Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

புறவழி பேச்சுவார்த்தை - உண்மை என்ன ?

— ராம் மாதவ் —
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

ளவியல் போர் நடவடிக்கை என்பது ராணுவம் மற்றும் உளவு துறை தந்திரங்களில் ஒன்று.

பல நாடுகள் இதை சிறப்பாக பயன்படுத்துவதில் தேர்ந்தவை. தவறான செய்திகளை பரப்புவதன் மூலம் எதிரி நாடுகளில் உள்ளவர்களை குழப்பி சந்தேகப்பட வைப்பது அதில் அடங்கும். அதற்கு சிறந்த உதாரணம் இந்தியா பாகிஸ்தானிடையே அதிகார பூர்வமற்ற, அரசு முறை சாராத, இரண்டாவது வழித்தட பேச்சு வார்த்தை கொழும்புவில் நடந்தது என்ற பொய்யான செய்தி. இது உள்நோக்கம் கொண்டவர்களால் பரப்பப்பட்டு வருகிறது.

சில அப்பாவி ஊடகங்களும், எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருக்கும் ஊடகங்களும், சில அரசியல்வாதிகளும், பல சமூக ஊடகவியலாளர்களும் அந்த செய்தியின் உண்மையை சோதிக்காமல் தங்கள் பெயரிலோ அல்லது பெயர் இல்லாமலோ விமர்சித்து வருகின்றன. அதை பரப்பி வருகின்றன.

லண்டனிலிருந்து இயங்கும் புகழ்பெற்ற அறிஞர்கள் அமைப்பு ஒரு தசாப்ததிற்கும் மேலாக தெற்காசிய மாநாட்டை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதில் சிந்தனையாளர்கள், ஓய்வு பெற்ற ராஜதந்திரிகள், ராணுவம் மற்றும் உளவுத்துறை சேர்ந்தவர்களும் அரிதாக சில அரசியல்வாதிகளும் பணியில் உள்ள அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். அந்த மாநாட்டில் தெற்காசிய நாடுகளில் இருந்து மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனாவில் இருந்தும் பலர் கலந்து கொள்வார்கள்.

அது போன்ற மாநாடுகள் இரண்டாம் வழித்தட பேச்சு வார்த்தைகளில் வராது என்று இந்திய அயலுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெளிவுபடுத்தி உள்ளார். இரண்டாம் வழித்தட பேச்சு வார்த்தை என்பது இரு தரப்பு அல்லது பல்முனை பேச்சு வார்த்தையை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக , சம்பந்தப்பட்ட அரசுகளின் மறைமுக ஒப்புதலுடன் நடத்தப்படுவது. பல நாடுகளுக்கு அதுபோன்ற பேச்சுவார்த்தை நடத்த நாம் களம் அமைத்துள்ளோம். ஆனால் இரண்டாம் வழித்தட பேச்சுவார்த்தை அரை டஜன் நாடுகள் சூழ்ந்திருக்க நடத்தப்படுவதில்லை.

மேற்சொன்ன கருத்தரங்கு இந்தியா உட்பட உலகம் எங்கும் நடத்தப்படும் வழக்கமான ஒன்று. இதுபோன்ற நிகழ்வுகளில் பல முறை கலந்து கொண்ட ஒருவர் இதைப் பற்றி மிக சரியாக 'பேச்சுக் கடைகள்' (Talk Shops) என்று குறிப்பிட்டுள்ளார். அவை ரகசிய பேச்சு வார்த்தைகள் கிடையாது. இரண்டாம் தடப்பேச்சுவார்த்தை போல் குறிப்பிட்ட நோக்கம் இல்லாதவை. அதே வேளையில் அவை திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் கொண்டதாக நடத்தப்படுபவை. அதில் கலந்து கொள்பவர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக சொல்வார்கள்.

ALSO READ:யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

வழக்கமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் மாநாடு இம்முறை கொழும்புவில் நடத்தப்பட்டது. அதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் பங்கேற்றனர். பல்வேறு தலைப்புகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதில் உரையாற்றினார்கள். நான் ஒரு அரங்கில் பேசி விட்டு கிளம்பி விட்டேன். பக்குவப்பட்ட பார்வையாளர்களுக்கு அந்த மாநாட்டில் பேசப்பட்ட விஷயங்கள் பற்றி ஆவல் எழுவது இயல்பு. ஆனால் ஏன் பேசினாய் , பேச வேண்டிய தேவை / நோக்கம் என்ன என்று கேட்பது பொருத்தமற்றது.

இந்தியா - பாகிஸ்தான் தொடர்புடைய எந்த விஷயமும் இந்தியாவில் தீவிரமான உணர்ச்சியை தூண்டக் கூடியதாக இருக்கிறது. இதுபோன்ற மாநாடுகளிலும் அது எதிரொலிக்கிறது. இந்தியாவுடன் அதிகாரபூர்வமாக தொடர்பு கொள்ள வேண்டுமென பாகிஸ்தான் மிகவும் ஆவலாக இருக்கிறது. ஆனால் இந்தியா உறுதியாக மறுத்து வருகிறது. இந்தியாவின் நிலைப்பாட்டில் இரட்டை தன்மை கிடையாது.

பாகிஸ்தான் உடனான உறவு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்து போயிருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அதை உடைத்தார். 2014 இல் தனது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பை அழைத்தார். அதன் பிறகு ஓராண்டு கழித்து லாகூருக்கு (நவாஸ் மகள் நிச்சயதார்த்தத்திற்கு) தானே சென்று நட்புக் கரம் நீட்டினார். ஆனால் கட்டுப்பாடற்ற குணம் கொண்ட அண்டை நாடு அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாமல் தனது வழக்கமான பாணியில் ஊரி , புல்வாமா பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் பதிலளித்தது. இந்தியாவில் யாருடன் மோதுகிறோம் என்று அது புரிந்து கொள்ளவில்லை. மோடி அரசு பாகிஸ்தானுடன் எல்லா விதமான நேரடி உறவையும் துண்டித்து விட்டது. அதனால் பாகிஸ்தான் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியதாயிற்று.

கிரிக்கெட் போன்று, விளையாட்டுத் துறை தவிர்த்து வேறெந்த வகையிலும் இந்தியா பாகிஸ்தானுடன் தொடர்பு கொள்வதில்லை. இது பாகிஸ்தானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா எல்லா நாடுகளுடன் ,அது சிறிதோ பெரிதோ, நல்லுறவு வைத்துக் கொண்டு பாகிஸ்தானுடன் தொடர்பு கொள்ள மறுப்பதன் மூலம் தன்னை அலட்சியப்படுத்தி, அற்பமாக நடத்துவதாக நினைக்கிறது.

ALSO READ:பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

இந்தியாவைப் பொறுத்தவரையில் மோடி தலைமையில் பெரிய நாடுகளுக்கு இணையாக நாம் வளர்ந்து வருகிறோம். இந்த நேரத்தில் மேற்குப் பக்கம் உள்ள தோல்வி அடைந்த அண்டை நாட்டுடன் இந்தியா தேவையற்ற சச்சரவை தவிர்க்க முயல்கிறது. அது மட்டுமல்ல 2025 ஏப்ரலில் பெகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தனது அரசின் கொள்கையாக வைத்து கொண்டு இருப்பதையும் அதன் மூலம் இந்தியாவை மீண்டும் மீண்டும் தாக்கலாம் என்ற அதன் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்பதும் உறுதிப் பட்டுள்ளது.

இதுபோன்ற நிலையில் பாகிஸ்தான் உடனான உறவை மீண்டும் தொடங்குவதில் இந்தியாவுக்கு அவசரமும் இல்லை ஆர்வமும் இல்லை. பெகல்காமுக்கு பிறகு இந்தியா சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு உள்ளே இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை வெற்றிகரமாக அழித்தது. இந்தியா நினைத்ததை சாதித்த பிறகு தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தது. பாகிஸ்தானுடன் இனி இதுதான் 'புதிய நடைமுறை' என்று மோடி அறிவித்து விட்டார். அது இப்போது வரை உறுதியாக தொடர்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் ஐநா பொது சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் இந்தியாவுடன் அமைதியை ஏற்படுத்த போவதாக பேசி உள்ளார். ஆனால் நடைமுறையோ வேறு விதமாக இருக்கிறது. பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் நடக்கவில்லை என்றாலும் கூட அதற்கு விழிப்போடு இருக்கும் இந்திய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையின் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளே காரணம்.

