கோயம்புத்தூர் மாநகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திட்டமிடப்பட்டுள்ளது.
61.62 ஏக்கர் பரப்பளவில், சுமார் ₹168 கோடி மதிப்பீட்டில் முன்மொழியப்பட்ட இத்திட்டம், பல வருடங்களாக முடங்கியிருந்த நிலையில், தற்போது பணிகள் மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் கே. விக்னேஷ், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்ட வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்கி, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக அமைச்சர் கே. விக்னேஷ் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியை நேரில் சந்தித்து, அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை அளித்தார். இந்த நடவடிக்கை மூலம் பேருந்து முனையத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் வேகம் பெற்றுள்ளன.
அமைச்சர் விக்னேஷ், மாநில அரசின் தொடர்புடைய துறை அதிகாரியை நேரில் சந்தித்து, வெள்ளலூர் பேருந்து முனையத்தின் பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த திட்டம் முன்பு நிறுத்தப்பட்டு, சந்தை அல்லது லாரி நிறுத்துமிடமாக மாற்றப்படும் என்று பரிசீலிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது மாநில அரசு இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரின் இந்த தொடர் நடவடிக்கை, கோயம்புத்தூர் நகரின் போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மாநகராட்சி இந்த வளாகத்தை வெறும் பேருந்து நிலையமாக மட்டும் பயன்படுத்தாமல், "பேருந்து நிலையம் மற்றும் லாரி முனையம் (Truck Yard)" ஆகிய இரண்டும் இணைந்த ஒரு கூட்டு வளாகமாக (Dual Concept) உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் பணிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பல்வேறு நிர்வாகக் காரணங்களாலும், அரசியல் சூழல்களாலும் இந்தத் திட்டம் முற்றிலும் முடங்கிப் போனது. இதனால் போடப்பட்ட சாலைகளும், கட்டப்பட்ட தற்காலிக அமைப்புகளும் பயன்பாடின்றி வீணாகும் நிலை ஏற்பட்டது.
இப்போது விஜய் தலைமையிலான அரசு இந்த திட்டத்தை மீண்டும் துவங்க அனுமதி அளித்துள்ளதால், பணிகளை விரைந்து முடிக்க வழி ஏற்பட்டுள்ளது. இந்த பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்தால், கோயம்புத்தூர் நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோயம்புத்தூர் மாநகராட்சி இந்த திட்டத்தின் ஆரம்ப கட்டங்களுக்காக ஏற்கனவே 54 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை முடிக்க இன்னும் 148 கோடி ரூபாய் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க, சாலை இணைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
செட்டிபாளையம் - போடனூர் சாலையை அகலப்படுத்தவும், நீலம்பூர் பைபாஸ் சாலையை கையகப்படுத்தி அகலப்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் மூலம் பேருந்து முனையத்திற்கான போக்குவரத்து வசதி எளிதாக்கப்படும்.
வெள்ளலூர் பேருந்து முனையத்தை முழுமையாக பயன்படுத்த, எதிர்காலத்தில் மேலும் சில முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் அவசியம் என்ற கருத்து நிலவி வருகிறது. உதராணமாக மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையில், போடனூர் ரயில் நிலையம் மற்றும் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை நீட்டிப்பு இணைக்கப்பட வேண்டும்.
அதேபோல் நீலம்பூர் பகுதியில் விமான நிலைய மெட்ரோ திட்டத்துடன் இணைந்து மற்றொரு பல்முனை போக்குவரத்து முனையம் உருவாக்கப்பட வேண்டும். இந்த இரண்டு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டால், கோயம்புத்தூர் பகுதியின் பிராந்திய இணைப்பு மேலும் வலுப்பெறும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது.

