Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கார்த்திக் சுப்புராஜ் படங்களில் ' டோரத்தி' பெஸ்ட்!

கார்த்திக் சுப்புராஜ் படங்களில் ' டோரத்தி' பெஸ்ட்!

Fnewsnow 16 hrs ago

மதுரைப்பக்க கிராமம் ஒன்று. ஆணாதிக்க மனநிலை , பெண்களை அடிமைகளாக நடத்தும் இயல்பு, மற்றும் சாதி வெறி பிடித்த கரடு முரடு பெரிய மனிதரான விசில் வீரய்யாவுக்கு ( முத்துக்குமார்) இரண்டு மகன்கள் (சண்முக ராஜா , சனந்த்).

விசில் வீரய்யாவின் மனைவியும் , மகள் ஒருத்தியும் போட்டோவில் மட்டுமே இருக்கிறார்கள்.

இளைய மகன் சுப்புவும் (சனந்த்) சாதியில் சற்று குறைந்த, எளிய குடும்பத்துப் பையன்

கார்த்திக்கும் (ரிஷிகாந்த் )பள்ளி வயது வயது முதலே நண்பர்கள் . சுப்பு, அப்பா மற்றும் அண்ணன் போலவே அடிதடி ஆள்.

கார்த்திக் பயந்த சுபாவி. கார்த்திக் தனது சாதிப் பெண்ணை கார்த்திக் காதலிப்பது தெரிந்து உதவி செய்வது போல நம்ப வைத்து அதை கெடுக்கிறார் வீரய்யா . எனினும் சுப்பு, கார்த்திக் இருவரின் நட்பு மாறவில்லை .

சுப்புவுக்கு உயிராபத்து ஏற்படும்போது கார்த்திக் காப்பாற்றுகிறான் . சுப்பு ஒரு பெண் மீது ஆசைப்பட்டு இருக்கிறான் என்று உணர்ந்து இருக்கிறான் கார்த்திக்,

இந்த நிலையில் , டோரதி என்ற ஒரு கேரளப் பெண்ணை (கீர்த்தி சுரேஷ்) திருமணம் செய்து கொண்டு வருகிறான வீரய்யாவின் மூத்த மகன் . வீரய்யா மனைவி மகள் எப்போதோ இறந்த நிலையில் அந்த வீட்டுக்குள் மீண்டும் ஒரு பெண் .

அண்ணன் மனைவி டோரதியிடம், சுப்பு நெருங்கிப் பழகுகிறான். அவளோடு சமையல் செய்கிறான். காய்கறி நறுக்குகிறான். துணி துவைக்கிறான் . தன் அம்மா சகோதரி பற்றி எல்லாம் பேசுகிறான். அவனுக்கு டோரதி மிகவும் ஆறுதலாக இருக்கிறாள்.

இது வீரய்யா மற்றும் பலரின் கண்களை உறுத்த, ஒரு நாள் டோரதி அடித்துக் கொலை செய்யப்பட்டு தொங்க விடப்பட்டு இருக்கிறாள், தற்கொலை என்று போலீஸ் கேஸை முடிக்கிறது.

ஆனால் சுப்புவால் டோரதியை மறக்க முடியவில்லை.

தவிர இன்னொரு பெண்ணின் வீட்டுக்குள் அவன் நுழைந்து அந்தப் பெண்ணை அவன் கட்டிப் பிடித்துக் கொண்டு இருப்பதை அவள் குடும்பத்தார் பார்த்து அந்தப் பெண் அவள் வீட்டில் அடிவாங்குகிறாள் .

அப்படி டோரதி கொலை செய்யப்படும் அளவுக்கு டோரதிக்கும் சுப்புவுக்கும் என்ன உறவு என்பதில் வழக்கமான ஊகங்களை ஏற்படுத்தி , சற்றும் எதிர்பாராத ஒரு வித்தியாசமான கதையை சொல்லியதோடு , சரியான தொழில்நுட்பக் குழு தனது சிறப்பான கிரியேட்டிவிட்டி மற்றும் டைரக்ஷன் சிறப்பு ஆகியவற்றால் அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள வைப்பதோடு அதற்கும் மேலே போய் சிலிர்க்கத் தக்க - நெகிழத்தக்க ஓர் அற்புதமான படத்தைக் கொடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ் .

எஸ் .. இதுவரை கார்த்திக் சுப்புராஜ் எடுத்த படங்களிலேயே பெஸ்ட், இந்த டோரதிதான்.

சுப்புவின் குடும்பத்தின் உத்தரவுப்படி சுப்புவை கொன்று விட்டதாக வீரய்யாவிடம் கார்த்திக் கண்ணீரோடு சொல்லும் காட்சியில் துவங்கும் படம் ஒருநிலை வரை நடந்த கதையைக் கூறி பிறகு நடக்கப்போகும் கதையை சொல்கிறது.

உண்மையில் இடைவேளை வரை இந்தப் படம்பெரிதாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையில், இரண்டாம் பகுதியில் இந்தப் படம் எடுக்கும் விஸ்வருபம் அபாரமானது .

