Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 3

செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 3

Kalki Online 2 months ago

எழுத்துகள் இரண்டு வகைப்படும்.

  • முதல் எழுத்துகள்

  • சார்பு எழுத்துகள்

முதல் எழுத்துகள்:

உயிர் எழுத்துகள் பன்னிரண்டு மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகளாகும்.

பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்று அழைக்கிறோம்.

சார்பு எழுத்துகள்:

முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பு எழுத்துகள் எனப்படும். இவை பத்து வகைப்படும்.

1) உயிர்மெய்

2) ஆய்தம்

3) உயிரளபெடை

4) ஒற்றளபெடை

5) குற்றியலிகரம்

6) குற்றியலுகரம்

7) ஐகாரக்குறுக்கம்

8) ஔகாரக்குறுக்கம்

9) மகரக்குறுக்கம்

10) ஆய்தக்குறுக்கம்

இந்த வகுப்பில் உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை ஆகியவற்றைப் பற்றிக் காண்போம்.

1) உயிர்மெய்:

மெய்யெழுத்துகளும் உயிரெழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.

உயிர்மெய் எழுத்தின் ஒலி வடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்.

வரி வடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்.

முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பு எழுத்துகளின் வகைகளில் அடங்கும்.

2) ஆய்தம்:

மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது. முப்புள்ளி, முப்பாற் புள்ளி, தனிநிலை, அஃகேனம் என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு. நுட்பமான ஒலிப்பு முறையை உடையது.

செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 1

தனக்கு முன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப் பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனித்து இயங்காது.

முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.

அளபெடுத்தல் - நீண்டு ஒலித்தல்.

பேச்சு வழக்கில் சொற்களை நீட்டி ஒலித்துப் பேசுவோம். அவ்வாறு பேசும்போது உணர்வுக்கும் இனிய ஓசைக்கும் அளபெடுத்தல் பயன்படுகிறது.

எ.கா. அம்மாஅ..., தம்பிஇ..

3) உயிரளபெடை:

செய்யுளில் ஓசை குறையும்போது, அதனை நிறைவுசெய்ய, மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும். அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வரும். இவ்வாறு வருவது உயிரளபெடை எனப்படும்.

உயிரளபெடை மூன்று வகைப்படும்.

அ) செய்யுளிசை அளபெடை:

செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள் அளபெடுத்தலைச் செய்யுளிசை அளபெடை என்போம். இதனை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்.

  • ஓஓதல் வேண்டும் - மொழி முதல்

  • உறாஅர்க்கு உறுநோய் - மொழியிடை

  • நல்ல படாஅ பறை - மொழியிறுதி

ஆ) இன்னிசை அளபெடை:

செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 2

இ) சொல்லிசை அளபெடை:

செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்.

உரணசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்

வரணசைஇ இன்னும் உளேன்.

நசை - விருப்பம்; விரும்பி என்னும் பொருள் தருவதற்காக நசைஇ என அளபெடுத்தது. பெயர்ச்சொல், வினை அடையாக மாறியது.

4) ஒற்றளபெடை:

செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவுசெய்ய மெய்யெழுத்துகளான ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்தும், ஃ என்னும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.

எங்கிலங்கிய கையராய் இன்னுயிர்

வெஃஃ குவார்க்கில்லை வீடு.

மொழியைத் தெளிவுறப் பேசவும் எழுதவும் உதவுவது இலக்கணம். மொழியின் சிறப்புகளை அறியவும் இலக்கணம் தேவைப்படுகிறது. ஆகையால் இலக்கணத்தை பிழையில்லாமல் கற்று தமிழை வளர்த்து வளம் பெறுவோம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online