டெல்லியில் நடைபெற்ற 8வது ஊதிய வரைவுக் குழுவின் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 69,000 ரூபாயாக உயரப் போவதாக தெரிகிறது. அதை பற்றின உறுதியான செய்தி அறிவிக்கப்படாவிட்டாலும், அதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வலம் வந்தவண்ணம் உள்ளன.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைப்பதற்காக 8-வது ஊதியக் குழுவின் ஆலோசனைக் கூட்டங்கள் டெல்லியில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. கூட்டுக் குழுவின் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா தலைமையில் இப்போதுகூட உயர்மட்டக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்துப் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
8வது ஊதிய வரைவுக் குழுவின் கூட்டம்
அந்தவகையில், எப்.என்.பி.ஓ. அமைப்பு கொடுத்துள்ள புதிய வரைவு அறிக்கையின்படி, அரசுப் பணியில் சேரும் ஆரம்ப நிலை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 18 ஆயிரம் ரூபாயில் இருந்து 54 ஆயிரம் ரூபாயாக உயர வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.
அதுமட்டுமில்லாமல், உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளின் சம்பளம் 8 லட்சம் ரூபாய் வரை உயரலாம் என்றும், வருடந்தோறும் வழங்கப்படும் 3 சதவீத ஊதிய உயர்வை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மாத மருத்துவ படி 20 ஆயிரம் ரூபாய்
அதேபோல மாத மருத்துவ படியை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவது, ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தந்து வரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மறுபடியும் கொண்டு வருவது போன்ற மிக முக்கியமான விஷயங்களும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயில் இருந்து 69,000 ரூபாயாக உயரப் போகிறது என்று ஒரு குட்நியூஸ் பரவி வருகிறது. சுமார் 1.2 கோடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் பேசப்படும் இந்த 69,000 ரூபாய் என்பது அரசாங்கம் அறிவித்த அதிகாரப்பூர்வ முடிவு கிடையாது.
"பிட்மென்ட் பேக்டர்"
உண்மையில், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, புதிய சம்பளத்தை கணக்கிட உதவும் "பிட்மென்ட் பேக்டர்" என்ற காரணியை 3.83 ஆக உயர்த்த வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த கோரிக்கையின்படி கணக்கிட்டுப் பார்த்தால் மட்டும்தான், அடிப்படைச் சம்பளம் 69,000 ரூபாய் என்று வரும். ஆனால், இந்த அளவுக்கு சம்பளத்தை உயர்த்தினால் அரசுக்குக் கூடுதல் நிதிப் பொறுப்பு ஏற்படும் என்பதால், நிதி நிபுணர்களின் கணிப்புப்படி இந்த காரணி 2.0 முதல் 2.1 என்ற அளவிலோ அல்லது கடந்த முறை இருந்தது போல 2.57 என்ற அளவிலோதான் அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
வீட்டு வாடகைப்படி
ஒருவேளை அடிப்படை சம்பளம் சங்கங்கள் எதிர்பார்த்த 69,000 ரூபாய் அளவு உயராவிட்டாலும் கூட, ஊழியர்களின் கைக்கு வரும் ஒட்டுமொத்த மாதச் சம்பளம் கணிசமாக உயரப் போகிறது. ஏனென்றால், புதிய ஊதியக் குழுவின் கீழ் வீட்டு வாடகைப்படி (HRA), போக்குவரத்துப் படி (TA) மற்றும் ஓய்வூதியப் பலன்கள் அனைத்தும் இந்த புதிய கணக்கீட்டின்படி மாற்றியமைக்கப்பட உள்ளன.
குறிப்பாக, இப்போதைய நகரங்களின் வாழ்க்கை செலவுகளுக்கு ஏற்ப வீட்டு வாடகைப்படியை (HRA) மாற்றி அமைக்கக் குழு திட்டமிட்டுள்ளது. இதனால் ஆரம்ப நிலை ஊழியர்களின் ஒட்டுமொத்த மாதச் சம்பளம் சுமார் 65 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
அரசு ஊழியர்கள் சம்பளம்
தற்போது ஊதியக் குழுவின் கட்டமைப்பிலேயே சின்ன சின்ன மாற்றங்களை செய்து புதிய சம்பளத்தை வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் உள்ள பல்வேறு சங்கங்களின் கருத்துக்களைக் கேட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த 8-வது ஊதியக் குழு 2026 ஜனவரி 1 முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த வரைவுக் குழுவின் இறுதி அறிக்கை மத்திய அமைச்சரவைக்குச் சென்று ஒப்புதல் பெற இன்னும் 2 ஆண்டுகள் வரை ஆகலாம். அதனால் புதிய சம்பளம் ஊழியர்களின் கைக்குக் கிடைக்க சிறிது காலம் எடுக்கும் என்றாலும், முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் பட்சத்தில் விடுபட்ட காலத்திற்கான நிலுவைத் தொகை ஊழியர்களுக்கு முழுமையாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!!!