பெண்களையே கேவலமாக எண்ணுகிற சூழலில், 'அப்படி ஒரு ஷாக்' அடித்தால் என்ன ஆகும் என்பது சிறப்பாக சொல்லப்படுகிறது

ஒரு திரைக்கதை சரியான லாஜிக்கோடு எப்படி யாரும் எதிர்பார்க்க முடியாத வேறு ஒரு தளத்துக்கு போக வேண்டும் என்பதற்கு இந்தக் கதை உதாரணம்

படம் இரண்டாம் பகுதியில் எடுக்கும் அந்த எதிர்பாராத திடீர் திருப்பத்தை ஆடியன்ஸ் உணர்வதோடு கொண்டாடும் நிலைக்கும் போவதில் இசைஞானி இளையராஜாவின் இசை பெரும்பங்கு வகிக்கிறது. அதுவும் முத்து மணிச்சரம் பாடல் பயன்படுத்தப்பட்டு இருக்கும் விதம் அற்புதம் .

படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் மற்றும் பொதுப் புத்தியில் ரசிகர்கள் பலரும் வெறுத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை கதாபாத்திரங்கள் மற்றும் ரசிகர்களின் விருப்பத்துக்குரியதாக விஷுவலாக நம்ப வைப்பதில் ரசவாதம் செய்து இருக்கிறது திருவின் கேமரா

கார்த்திக் சுப்புராஜின் நீண்ட நெடிய அழகான ஷாட்கள் உட்பட தொழில்நுட்ப ரீதியாக மிக சிறப்பாக இருக்கிறது படம்.

ஒரு முக்கியமான கதை போக்கில் வசனம் அற்புதமாக இருக்கிறது.

டோரதியின் மரணத்துக்காக காரணத்தை சொல்லாமல் விடுவது, அந்த அரைமணி நேர காட்சிகளுக்கு இணையாக வீரைய்யாவின் மனைவி மகள் போட்டோவை மட்டும் ஒரு ஷாட்டில் காட்டி, டோரதிக்கும் முந்தைய கொலைகளின் மர்மத்தை கத்தி சொருகுவது மாதிரி சொல்வது .. இவையெல்லாம் மேட்டிமையான திரைக்கதை இயக்கத்துக்கு உதாரணங்கள்.

இயல்பான சூழலில் நட்பு காதலாவது ஒரு வகையில் கன்வீனியன்ட். அது ஒரு சொகுசு. ஆனால் யாரும் பொதுவில் நினைத்துப் பார்க்கக் கூட விரும்பாத ஒரு சூழலில் ஒரு நட்பு காதல் ஆவதும் அதை ஆக்குவதும் , அதை ஏற்றுக் கொள்ள வைக்கவும் ஒரு டைரக்டருக்கு பெரும் திறமை வேண்டும் . அதை சாதித்து இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்

சிறுவயது முதலே தைரியமான சிறுவனாக இருந்து போடும் ஆகோரோஷமான சண்டைகள் என்ன .. டோரதியாக மாறிய பிறகு, பிறகு அட்சர சுத்தமான உடல் மொழிகள்,பாவனைகள் என்ன . பிரமிக்கத்தக்க நடிப்பை கொடுத்துள்ளார் சனந்த். விருதுக்குரிய அற்புதமான நடிப்பு .

சிறு வயது பயம் , நட்பின் எழுச்சி, எதிர்பாராத மாற்றத்தால் அதிர்ச்சி. குழப்பம், கொடூர முடிவை நோக்கிய பயணம், அதில் இருந்து மாற்றம் என்று உணர்வுக் குவியல்களால் சூழப்பட்ட கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார் ரிஷிகாந்த்.

முக்கியமான கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் இயல்பான நடிப்பு,.ஜீவா சுப்பிரமணியம், முத்துக்குமார், ராம்ஸ் எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர் .

முதல் பாதியில் துண்டு துண்டாக எந்த அழுத்தமும் இன்றி நகரும் காட்சிகள் , பல இடங்களில் வசனங்கள் புரியாமல் இருப்பது இப்படி சில குறைபாடுகள்...

இருந்தாலும் இந்த விஷயங்களை எல்லாம் போகப்போக தின்று செரித்து விட்டு நிற்கிறது படம்.

கடைசிக் காட்சிகளில் கார்த்திக் சுப்புராஜ்,இளையராஜா, சனந்த், திரு ஆகியோர் ஒன்று சேர்ந்து படத்தை சும்மா, அப்படி தூக்கி நிறுத்துகிறார்கள்.

இப்படி ஒரு படம் வெகு ஜன மக்களின் ஆதரவோடு தியேட்டரில் சிறப்பாக ஓடினால் அது ரசிகர்களுக்கு கவுரவம்.

பொதுப் புத்திகளின் சூழ்நிலைக் கைதியாக மாறாமல், நமக்கு இது நிகழ்ந்தால் என்ற மன நிலையில் பார்த்தால் இதன் நியாயம் விளங்கும் . மீறியும் இது சரி இல்லை என்று ஒரு பக்கம் தோன்றினால் இன்னொரு பக்கம், இது தப்பும் இல்லை என்பது புரியும்.

மறுபடியும் சொல்லலாம் . இதுவரை கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படங்களில் இதுதான் பெஸ்ட்

டோரதி ... படித்து உணரும் விஷயம் இல்லை. பார்த்து சிலிர்க்க வேண்டிய அனுபவம்.

மகுடம் சூடும் கலைஞர்கள்...

கார்த்திக் சுப்புராஜ்,

சனந்த்,

இளையராஜா ,

திரு.

(நன்றி: Raja Thirumagan SU Senthilkumaran sir)

Source : www.fnewsnow.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Fnewsnow