Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

வெக அரசு 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3 ஆயிரத்து 84 ஏக்கர் திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க எடுத்துள்ள முடிவு துரதிருஷ்டவசமானது.

இந்து சமயத்துக்கு எதிரானது. இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து, தற்போது ராஜினாமா செய்துவிட்ட எம்.ஆர். விஜயபாஸ்கர், கரூரில் நடந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர்‌ ஜோசப் விஜய் முன்னிலையில் பேசிய போது, இனாம் ஒழிப்பு சட்ட நடைமுறையை, திருக்கோவில்களின் சொத்துக்களில் கொண்டு வர வேண்டும்; உழுதவர்களுக்கே நிலம் சொந்தம் என்பதாக என்று குறிப்பிட்டுப் பேசினார். குறிப்பாக கரூரில் உள்ள திருக்கோவில்களின் சொத்துக்களை ஆக்கிரமித்து கட்டியவர்களுக்கே அந்நிலம் சொந்தம் என உத்தரவிட வேண்டும் என பேசினார். அவர் பேசி முடித்தவுடன் தமிழக அரசு, அந்த நிலங்களைப் பதிய விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது. இது ஹிந்து கோவில்களுக்கு த. வெ. க‌ அரசு செய்துள்ள பச்சை துரோகம் என்ற கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

திருக்கோவில்களின் அசையா சொத்தை, அது ஒரு சிறிய அளவில் இருந்தாலும் கூட இந்து சமய‌அறநிலையத்துறைக்கே விற்க அனுமதி இல்லாத போது த.வெ.க வின் தமிழக அரசு என்ன அடிப்படையில் பத்திரம் பதிய இருந்த தடையை நீக்கி உத்திரவிட்டுள்ளது என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. எனவே ஜோசப் விஜய் தலைமையிலான தவெக., அரசு உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ALSO READ:முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

'கோவில் நிலங்களை எந்த அடிப்படையில் தனியாருக்கு பட்டா வழங்கினர் என்பது குறித்து முதல்வரும், அறநிலையத்துறை அமைச்சரும் விளக்கம் அளிக்க வேண்டும்,' என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை பீளமேட்டில் உள்ள பாஜக., அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கோரிக்கை விடுத்தார்.

கரூர் மாவட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நான்கு கோவில்களின் நிலத்தை, அவசர கதியில், அறநிலைய துறை இணை ஆணையர் பரிந்துரையில் ஒரே நாளில், தனியாருக்கு பட்டா வழங்கி உள்ளனர். கோவில் நிலங்களுக்கு எந்த அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டது என்பது குறித்து முதல்வரும், அறநிலையத் துறை அமைச்சரும் விளக்கம் அளிக்க வேண்டும். கோவில் நிலங்களை தனியாருக்கு வழங்க அரசுக்கு எந்த தகுதியும் இல்லை. கோவில் சொத்துக்களை மீட்கும் போராட்டத்தை பா.ஜ., நடத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

கரூர் கோவில் சொத்துக்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க துணியும் தவெக அரசை வன்மையாக கண்டிப்பதாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…

ALSO READ:நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

கோவிலுக்கு சொத்துக்களை தானமாக வழங்கி பக்தியை பண்பாட்டை வளர்த்தார்கள் அந்த கால ஆட்சியாளர்கள்!இந்த கால ஆட்சியாளர்கள் கோவில் சொத்துக்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு அள்ளி கொடுத்து கோவிலை அழிக்க துணிகிறார்கள் சுயநலவாத ஆட்சியாளர்கள்!

கரூரில் நான்கு பிரதான கோவில்களின் 3084 ஏக்கர் நிலங்கள் கோவிலின் பொருளாதாரம் மற்றும் கோவிலுக்கு சேவை செய்யும் மக்கள் வாழ்வதற்கு தரப்பட்டவை ஆகும். ஆனால் காலபோக்கில் அந்த அப்பாவி மக்களை ஏமாற்றி பணத்தாசை காட்டி சட்டவிரோதமாக பலர் ஆக்கிரமித்துள்ளனர். கோவிலுக்கு தொண்டு செய்தவர்களுக்கு உதவியாக கொடுத்த கோயில் நிலத்தை ஆக்கிரமித்து அனுபவிப்பவர்களுக்கும் கோவிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே ஆக்கிரமிப்புகள் தர்மத்திற்கு எதிரானது.

ஆனால் ஆக்கிரமித்தவர்கள் சொத்துக்களை சொந்தம் கொண்டாட விதித்த தடையை இந்து சமய அறநிலையத்துறை தற்போது விலக்கிக் கொண்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. அரசின் நிலத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டுள்ளது என்று 200-க்கும் மேற்பட்ட கோவில்களை இடித்த மாநில அரசு கோயில் நிலங்களை கூறுபோட்டு தாரை வார்க்க என்ன அருகதை உள்ளது.

ALSO READ:காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாநில அரசின் இந்த அநியாய செயலை உரிய முறையில் நீதிமன்றத்தில் இந்து முன்னணி எடுத்துரைத்து கோயில் சொத்துகளை பாதுகாக்க இந்து முன்னணி தொடர்ந்து போராடும். கோயில் சொத்துகள் பறிபோவதற்கு துணைபோகும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறது. கோயில் சொத்துகளை தாரைவார்க்கும் அரசின் உத்தரவை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari