Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காலிஃப்ளவர் இருக்கா? 15 நிமிடத்தில் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் காலிஃப்ளவர் சீஸ் ரெடி!

காலிஃப்ளவர் இருக்கா? 15 நிமிடத்தில் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் காலிஃப்ளவர் சீஸ் ரெடி!

Kalki Online 1 day ago

காய்கறிகள் என்றாலே குழந்தைகள் முகம் சுளிப்பது வழக்கம். அதிலும் காலிஃப்ளவர் என்றால், பக்கோடா, சில்லி செய்தால்தான் பலருக்கும் பிடிக்கும்.

ஆனால், அதே காலிஃப்ளவரை வைத்து முற்றிலும் வித்தியாசமான, நாவில் வைத்ததும் அப்படியே கரையும் ஒரு அருமையான ரெசிபி செய்ய முடியும் என்றால் நம்புவீர்களா?

அதுதான் உலக அளவில் மிகவும் பிரபலமான க்ரீமி காலிஃப்ளவர் சீஸ். இது இங்கிலாந்து நாட்டின் பாரம்பரிய உணவாக இருந்தாலும், நமது இந்திய சுவைக்கேற்ப சிறு மாற்றங்கள் செய்து வீடுகளிலேயே மிக எளிதாகச் செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்:

  • காலிஃப்ளவர் - 1

  • காய்ச்சாத பால் - 2 கப்

  • வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

  • மைதா மாவு அல்லது கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்

  • துருவிய சீஸ் - 1 கப்

  • மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

  • பூண்டு - 4 பற்கள்

  • உப்பு - தேவையான அளவு

  • சில்லி ஃப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்

செய்முறை!

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதித்ததும், நறுக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் பூக்களைப் போட்டு சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வேகவைக்க வேண்டும். காலிஃப்ளவர் குழைந்து மாவாகிவிடக் கூடாது; அதேசமயம் கடித்துச் சாப்பிடும் அளவிற்கு முக்கால் பதம் வெந்திருக்க வேண்டும்.

 creamy cauliflower cheese காலிஃப்ளவர் சீஸ்

வெந்த காலிஃப்ளவரை ஒரு வடிகட்டியில் மாற்றி, அதில் உள்ள தண்ணீர் முழுமையாக வடியும் வரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சிறிதளவு தண்ணீர் இருந்தாலும், நாம் செய்யப்போகும் சீஸ் சாஸ் நீர்த்துப்போய்விடும் என்பதால் கவனம் தேவை.

அடுத்ததாக, அடுப்பில் ஒரு அடிகனமான கடாயை வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருக்கிக் கொள்ளுங்கள். வெண்ணெய் உருகியதும், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வாசம் வந்தவுடன், மைதா மாவைச் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகக் கிளற வேண்டும்.

1 கப் பச்சரிசி இருந்தா போதும்.. சட்டுனு செய்யக்கூடிய சத்தான மாலை நேர டிபன்!

மாவு நிறம் மாறுவதற்கு முன்பாகவே, நாம் எடுத்து வைத்துள்ள பாலைச் சிறுகச் சிறுக ஊற்றி, கட்டிகள் விழாதவாறு ஒரு கரண்டியால் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பால் கெட்டியாகி ஒரு க்ரீம் பதத்திற்கு வந்ததும், அதில் உப்பு, மிளகுத் தூள் மற்றும் நாம் துருவி வைத்துள்ள சீஸில் பாதியளவு சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். சீஸ் முழுமையாக உருகி, சாஸ் பளபளப்பாக மாறியதும், தண்ணீர் வடித்து வைத்துள்ள காலிஃப்ளவரை இதில் சேர்த்து, சாஸ் அனைத்துப் பூக்களிலும் படும்படி மெதுவாகப் பிரட்டி விடுங்கள்.

இப்போது காலிஃப்ளவர் மீது மீதமுள்ள துருவிய சீஸ் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸை அழகாகத் தூவி விடுங்கள். உங்கள் வீட்டில் ஓவன் இருந்தால், 200 டிகிரி செல்ஸியஸில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்கலாம். ஓவன் இல்லையென்றால், கடாயை அப்படியே ஒரு மூடி போட்டு, மிகக் குறைந்த தீயில் சுமார் 5 முதல் 8 நிமிடங்கள் வரை சீஸ் உருகும் வரை வைத்திருக்க வேண்டும்.

கத்தரிக்காய் பிடிக்காதவங்களும் கேட்டு வாங்கி சாப்பிடும் சீக்ரெட் கத்தரிக்காய் சாதம்!

மூடியைத் திறந்தால், சீஸ் முழுவதும் உருகி, வீடு முழுவதும் கமகமக்கும் அட்டகாசமான காலிஃப்ளவர் சீஸ் ரெடி.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online