தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா விரட்டியடிக்கப்பட்ட சின்னபுதூர் கிராமத்தில் தவெக அதிக வாக்குகளை பெற்றிருந்தார்.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆறாவது சுற்றில் இருந்தே பல்வேறு மாற்றங்கள் நடந்து வந்தது. முதல் ஐந்து சுற்றில் அதிமுக முன்னிலை விகித்து வந்த நிலையில், அதன்பின்னர் தவெகவே முன்னிலை வகித்தது. அதேபோல் அங்கு திமுக மூன்றாம் இடத்தில் இருந்து வந்த நிலையில், இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. முதல் இடத்தில் இருந்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு பின்தங்கியது. 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா அபாரமாக வென்றுள்ளார்.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. முன்னதாக தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்யபாமாவுக்கு சில ஊர்களில் பிரச்சாரம் செய்யவே கடும் எதிர்ப்பு எழுந்தது. அதிமுகவை விட்டு விட்டு தவெகவில் இணைந்தது ஏன் என்று கேள்வி எழுப்பி அவரை சிலர் விரட்டினார்கள் . அப்படி விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட 'சின்னபுதூர்' கிராமத்திலேயே தற்போது தவெக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது வாக்குச்சாவடி பூத் விவரங்களில் தெரியவந்துள்ளது.
சின்னபுதூர் பகுதியில் கடந்த மே 4 நிலவரத்துடன் ஒப்பிடும்போது, தவெக வேட்பாளர் சத்யபாமா 1,677 வாக்குகளில் இருந்து 2,884 வாக்குகளாக உயர்ந்து, 1,207 வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருக்கிறார் அதேவேளையில், அங்கு வலுவாக இருந்த அதிமுக 3,888 வாக்குகளில் இருந்து 2,209 வாக்குகளாகக் குறைந்து 1,679 வாக்குகளை இழந்து பெரும் சரிவைச் சந்தித்திருப்பதும் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. திமுகவும் 2,821 வாக்குகளில் இருந்து 2,286 ஆகச் சரிந்து 535 வாக்குகளை பறிகொடுத்துள்ள. நாம் தமிழர் கட்சி 209 வாக்குகளில் இருந்து 240 ஆக உயர்ந்து 31 வாக்குகளையும், சிபிஐ கட்சி புதிதாக 32 வாக்குகளையும் கூடுதலாக பெற்றுள்ளன.
திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கிகளை அதிரடியாகப் பிரித்து சின்னபுதூர் கிராமத்தில் தவெக பெ 1,207 வாக்குகள் அதிகம் பெற்று இருப்பதை தவெகவினர் கொண்டாடுகிறார்கள். தாராபுரம் தொகுதியில் இறுதி முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றுள்ளார். இத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்யபாமா மொத்தம் 66,841 வாக்குகளைக் குவித்து முதலிடம் பிடித்து வென்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துத் தோல்வியடைந்தார். இதன் மூலம் தவெக வேட்பாளர் சத்யபாமா, திமுக வேட்பாளரை விட 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
ஆரம்பத்தில் ஐந்து சுற்றுகளில் சவாலாக இருந்த அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துத் தோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற தவெக வேட்பாளரை ஒப்பிடுகையில், அதிமுக வேட்பாளர் 21,561 வாக்குகள் பின்னடைவைச் சந்தித்துள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா 5,268 வாக்குகளையும், சிபிஐ வேட்பாளர் லட்சுமணன் 1,157 வாக்குகளையும் பெற்றுத் தோல்வியடைந்தனர். தவெக வேட்பாளர் சத்யபாமா, வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தாராபுரம் தொகுதியைக் கைப்பற்றியுள்ளார்.

