Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நாடாளுமன்றத்திற்குள் நுழையும் தவெக நபர் யார்?

நாடாளுமன்றத்திற்குள் நுழையும் தவெக நபர் யார்?

Fnewsnow 5 days ago

மிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசு, முதல் சில நாட்களிலேயே நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தனது இருப்பை உணர்த்தத் தொடங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மக்கள் நலன், நிர்வாக சீரமைப்பு மற்றும் அரசியல் விரிவாக்கம் தொடர்பான பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் விஜய், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட உணவுத் தேவையை நிறைவேற்றும் அம்மா உணவகங்களை மீண்டும் சீரமைக்க உத்தரவிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உணவின் தரம் மற்றும் சுவை குறித்து புகார்கள் அதிகரித்திருந்த நிலையில், இந்த உத்தரவு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் குறைந்த விலையில் தரமான உணவு கிடைக்கும் வகையில் உணவகங்கள் மறுசீரமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் அம்மா உணவகத்தை மாநிலம் முழுவதும் டவுன் மற்றும் கிராமங்களுக்கும் கொண்டு வந்தால் பல கோடி மக்கள் பலன் பெறுவார்கள்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் புதன்கிழமை வெளியாகும் என்று அறிவித்துள்ளார். புதிய அரசு பொறுப்பேற்ற சூழலில் தேர்வு முடிவுகள் தாமதமாகுமோ என்ற அச்சத்தில் இருந்த பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு நிம்மதியை அளித்துள்ளது.

புதிய ஆட்சியின் மிக முக்கியமான நிர்வாக நடவடிக்கையாக நேற்று 17 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ககன் தீப் சிங் பேடி, அமுதா உள்ளிட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலாளராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக அமுதா பொறுப்பேற்றுள்ளார். அதேபோல் நீர்வளத்துறை முதன்மை செயலாளராக சத்யபிரதா சாகு நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த குமரகுருபரனுக்கு பதிலாக சமீரன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது. சென்னை நகர வளர்ச்சி, மழைநீர் வடிகால், குடிநீர் மற்றும் போக்குவரத்து சவால்கள் போன்ற முக்கிய விஷயங்களில் புதிய நிர்வாக அணுகுமுறை வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக அரசியலில் வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே தவெக டெல்லி அரசியலிலும் தனது தடத்தை பதிக்கத் தயாராகி வருகிறது. அதிமுகவை சேர்ந்த சிவி. சண்முகம் மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளதால், அந்த இடம் காலியாகியுள்ளது.

தமிழக சட்டசபையில் பெரும்பான்மை எம்எல்ஏக்களை கொண்டுள்ள தவெக, இந்த மாநிலங்களவை இடத்தை எளிதாக கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம் தேர்தலில் வென்ற சில மாதங்களிலேயே டெல்லியில் தவெக தனது முதல் எம்பியை அனுப்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தவெக சார்பில் மாநிலங்களவைக்கு யார் அனுப்பப்படுவார் என்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் விஜய் இதுகுறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. டெல்லி அரசியலில் தவெக குரல் எழுப்பப்போகும் முதல் முகம் யார் என்பது கட்சியினரிடமும் அரசியல் விமர்சகர்களிடமும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதுக்குறித்த முக்கிய ஆலோசனை கூட்டத்தை இன்று முதல்வர் விஜய் தலைமையில் நடக்கிறது.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அந்த தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்தும் இன்று விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். புதிய ஆட்சியின் முதல் தேர்தல் சோதனையாக இந்த இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது.

முதல்வர் விஜய் தற்போது ஒரே நேரத்தில் தேர்தல் வாக்குறுதிகள், நிர்வாக மாற்றங்கள் மற்றும் அரசியல் விரிவாக்கம் ஆகிய மூன்று திசையிலும் ஒரே நேரத்தில் பணியாற்றி வருகிறார்.

Source : www.fnewsnow.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Fnewsnow