Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

மிழகத்தின் மிக முக்கியமான பிரச்னைகள் என்று மூன்றைச் சொல்லலாம்.

  1. ஆலய ஊழல்
  2. திரையுலக ஊழல்
  3. டாஸ்மாக் ஊழல்.

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது.

உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

வாக்களிக்கும் மக்கள் பக்திமான்கள். தேர்ந்தெடுக்கப்படும் அரசு பக்தி விரோத அரசு.

அதிலும் தென்னிந்தியாவில் மட்டுமே அரசின் முழு கட்டுப்பாட்டில் ஆலயங்கள் இருக்கின்றன. வடக்கில் ஆலயங்களின் உரிமை அறக்கட்டளைகளிடம் இருக்கிறது என்பது ஒரு மேலோட்டமான விஷயம்தான் என்றாலும் ஒப்பீட்டளவில் அரசின் கெடுபிடிகள் அங்கு குறைவு.

இதில் தமிழகத்தின் நிலைமைதான் மிக மிக மோசம். பிரிட்டிஷ் காலத்தில் தெளிவான திட்டமிடலுடன் ஆரம்பிக்கப்பட்டு காலப்போக்கில் முழுவதுமாக அழுகி நிற்கும் துறை.

பக்தர்களுக்கு இதில் பெரிய குறை எதுவும் இல்லை. லெளகிக சுய நலத் தேவைகளே பிரதானமாகிவிட்டால் மத உணர்வுகள் மழுங்கித்தானே போகும்.

இந்து அற நிலையத்துறையின் கணக்கு வழக்குகளை பொதுவான ஆடிட்டர்கள் தணிக்கை செய்யமுடியாதென்பது மிஷனரீஸுக்கு வரிவிலக்கு… வக்ஃப் போர்டுக்கு நீதித்துறைக்கும் மேலான அதிகாரம் என்பதையெல்லாம் விட மோசமான சட்டம். அதிலும் நாத்திக, மதச்சார்பற்ற அதாவது இந்து விரோத அரசிடம் இந்து மத நிறுவனத்தை ஒப்படைத்துவிட்டு அது பற்றி எந்தத் தணிக்கையும் செய்யவும் மாட்டேன் என்பது திருட்டு நடக்கும் இடத்துக்கு காவலர்கள் நுழையக்கூடாது என்று சொல்வதற்கு சமம்.

சமூக நீதி காக்கும் அரசு இந்து மத நிறுவனங்களில் சமூக நீதியை நிலைநாட்டவே அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். கிறிஸ்தவ, இஸ்லாமிய மத நிறுவனங்களிலும் அந்த சமுக நீதியை நிலைநாட்டும் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு அல்லவா?

கருவறைக்குள் அர்ச்சக குலத்தினரைத் தவிர வேறு நபர்கள் நுழையக்கூடாதென்பது சமத்துவ மறுப்பு என்று சொன்னால் அதை நீக்க நிச்சயம் போராடலாம். பெண்கள் மசூதிகளுக்குள் வரக்கூடாது; சர்ச்களில் பாவமன்னிப்பு வழங்கக்கூடாது என்பதையும் எதிர்த்துப் போராடவேண்டும்.

ALSO READ:கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

சமூக நீதியை நிலைநாட்டுவதென்றால் கணக்கு வழக்குகள், சொத்து நிர்வாகம் ஆகியவை எதற்கு? கணக்கு வழக்குகளில் முறைகேடு நடக்காமல் இருக்க முறையான தணிக்கைக்கு உட்படுத்தினாலே போதும்.

உண்மையில் ஏதேனும் கோவிலில் கணக்கு வழக்கு தொடர்பான பிரச்னைகள் இருந்தால் ஓரிரு ஆண்டுகளில் தீர்த்துவிட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் சட்டமே. அதைச் செய்யாமல் இருப்பது, ஒருவர் வீட்டில் நடக்கும் சண்டையைத் தீர்க்க வரும் காவலர் அந்த வீட்டிலேயே ஒரு அறையில் தங்குவது போன்ற அராஜகம்.

இதில் மிகப் பெரிய வேதனை என்னவென்றால் இந்துக்களின் நலனைக் காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் பாஜக இந்த விஷயத்தில் மிகவும் மெத்தனமாக இருந்துவருகிறது.