பாகிஸ்தான் வழக்கம் போல் உலகளாவிய பயங்கரவாதத்தின் விளைநிலமாகவே இருக்கிறது. பெகல்காம் தாக்குதலுக்கு காரணமானவனும் லக்சர் இ தொய்பாபின் தலைவனுமான சைபுல்லா கசூரி பாகிஸ்தானின் சுதந்திரமாக திரிவது மட்டுமல்லாமல் 'காஷ்மீர் நடவடிக்கை'யில் இருந்து பின் வாங்க போவதில்லை என்று இந்தியாவுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு உள்ளான். அவன் காஷ்மீர் விஷயத்தை 'சூடாக' வைத்திருக்க விரும்புகிறான். பயங்கரவாதத்தில் அவனுக்கு போட்டி அமைப்பான ஜெய்ஸ் இ முகம்மத் துபாயில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடப்பதற்கு சில மணி நேரம் முன்பாக கூட ஆள்சேர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

ALSO READ:திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

பாகிஸ்தான் பயங்கரவாதிகளையும் ஆயுதங்களையும் பணத்தையும் போதை பொருட்களையும் தொடர்ந்து காஷ்மீருக்குள் அனுப்பி கொண்டே இருக்கிறது. கடத்த ஆண்டு பயங்கரவாதிகளை உள்ளே அனுப்ப ஐந்து முறை முயன்றுள்ளது. அந்த முயற்சிகளை இந்திய பாதுகாப்பு படைகள் தடுத்து நிறுத்த , எட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள். உட்பகுதியில் நடந்த வேறொரு நடவடிக்கையில் 13 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன் இருவர் உயிருடன் பிடிபட்டனர்.

அந்த இருவரும் மின்னணு சோதனை சாதனங்களுக்கு சிக்காமல் இருக்க மாற்று கருவிகளை வைத்திருந்தார்கள். பாகிஸ்தானில் உள்ள அவர்களது தலைவர்களின் அறிவுறுத்தலின்படி இந்தியாவுக்குள் நீண்ட காலம் தங்கியிருந்து, இங்குள்ள இளைஞர்களுக்கு மூளை சலவை செய்து அவர்களை கொண்டு பயங்கரவாத செயல்களை நிகழ்த்த வேண்டும் என்பது அவர்களது திட்டம்.

ஆன்லைன் மூலமாகவும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்ட மூளைச்சலவை செய்து வருகிறது. அதற்காக டி ஆர் ஆர் (புரட்சிகர எழுச்சி) , ஜி யூ வி (எதிர்ப்பின் ஆன்மா) என்ற ஆன்லைன் பத்திரிகைகளை பயங்கரவாத அமைப்புகள் மூலம் நடத்தி வருகிறது. இந்திய உளவுத்துறையினர் அவற்றின் ஐபி விலாசத்தை தேடி பார்க்க அவை அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து செயல்படுவது தெரிய வந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை செய்வதும் அமைதியை சீர்குலைப்பதும் காஷ்மீரை பிரிக்க வேண்டுமென தூண்டுவதும் அவற்றின் முக்கிய நோக்கம்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலையற்ற அமைதி உடன்படிக்கைக்கு மேடை அமைத்ததால் பாகிஸ்தான் தன்னை அமைதி தூதுவனாக பீற்றிக்கொள்ள முயல்கிறது. ஆனால் அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

கட்டுரையாளர், தில்லியில் உள்ள இந்தியா பவுண்டேசனின் தலைவராக இருக்கிறார். பாஜகவைச் சேர்ந்தவர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari