகழாய்வின் போது தொல்லியல் துறையின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி, தொழில்முறை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றினேன். அகழாய்வில் கிடைத்த பொருட்கள் மற்றும் தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில் பாரபட்சமின்றி முடிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "ஆய்வறிக்கையை மேம்படுத்துமாறு கூறப்பட்டாலும், அதற்கான தெளிவான காரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. விமர்சன மதிப்பீடு என்ற பெயரில் அனுப்பப்பட்ட 114 பக்க அறிக்கை தொழில்நுட்ப ரீதியாக செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்கப்பட்டதாகவே தோன்றுகிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது ஆய்வறிக்கை முழுமையான நம்பகத்தன்மை மற்றும் அறிவியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றும் அமர்நாத் ராமகிருஷ்ணா தனது கடிதத்தில் உறுதியாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களை ஏன் சந்திக்கவில்லை? – டெல்லி பயணத்தில் முதல்வர் விஜய் எடுத்த திடீர் முடிவின் பின்னணி

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil