Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

மக்கள் மனங்களை ஈர்த்த 'நீண்ட கால' ஒரே பிரதமர்!

— சர்மிஸ்தா முகர்ஜி —தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

மோடி பற்றி பிரணாப் முகர்ஜி

நீண்ட காலம் இந்திய பிரதமராக இருந்தது யார் என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் 2014 ல் பிரதமர் மோடியின் அமோக வெற்றியை பற்றி எனது தந்தை (அமரர்) பிரணாப் முகர்ஜி என்னிடம் கூறிய சுவாரஸ்யமான விஷயம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

அப்போது அவர் இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக இருந்தார். வெவ்வேறு அரசியல் கருத்தியலைச் சார்ந்தவர்களாக இருந்த போதிலும் அவர்கள் இருவரிடையே சீரிய நல்லுறவு இருந்தது. அதுதான் உண்மையான ஜனநாயகத்தின் அடையாளம்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மோடிஜி என் தந்தையை சந்திக்க ராஷ்டிரபதி பவனுக்கு வந்தார். பேச்சுவாக்கில் என் தந்தை தேர்தலை பற்றி அவரது கருத்தை கேட்டார். அதற்கு அவர், 30 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் ஒரு அரசியல் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது, என்றார். பிறகு தனக்கேவுரிய சாதுரியத்துடன் என் தந்தை 'வேறென்ன?' என்று கேட்டார் . மோடி அமைதியாக இருந்ததை கண்டு என் தந்தை, நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் 2014 முக்கியமானது. அது ஒரு புதிய முகத்தை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது, என்றார்.

2014 ல் பெரும்பான்மை பலத்தை மக்கள் பாஜகவுக்கு அளித்தது மட்டுமன்றி மோடி இந்திய பிரதமராக வேண்டும் என்று நேரடியாக வழங்கப்பட்ட வெற்றியாகும். மற்ற தேர்தலைகளை போல - பிரதமர் இவர்தான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் ஆனால் ஒரு மாதிரியாக புரிந்து கொள்ளப்பட்டதோ அல்லது வெற்றிபெற்ற உறுப்பினர்கள் பிரதமரை தேர்ந்தெடுக்கும் வழமை போலோ அல்லது தேர்தலுக்கு பின்னர் நடக்கும் கூட்டணி கணக்கோ - இல்லாமல் நேரடியாக வழங்கப்பட்ட மக்கள் தீர்ப்பு அது.

மோடிக்கு முன்பு பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் எப்போதும் மக்கள் தலைவராக இருந்தவர் இல்லை. மாறாக அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் தெரிந்தெடுக்கப்பட்டவர். பி வி நரசிம்மராவ் , தேவ கௌடா ஆகிய இரண்டு பேரும் பிரதமரானபோது அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக கூட இல்லை. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் மூத்த அரசியல்வாதிகள் பிரதமரானார்கள். இந்திய அரசியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது 2014 தேர்தல். சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் மக்கள் மோடியை தங்கள் பிரதமராக தேர்ந்தெடுத்தனர். ஏறத்தாழ அது 'ஜனாதிபதி மாடல் தேர்தல்' போலிருந்தது.

ALSO READ:இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

2014 தேர்தலுக்கு முன்பு வரை மோடி தேசிய அரசியலுக்கு புதியவர். மிக நீண்ட காலம் அவர் குஜராத்தின் முதல்வராக இருந்தார். அதனால் தனக்கென ஒரு ஒளிவட்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர். ஆனால் 2014 தான் அவரது முதலாவது நாடாளுமன்ற தேர்தல். முதல்முறையாக உறுப்பினரான போதே பிரதமராக நாடாளுமன்றத்தில் நுழைந்தது ஒரு முன்மாதிரி. அதற்கு முன்பு யாரும் செய்யாதது. நாடாளுமன்ற (பழைய) கட்டடத்துக்குள் அடி எடுத்து வைத்த போது அவர் அதை உணர்வுபூர்வமாக வணங்கியது கோடிக்கணக்கான இந்தியர்களின் நெஞ்சை தொட்டது.

