Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கோவில்களில் செல்போனுக்கு தடையா? - பாஜக கேள்வி

கோவில்களில் செல்போனுக்கு தடையா? - பாஜக கேள்வி

Fnewsnow 2 weeks ago

மிழ்நாட்டில் முக்கிய கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை முழுமையாக அமல்படுத்தாமல், கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவில்களில் சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதைத் தடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 52 முக்கிய இந்து கோவில்களில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன்களை பாதுகாப்பாக வைக்க கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு பெட்டகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு செல்போனை ஒப்படைக்க ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில், கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் தேவையற்ற செயல்களை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், செல்போனை கோவில் வளாகத்திற்குள் கொண்டு செல்லவே தடை விதிப்பது பக்தர்களுக்கு பல்வேறு நடைமுறை சிரமங்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குழுவாக கோவில்களுக்கு வரும்போது, அவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தால் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள செல்போன் உதவியாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக வயதானவர்களுடன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முழுமையான செல்போன் தடை சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கோவில்களின் கட்டிடக்கலை, பழமையான சிற்பங்கள் உள்ளிட்டவற்றை புகைப்படம் எடுப்பது பல பக்தர்களின் வழக்கமாக உள்ளது. இதுபோன்ற புகைப்படங்கள் கோவில்களின் சிறப்புகளை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்த உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, மூலஸ்தானத்தில் மட்டும் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பது, மூலஸ்தானத்தை புகைப்படம் எடுப்பதை மட்டும் தடை செய்வது போன்ற நடைமுறை கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஆனால், செல்போனை கோவிலுக்குள் கொண்டு செல்லவே தடை விதிப்பது தேவையற்ற மனஉளைச்சலை ஏற்படுத்தும் என்பதால், இந்து சமய அறநிலையத்துறை இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோவில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், தற்போது 52 முக்கிய கோவில்களுக்கு இந்த தடை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், பாஜகவின் இந்த கோரிக்கை விவாதத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Source : www.fnewsnow.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Fnewsnow