சோழிங்கநல்லூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள நாவலூர் சிவன்கோயிலை ஒட்டி மேற்கில் செல்லும் தாழம்பூர் சாலையில் 3 கிமி சென்றவுடன் வரும் தாழம்பூர் நாலு ரோட்டில் தெற்கில் திரும்பி 2 கிமி சென்றால் சிறுசேரி ஏரிக்கரை வந்து, அதன் கிழக்கில் பிரியும் குயவர் தெருவின் வழி சென்றால் கடைசியில் இருக்கும் மாசிலாமணீஸ்வரர் சிவன்கோயிலை அடையலாம்.
சிறுசேரியில் இரண்டு சிவன் கோயில்கள் உள்ளன. மற்றொரு கோயில் ஏரியின் தென்மேற்கில் பிரியும் தெருவில் சென்றால் உள்ளது.
மாசிலாமணீஸ்வரர் கோயில் என்பது பலகாலம் முற்றிலும் சிதைவடைந்து கிடந்த ஒரு கோயிலின் உள்ளே இருந்த லிங்கம் மீட்கப்பட்டு அதற்க்கு மாசிலாமணீஸ்வரர் என பெயரிட்டு உள்ளனர். அதில் இறைவன் பெரிய லிங்க மூர்த்தியாக சதுர ஆவுடை கொண்டு உள்ளார், தனித்த லிங்கமூர்த்திக்கு ஒரு தகர கொட்டகை போடப்பட்டு எதிரில் புதியதாக செய்யப்பட்ட ஒரு நந்தியை வைத்து இறைவனுக்கு பூஜைகள் செய்து வருகின்றனர். அம்பிகை இல்லை.
காலை மாலை என இருவேளைகளில் ஒரு அன்பர் பூஜை செய்து வருகின்றார், பிற நேரங்களில் அலுவலகப்பணிக்கு சென்று விடுவார் அந்த அன்பர். அனைத்து விழாக்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
கோயிலின் எதிரில் ஒரு சிறிய குளமும் நீளவாக்கில் ஒரு கால்வாயும் செல்கிறது. இந்த கிராமம் முழுதும் தானுண்டு தான் வேலையுண்டு என இயங்கி வருகிறது. இந்த இடம் தான் சிறுசேரி எனும் உண்மையான கிராம முகம் சில நூறு மீட்டர் தூரத்தில் பரபரப்பான IT Park 24 மணிநேரமும் இயங்கி வருகிறது. பழைய கோயில் பழைய கிராமம் பற்றி சொல்ல இங்கே யாருமில்லை.
இன்னும் 5 ஆண்டுகளுக்குள் எம்பெருமான் பெரியதொரு கோயிலில் குடிபுகுந்து நகர வாழ்க்கைக்கு தயாராகிவிடுவார் என நினைக்கிறேன்.