முதலாவதாக, நாளைக்கே இந்த அறநிலையத்துறை சட்டத்தை மத்திய அரசு சிறப்புத் தீர்மானம் கொண்டுவந்து ரத்துசெய்யமுடியும். அல்லது இதில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக ஆயிரம் வழக்குகள் தொடுக்கமுடியும். அத்தனையிலும் நரேந்திரமோதியே ஆஜராகி வாதிட முடியும். வாதிட வேண்டும்.

வேதாரண்யம் கோவிலின் உப்பளங்களில் இருந்து ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வரவேண்டும். ஆனால் மத்திய அரசு நிறுவனம் வெறும் ஐந்தயிரம் ரூபாய் மட்டுமே தருகிறது. மத்திய அரசு செய்துவரும் முறைகேட்டை நாளை வரை கூடக் காத்திருக்கவேண்டாம். இன்றைக்கே சரி செய்யமுடியும்.

கோவில் நிலங்களுக்கு முறையாக வாடகை வசூலித்தால் ஆண்டுக்கு 6,000 கோடி வருமானம் வரும் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையென்றால் போர்க்கால அடிப்படையில் பாஜக அரசு சரிசெய்யவேண்டிய முதல் பிரச்னை இதுவே.

500 சொச்ச சமஸ்தான மன்னர்களை பாரதத்துடன் சேரும்படிச் சொன்னபோது கொடுத்த வாக்குறுதிகளைக் கைவிட்டது மாபெரும் துரோகமென்றால், இந்து ஆலயங்களை இதுபோன்ற இந்து விரோத நவீன மன்னர்கள் வசம் ஒப்படைத்தது மன்னிக்கவே முடியாத அநீதி.

இந்து ஆலயங்களை மீட்டெடுப்பது என்ற ஒற்றை இலக்குடன் களம் இறங்கினால் மட்டுமே தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியும். அப்போது மட்டுமே அது பாஜகவின் வெற்றியாக இருக்கும்.

தமிழக மக்கள் திரைப்பட கவர்ச்சியில் சிக்கியிருப்பவர்கள். எதிரிகள் வெகு தெளிவாக திரையுலகப் பிரபலங்களைக் கொண்டே தமது அத்தனை அஜெண்டாக்களையும் நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.

நாம் வெகு தெளிவாக மக்களுக்கு நெருக்கமான அந்த துறையைக் கையில் எடுக்கவே மாட்டோம் என்று சத்தியம் செய்துகொடுத்திருக்கிறோம். நம்மால் அது முடியாது என்பது உண்மையே. ஆனால் திரை உலகம் போல் கறுப்புப் பணப்புழக்கமும் வரி ஏய்ப்பும் பாலியல் சுரண்டலும் நிறைந்த துறை எதுவுமே இல்லை.

ALSO READ:மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

வரி ஏய்ப்பை ஒழித்தல் என்ற வகையில் கூட முதலில் சீர்செய்யப்படவேண்டிய துறை திரையுலகமே. நம் எதிரிகளின் கோட்டையாக அது இருக்கும் நிலையில் நம் முதல் தாக்குதல் இலக்குகளில் ஒன்றாக அதுவே இருக்கவேண்டும்.

சாராயக்கடைகளைப் பொறுத்தவரையில் மூன்று முக்கிய கோணங்கள் இருக்கின்றன.

முதலாவதாக, குடித்து அழிவதில் பெரும்பாலானவர்கள் இந்துக்களே. கடைநிலை ஜாதியினரே.

இரண்டாவதாக உற்பத்திச் செலவு ரூ 30 என்றால் விற்கும் விலையோ 180. கொள்முதல் விலையோ தங்க மலை ரகசியம். 21-ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பமும் இன்ன பிற வரி, நிதி மற்றும் நிறுவன விதிமுறைகள் எல்லாம் தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலையிலும் கண் முன்னே தினமும் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்படுகிறது.

100 பாட்டில் கணக்கு காட்டினால் ஆயிரம் பாட்டில்கள் அநாமத்தாக விற்பனையாகின்றன. கள்ள நோட்டை அச்சிட்டு அரசே விற்பது போன்ற ஒரு அயோக்கியத்தனம். மை நஹிம் பியூங்கா… நஹிம் பினேதூங்கா என்பது அவரின் கொள்கையில்லை. எனவே இதைக் கண்டுகொள்வதே இல்லை போலிருக்கிறது.

மூன்றாவதாக, இந்துவாக, தமிழராக வள்ளுவரின் பூமியில் வள்ளுவரின் பெயரை முன்வைக்கும் அரசில் இப்படியாக அரசே சாராயம் விற்பதென்பது மிக மிகக் கேவலம். சங்க காலத்தில் கள் புழக்கத்தில் இருந்தது. ஆனால் மன்னர்கள், கள் இறக்கி விற்கவில்லை. குடிப்பது வேறு… ஊற்றிக் கொடுப்பது வேறு. பார் டான்சர் ஊற்றிக் கொடுக்கலாம். கன்யாஸ்த்ரீ ஊற்றிக் கொடுக்கக்கூடாது. அன்னை ஊற்றிக் கொடுக்கக்கூடாது.

வருத்தத்துடன் சொல்வதென்றால் தமிழகத்தில் அதிக செல்வம் கொழிக்கும் இடங்கள் இரண்டு. ஒன்று ஆலயங்கள். இன்னொன்று சாராயக்கடைகள்.

சங்க காலத்தை எடுத்துக்கொண்டால், கள் அருந்துவது தொடர்பாக எந்தவித ஒழுக்கத் தடைகளோ நெருக்கடிகளோ இருந்திருக்கவில்லை. அளவோடு குடித்தால் நஞ்சும் அமிர்தமே.

பக்தியும் ஒரு போதை; கள்ளும் ஒரு போதை. ஒடுக்கப்படுபவர்களின் வேதனைகளை மறக்கடிக்கும் அபின் தானே மதம். நம்மவர்களுக்கு இரண்டு போதையுமே தேவையாக இருக்கிறது.

பிரச்னை எங்குவருகிறதென்றால் இந்த இரண்டிலும் நடக்கும் கல்வாரி மலையினும் பெரிய ஊழல். அது இந்து தேசத்தை மதம் மாற்றி வீழ்த்தத் துடிக்கும் சக்திகளின் கைகளில் கொத்தாகச் சென்று குவிகிறது.

ALSO READ:சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

மிகவும் எளிய அரசியல் பாடம் தான்.

எது மக்களுடைய மனதுக்கு நெருக்கமாக இருக்குமோ எது நேச சக்திகள் அனைவரையும் ஓரணியில் திரள வழிவகுக்குமோ எது எதிரிகளைத் தெளிவாக அடையாளம் காட்டுமோ அந்த விஷயங்களைத்தான் முதலில் கையில் எடுக்கவேண்டும்.

ஆலயச் சுரண்டல் மற்றும் சனாதன அழித்தொழிப்பு என்பது உச்சத்தில் இருக்கும் மாநிலத்தில் இந்து கட்சிகள் முன்னெடுக்கவேண்டிய முதல் போராட்டம் ஆலய மீட்புதான்.

கலை சுதந்தரம் என்ற பெயரில் கருத்துத் திணிப்பும் இந்து தர்ம இந்திய தேசிய அவதூறும் கொடிகட்டிப் பறக்கும் துறையை ஒடுக்க உணவில் உப்பு போட்டுச் சாப்பிட்டாலே போதும்.

சாரய ஊழலை ஒழிப்பதும் அரசு அதிலிருந்து வெளியேறுவதும் சனாதனம் போன்ற உன்னத கலாசாரத்தின் வாரிசுகள் உடனே செய்ய வேண்டிய வேலை.

இந்த மூன்றிலும் நடக்கும் ஊழல் நினைத்தே பார்க்க முடியாதது. மூன்றுமே எதிரிகளின் பிரதான ஆயுதக் கிடங்கு மற்றும் பொக்கிஷக் கருவூலம்.

ஆக எதிரியின் கோட்டைகளைத் தகர்க்கவே மாட்டேன். அதன் பக்கம் கூடப் போகவே மாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டு போரில் இறங்கியிருக்கும் பாஜக உண்மையில் யாருக்காக இங்கு அரசியல் செய்துவருகிறது?

ஆலயச் சுரண்டல், மதுபான ஊழல், கலை, கருத்துச் சுதந்தரப் போர்வையிலான காட்சி ஊடக அவதூறுகள் இவற்றையெல்லாம் இந்து எழுச்சி என்ற கோணத்தில் அணுக மதச்சார்பற்ற பாஜகவுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவரையும்சமமாக நடத்துதல், காங்கிரஸ் முக்த் அதாவது கரெப்ஷன் முக்த் பாரத், நேர்த்தியான நிர்வாகம் என்ற அடிப்படையிலாவது இந்த மூன்றிலும் இருக்கும் முறைகேடுகளை ஒடுக்க முன்வரலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari