Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆசிரியர் - கலைமகள்

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள சிவ சைலம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது அருள்மிகு சிவசைல நாதர் திருக்கோயில். ஸ்ரீ பரம்பகல்யாணி ஸமேத ஸ்ரீ சிவசைலநாதர் இத்திருக்கோயிலில் எழுந்தருளி அன்பர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். மேற்கே பார்த்த கோயில் இது என்பதில் தனி சிறப்பு உடையது!!

பொதுவாக சிவ ஸ்தலங்களில் சுவாமி மேற்கே பார்த்து இருந்தால் அம்மாள் அனேகமாக வடக்கு முகமாக அன்பர்களுக்குக் காட்சியளித்து அருள் பாலிப்பார். ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையில் அத்திரி கூடத்தில் ஆசிரமம் அமைத்து சிவபூஜை செய்து வரும் அத்திரி மகரிஷிக்குக் காட்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் தனித்தனி சந்நிதிகளில் மேற்கே பார்த்து அமர்த்தபடி காட்சி கொடுக்கிறார்கள் என்பது ஐதீகம்!

ALSO READ:மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

பங்குனி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா, ஆழ்வார்குறிச்சியில் நடைபெறுகிறது. பங்குனி கடைசி நாள் அன்று தேர்த் திருவிழா நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள் இருவரும் தனித்தனி தேர்களில் வீதி வலம் வருவார்கள்.

ஆழ்வார்குறிச்சி, சிவசைலம், கீழாம்பூர் மற்றும் சுற்று வட்டார மக்கள் கூடி சுவாமி தேரை நிலைக்குக் கொண்டு வருவார்கள். அம்பாள் தேரை சுற்று வட்டாரப் பெண்கள் மட்டுமே இழுத்து நிலைக்குக் கொண்டு வருவார்கள் என்பது இக்கோயில் திருவிழாவின் சிறப்பு அம்சம்.

சித்ரா பௌர்ணமி அன்று சிவசைலம் கோயிலில் சிறப்பு வழிபாடு ஒன்று நடைபெறுகிறது. சிவசைலநாதரும் பரமகல்யாணி அம்பாளும் ஒரு சப்பரத்தில் கொலு வீற்றிருந்து கோயிலுக்கு வெகு அருகில் உள்ள கடனா நதி தீர்த்த வாரி மண்டபத்திற்குக் கொண்டு வரப்படுகிறார்கள். அங்கே தீபாரதனைகள் நடைபெறும்.

பின்னர் சிவசைலநாதரும் பரமகல்யாணி அம்பாளும் பக்தர்களுடன் சேர்ந்து மீன்பிடிக்கக் கிளம்புகிறார்கள். மீன்பிடிப்பு திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று கடனாநதியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மீன் விளையாட்டு என்பது ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது!

ALSO READ:திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

மீன்பிடிப்பு திருவிழா முடிந்த பின்னர் இருவரும் அத்திரி மகரிஷிக்குக் காட்சி கொடுக்கிறார்கள். இந்த ஆண்டும் இந்த விழா மிகச் சிறப்பாக சிவசைலம் கடனாநதிக் கரையில் நடைபெற்றது. பல நூறு வருடங்களாக நடைபெற்று வரும் இந்தத் திருவிழாவை ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் நடத்தி வருகிறார்கள்.

மீன்பிடிப்பு திருவிழா என்பது, பாண்டிய நாட்டில் பல ஊர்களில் நடைபெற்று வரும் திருவிழாதான். விவசாயம் செழிக்க வருண பகவான் கோடைக்கு விடை கொடுத்து மழை அருள வேண்டும் என்பதற்காக இந்தத் திருவிழா பன்னெடுங்காலமாக விவசாயத்தைச் சார்ந்த பகுதிகளில் பாண்டிய நாட்டில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

முழுமையான ஈடுபாட்டுடன் இறைவனை வணங்கினால் புழுவாகவோ பூச்சியாகவோ மீனாகவோ இருந்தாலும்கூட இறைவன் கீழ் இறங்கி வந்து அருள் பாலிப்பான் என்பது இந்த வைபவத்தின் சூட்சுமம்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி! எந் நாட்டவற்கும் இறைவா போற்றி!!
ஸ்ரீ சிவசைலபதி ஸ்ரீ பரமகல்யாணி அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
ஓம் நமச்சிவாய!

ALSO READ:ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari