Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மின்னல் தாக்கித் துண்டுபடும் விசித்திர சிவலிங்கம்: பிஜ்லி மகாதேவ் கோவிலின் பேரதிசயம்!

மின்னல் தாக்கித் துண்டுபடும் விசித்திர சிவலிங்கம்: பிஜ்லி மகாதேவ் கோவிலின் பேரதிசயம்!

Kalki Online 18 hrs ago

ம் இந்தியாவை பொறுத்த வரையில் கோவில்களுக்கு பஞ்சமே இல்லை. ஒரு சில கோவில்களின் வரலாறு நமக்கு புரியாமலும் தெரியாமலும் இருக்கின்றன.

சில சமயங்களில், ஒரு சில விஷயங்கள் எப்படி, ஏன் நடக்கின்றன என்பதற்கான திட்டவட்டமான பதில் கிடைப்பதில்லை. அந்த வகையில் ஒரு மர்மமான கோவில் இமாச்சலப் பிரதேசத்தில் இருக்கிறது. ஆம். அது பிஜ்லி மகாதேவ் கோவில்தான். இந்த கோவிலின் சிறப்புதான் என்ன? ஏன் இதற்கு பிஜ்லி மகாதேவ் கோவில் என்ற பெயர் வந்தது பார்க்கலாமா..?

இந்த கோவில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குலு பள்ளத்தாக்கின் காஷாவரி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். பியாஸ் மற்றும் பார்வதி பள்ளத்தாக்குகள் சங்கமிக்கும் இடத்திற்கு மேலே, சுமார் 2,460 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு உயர்ந்த மலைத்தொடரின் உச்சியில் இந்த கோவில் அமைந்துள்ளது. உச்சியிலிருந்து பல பக்கங்களிலும் நிலம் சரிந்து, குலு பள்ளத்தாக்கின் நீண்ட காட்சிகளை வழங்குகிறது.

இக்கோவிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிவலிங்கத்தின் மீது இடி மின்னல் விழுகிறது. மேலும் மர்மமான முறையில் சிவலிங்கமோ அல்லது மூலவரின் புனித மரத்தடியோ மின்னலால் தாக்கப்படுகின்றன. மின்னலின் காரணமாக லிங்கம் துண்டு துண்டாகச் சிதறுகிறது, சிதறிய லிங்கத்தை அர்ச்சகர் அவர்கள் தானியம், பருப்பு மாவு மற்றும் உப்பு சேர்க்காத வெண்ணெய் சேர்த்து மீண்டும் ஒன்று சேர்க்கிறார். சில மாதங்களுக்குள், லிங்கம் முன்பிருந்ததைப் போலவே அதன் திடமான வடிவத்தை மீண்டும் பெறுகிறது.

உள்ளூர் மக்கள் நம்பிக்கைகளின்படி, மின்னல் லிங்கத்தையோ அல்லது மரத்தடியையோ தாக்குவது முற்றிலும் தெய்வீக அருளாகும். சிவபெருமான் அப்பகுதி மக்களை எல்லாவிதமான மறைந்திருக்கும் தீமையிலிருந்தும் காப்பாற்ற விரும்புகிறார், அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் மின்னல் அதே இடத்தில் தாக்குவதாக அந்த கிராமத்து மக்கள் இன்றளவும் நம்புகிறார்கள்.

 பிஜ்லி மகாதேவ் - Bijli Mahadev mystery

பிஜ்லி என்றால் மின்னல் என்று பொருள். இங்கிருக்கும் சிவனை அதாவது மகாதேவனை மின்னல் தாக்குவதால் இந்த சிவனிற்கு பிஜ்லி மகாதேவன் என்ற பெயர் வந்தது.

இந்த கோவிலில், சுமார் 60 அடி உயரமுள்ள ஒரு நீண்ட கம்பு இருக்கிறது. அது மின்னல் வடிவில் வரும் தெய்வீக ஆசீர்வாதங்களை ஈர்ப்பதாக கருத்துக்கள் கூறுகின்றன. சுற்றிலும் பனி சூழ்ந்திருக்கும் குளிர்காலத்தில் கூட, இந்தக் கம்பு சூரிய ஒளியில் ஒரு வெள்ளி ஊசியைப்போல ஜொலிக்கிறது.

இந்த கோவிலானது, 1652-ஆம் ஆண்டு ராஜா ஜகத் சிங் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவிலானது, பாண்டவர்கள் இமயமலையில் வனவாசம் மேற்கொண்ட போது, அவர்களால் ஒரு சிறிய சன்னதியாக முதலில் கட்டப்பட்டது என்றும் நம்பப்படுகிறது.

பன நுங்குவின் மகத்துவங்கள்: ஆரோக்கியமான வாழ்விற்கு ஒரு சுலபமான வழி!

பண்டைய புராணக்கதையின்படி, குலு பள்ளத்தாக்கில் குலந்தன் என்ற அசுரன் வசித்து வந்தான்.

லாகூர் ஸ்பிதியிலிருந்து மண்டி கோக்கர்தார் வழியாக மதன் கிராமத்திற்கு ஒரு பெரிய டிராகன் வடிவில் அந்த அசுரன் வந்தான். டிராகன் போன்ற அந்த அரக்கன் இந்த இடத்தை நீரில் மூழ்கடிக்க விரும்பினான். அதன் காரணமாக, அவன் வியாச நதியின் ஓட்டத்தைத் தடுத்தான். அதனால் அங்கு வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் நீரில் மூழ்கி இறந்தன.

அசுரன் குலந்தனின் இந்த நோக்கத்தை அறிந்த சிவபெருமான், தனது திரிசூலத்தால் அந்த அசுரனைக் கொன்றார். குலந்தனின் மரணத்திற்குப் பிறகு, அவனது பிரம்மாண்டமான உடல் ஒரு பெரிய மலையாக மாறியது. குலந்தனின் பெயரிலிருந்துதான் இந்த நகரத்திற்கு குலு என்ற பெயர் வந்ததாகவும் நம்பப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், பக்தர்கள் சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக இந்த பிஜ்லி மகாதேவ் கோவிலுக்கு வருகை தருகிறார்கள். இந்த கோவிலுடன் தொடர்புடைய ஒரு முக்கியமான திருவிழா ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறுகிறது. இப்பகுதியின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக இந்த திருவிழா, மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.

இயற்கையின் கோபமும் இறைவனின் அருளும் சங்கமிக்கும் இந்த விந்தையான வழிபாட்டு முறையைப் புரிந்துகொள்வதன் மூலம், நமது கலாச்சாரத்தின் மீதான வியப்பும் பற்றும் பன்மடங்கு அதிகரிக்கிறது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் மூக்குத்தி ரகசியம் மற்றும் ஸ்தல வரலாறு!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online