தேர்தலில் வெற்றி பெறுவதென்பது தனி மனித சாகசமாக எப்போதும் இருந்ததில்லை. அது பற்பல அம்சங்கள் கொண்ட சிக்கலான நடைமுறைகளையும் செயல்பாடுகளையும் கொண்டது. அடிமட்டத்தில் ஊக்கத்துடன் செயல்படும் கட்டமைப்பு பாஜகவுக்கு உள்ளது. வெவ்வேறு ஜாதிகள், சமூக குழுக்களை தொடர்ந்து அணுகக் கூடிய யுக்தியும் அதற்கு உண்டு. தவறுகளை விரைவாக கண்டறியவும் அவற்றை உடனடியாக சரி செய்து கொள்ளும் பழக்கமும் அதற்கு உள்ளது. இவையெல்லாம் அந்த கட்சியை தேர்தல் வெற்றிப்பாதையில் கொண்டு சேர்த்தது. அது மட்டுமல்ல இப்போது அந்த வெற்றிப் பயணம் யாருடைய குறுக்கீட்டினாலும் தடைபடாமல் தொடரும் என்று உறுதியாக தெரிகிறது.

ALSO READ:விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

இருந்தாலும், பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணம் மோடி என்பது மறுக்க முடியாத உண்மை. அவர் அடிமட்டத்திலிருந்து தன் கடின உழைப்பாலும் தகுதியாலும் உயர்ந்து வந்த உறுதியான தலைவர் என மக்கள் நினைக்கிறார்கள். காங்கிரசை போன்று வாரிசு உரிமையாக அல்ல. அதிகாரம் குடும்பத்தின் இறுகிய இரும்பு பிடியில் இருக்கும் மாநில கட்சிகளைப் போல் அல்ல. உழைப்பால் உயர்ந்த நிலையை எட்டியவர் என்று கருதுகிறார்கள்.

ஒருவகையில், பாஜகவும் மோடியும் ஒன்றுதான் என்றாகி விட்டது. அண்மையில் நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில தேர்தல் தொடர்பாக என் நண்பர்களுடன் நடந்த பேச்சுக்களை இங்கு சொல்கிறேன். என்னுடைய உறவினர்கள் பலரும் இன்றும் வெறிபிடித்த காங்கிரஸ் ஆதரவாளர்கள்தான். காங்கிரசுக்கு அந்த மாநிலத்தில் உள்ளது வெறும் 2.9 சதவீத வாக்குகள்தான். எனது உறவினர்களின் பங்களிப்பும் அந்த வாக்கு சதவீதத்துக்குள் அடக்கம்.

என்னுடைய நண்பர்கள் பலரும் தெரிந்தவர்கள் அநேகரும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளார்கள். தேர்தலுக்கு முன்பு அவர்களிடம் எந்த கட்சிக்கு ஓட்டு போட போகிறீர்கள் என்று கேட்டேன். எல்லோரும் 'மோடி'க்கு என்றார்கள். இது மாநில தேர்தல், இதில் மோடி போட்டியிடவில்லை என்று நான் அவர்களுக்கு நினைவூட்டினேன் . 'எல்லாம் ஒன்னுதான்' என்பது அவர்களின் பதிலாக இருந்தது.

இந்தியாவில் நீண்ட காலம் பதவியின் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடிதான். சுதந்திரத்திற்குப் பிறகு இந்த நாடு கண்ட உறுதியான பிரதமரும் அவர்தான். கூட்டணி பேரம், ஆட்சி கவிழ்ப்பு அச்சுறுத்தலுக்கு விழுந்து விடாமல் வலிமையான, நிலையான கூட்டணி அரசை அவர் நடத்தி வருகிறார். இத்தனைக்கும் இந்த அரசு கூட்டணி கட்சிகளின் ஆதரவை சார்ந்தே இருக்கிறது.

ALSO READ:முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அவருடைய கொள்கைகள் சிலவற்றைப் பற்றியும் மற்றும் அவர் செயல்படும் விதம் குறித்தும் எவருக்கும் முரண்பட்ட கருத்து இருக்கலாம். அது ஜனநாயகத்தில் ஏற்புடையதுதான். ஆனால் மக்களிடையே அவருக்குள்ள ஈர்ப்பு , எழுச்சிமிகு இந்தியாவை உருவாக்க வேண்டும் என இந்திய வாக்காளர்கள் இடையே அவர் ஏற்படுத்தி உள்ள உத்வேகத்துடன் கூடிய பிணைப்பு ஆகியவற்றை எவரும் மறுக்க முடியாது. அது 2019 லும் 2024 லும் வெளிப்பட்டுள்ளது.

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக அவரது செயல்பாடுகள் இருக்க வேண்டுமென்றும் நம் தேசம் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்றும் ஒரு சாதாரண குடிமகளாக நான் பிராத்திக்கிறேன்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்


கட்டுரையாளர் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள். எழுத்தாளர்.
தற்போது பிரணாப் முகர்ஜி லெகசி பவுண்டேசனை நடத்தி வருகிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari