Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் சர்ச்சை பேச்சு!

திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் சர்ச்சை பேச்சு!

Fnewsnow 2 weeks ago

முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு சென்றால் அவரை அங்கு பிடித்து கட்டி வைத்து விடுவார்கள் என திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

திருச்செந்தூர் அருகே உள்ள நாசரேத்தில் திமுக பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் திமுக அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், தற்போதுள்ள தமிழக முதல்வரால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆடுகிறார் பாடுகிறார். இதைத் தவிர மற்ற எந்த விஷயமும் செய்வது இல்லை.

தற்போது காவிரி பிரச்சனையில் ஹெலிகாப்டரில் சென்று நேரில் பார்ப்பதாக விஜய் கூறுகிறார் (ஒருமையில் பேசினார்)

முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு சென்றால் அவரை அங்கு பிடித்து கட்டி வைத்து விடுவார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். தேவையில்லாமல் அந்த மாநிலத்திற்கு சென்று ஒப்பந்தம் போட்டு நமது மாநிலம் கெட்டுப் போய் விடக் கூடாது.

காமராஜர் பெயரை சொல்லி கதை விட்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று மீண்டும் முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசினார். ஏற்கனவே முதல்வர் விஜய் குறித்து விமர்சனம் செய்த போது அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பகுதியில் ஜூன் 20 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய, திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாக பேசியதாக தவெக நகர செயலாளர் செல்வம், ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரின் பேரில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அனிதா தரப்பில் இந்த பேச்சுக்கு அவதூறு வழக்குதானே பதிவு செய்திருக்க வேண்டும், போலீஸ் வழக்கு பதிவு செய்திருக்கக் கூடாது என கூறி முன் ஜாமீன் கேட்டார்.

காவல் துறை தரப்பில் ஏழு முறை எம்எல்ஏவாக இருந்த மனுதாரர் கட்டுப்பாடுடன் பேசியிருக்க வேண்டும். இந்த வழக்கை பதிவு செய்திருக்காவிட்டால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் என்பதால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்றனர்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, முதல்வர் பதவிக்கென ஒரு மரியாதையை கொடுக்க வேண்டாமா, இப்படி ஒரு மோசமான மொழியில் ஒரு எம்எல்ஏ பேசுவது சரியா என கேள்வி எழுப்பிய நீதிபதி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இவரை தொடர்ந்து முதல்வர் விஜய்யின் எலும்பை உடைப்பேன் என விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்கண்டேயன் பேசி, தற்போது கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமீன் மனு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Source : www.fnewsnow.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Fnewsnow