தமிழக முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க வரும் 10 ஆம் தேதி பிரிட்டன் செல்கிறார். முதல்வர் விஜய்யுடன் தொழில்துறை அதிகாரிகளும் பிரிட்டன் செல்கிறார்கள்.
முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். முதல்வரான பின் முதல்முறையாக விஜய் வெளிநாடு பயணிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வராக கடந்த மே மாதம் 10 ஆம் தேதி பொறுப்பேற்ற விஜய், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தின் தொழில் முதலீடுகளை பெருக்கவும் அதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
இதில் 1 லட்சம் கோடிக்கு மேலான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அடுத்த கட்ட முயற்சியாக முதல்வர் விஜய் பிரிட்டன் செல்ல முடிவு செய்துள்ளார். வரும் 10 ஆம் தேதி விஜய் பிரிட்டன் செல்ல உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
முதல்வர் விஜய்யுடன் தொழில் துறை அதிகாரிகளும் பிரிட்டன் செல்ல இருக்கிறார்கள். தொழில் துறை அதிகாரிகள் வரும் 16 ஆம் தேதி வரை பிரிட்டனில் சுற்றுப் பயணம் செய்து முதலீட்டாளர்களை சந்தித்து முதலீட்டாளர்களை தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளனர். முதல்வர் விஜய் எத்தனை நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பார் என்பது உள்ளிட்ட விவரங்களை தமிழக அரசு பயணத்திற்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிடும் எனத்தெரிகிறது.
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக விஜய் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்ய இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா, கர்நடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பரந்தூர் விமான நிலைய திட்ட பணிகளை தமிழக அரசு கைவிட்டது, தொழில் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்று அத்துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரித்து வரக்கூடிய நிலையில் முதல்வரின் இந்த பிரிட்டன் பயணம் முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது.
தைவானில் இந்த வாரம் செமிகான் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் செமி கண்டக்டர், ஏஐ, சிப் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த நிறுவனங்களின் முதலீட்டை ஈர்ப்பதற்காக தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு பங்கேற்க உள்ளனர். வரும் 4 ஆம் தேதி இந்த மாநாடு நடைபெறுகிறது.

