Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிறுகதை: மகிழ்ச்சியைப் பரிசளிப்போம்!

சிறுகதை: மகிழ்ச்சியைப் பரிசளிப்போம்!

Kalki Online 1 month ago
 MM strip

"ஏங்க, இன்னிக்கு துணியை துவைக்கப் போட வேண்டாம். வீட்டையும் கொஞ்சம் சுத்தமா வச்சிக்க உதவுங்க, வேலை செய்யும் அம்மா ரெண்டு நாளைக்கு வரமாட்டாங்க" என்றாள் கமலி.

"ஏன்?" என்ற கணவர் ரமேஷின் கேள்விக்கு,

"அவங்க சொந்த ஊர்ல திருவிழாவாம், அதுக்கு போறாங்க" என்றாள் கமலி. கூடவே, "ஏங்க அவங்களுக்கு, ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பட்டுமா?" என்று கேட்டாள்.

உடனே, கணவருக்கு கோபம் வந்தது. சீக்கிரமே தீபாவளி வரப்போகுது அப்ப எப்படியும் போனஸ் தருவோமே! இப்ப எதுக்கு பணம்?" என்றார் கணவர்.

"எங்க, அவங்க சொந்த ஊருக்குப் போறாங்க, மகள் வீடு அங்க இருக்கு பேரன், பேத்திங்க இருப்பாங்க. திருவிழா நேரத்துல போறாங்க, ஏதாவது வாங்கிட்டுப் போக வேண்டாமா?

இந்தப் பணத்தைக் கொடுக்கிறதால நாம ஒண்ணும் குறைஞ்சுப் போக மாட்டோம். அந்தம்மா தன் வீடு மாதிரி நம் வீட்டை எத்தன சுத்தமாக பெருக்கி, துடைச்சு, பாத்திரம் கழுவுறாங்க, கை வேறு சுத்தம், ஒரு பொருள் மேல ஆசைப்படாம, எதுவும் யார் வீட்டைப் பற்றியும் குறை சொல்றதில்லை! இது மாதிரி வேலை செல்பவர்கள் கிடைக்கிறது அரிது" என்று மள மளவென கொட்டித்தீர்த்தாள் கமலி.

"வேலை செய்றவங்களோட நீ ரொம்ப எமோஷனலா நெருங்கிடேறே! இது நல்லதுக்கு இல்ல" என்று எச்சரித்தார் கணவர்.

"சரி, சரி, விடுங்க! இந்த செலவ ஈடு கட்டறதுக்கு ஞாயிற்றுக்கிழமை நாம ஆர்டர் பண்ணி சாப்பிடுற பீட்சாவை, விட்டுட்டு வீட்டில் நல்ல சாப்பாடு சமைச்சு கொடுத்துடறேன். அந்த வறட்டிய சாப்பிடுவதற்கு பதிலாக ருசியா வீட்டு சாப்பாடு சாப்பிடலாம்" என்று மனைவி கமலி சிரித்தபடி சொல்லிவிட்டு போனாள்.

 தமிழ் கதைகள்|Maid and couple

மூன்றாவது நாள் வேலை செய்யும் பெண் விடுமுறை முடிந்து வந்தாள். வழக்கத்தை விட சுறுசுறுப்பாக வேலைகளை செய்தாள்.

மனைவி வந்து காபி கொடுக்கும் போது கணவர் "அவங்க ஊர் பயணம் எப்படி இருந்துச்சுன்னு விசாரிச்சியா?" என்றார்.

உடனே வேலை செய்யும் அம்மாவே உற்சாகமாக, சந்தோஷத்துடன் பதில் சொன்னாள்.

"ரொம்ப நல்லா இருந்துச்சுங்கய்யா! இங்க அம்மா எனக்கு ஆயிரம் ரூபாய் திருவிழா போனஸ்ன்னு கொடுத்தாங்க, நான் எதிர்பார்க்கவே இல்லை.

பேத்திக்கு ஒரு டிரஸ் வாங்கிட்டுப் போனேன், பேரனுக்கு நல்ல ஜாமென்ட்ரி பாக்ஸ் வேணும்னு கேட்டான். அதை வாங்கிக் கொடுத்தேன். என் மவளுக்கு வளையல், மருமகனுக்கு பிடித்த ஸ்வீட் ன்னு வாங்கிட்டுப் போனேன்.

திருவிழாவுல குழந்தைகளுக்குப் பொம்மைகள் வாங்கி கொடுத்தேன்; எல்லோருக்கும் சந்தோஷம். உண்டியல்ல ஐம்பது ரூபாய் காணிக்கை போட்டேன். ஊருக்கு போய்ட்டு வந்ததும் மிச்சம் இருந்த பணத்தை கொடுத்து மளிகைக் கடை பாக்கியை அடச்சிட்டேன் என்றாள்" அவள்.

இதைக்கேட்ட கணவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

சிறுகதை: தோட்டக்காரன்..!

எதிர் பாராமல் கூடுதலாக கிடைத்த ஆயிரம் ரூபாயில் ஒருவரால் இத்தனை பேரை சந்தோஷப்படுத்த முடியுமா? என்று வியந்தார் .

அவரின் கற்பனையில் அவர் அந்த வாரம் சாப்பிட்டு இருக்க வேண்டிய பீட்சா துண்டுகள் வெவ்வேறு வடிவங்களாக தெரிந்தன.

ஒரு துண்டு பேத்தியின் உடையாகவும், இன்னொன்று ஜாமென்ட்ரி பாக்ஸ் ஆனது. வேறொன்று வளையல் ஆனது. மற்றொன்று பொம்மையானது.

தான் ஆடம்பர உணவாக சாப்பிடும் பீட்சாவை இன்னொரு கோணத்தில் அவர் பார்த்தார். அத்தனை பேருக்கு மகிழ்ச்சியை பரிசளித்த ஆயிரம் ரூபாய் அவருக்கு இப்போது மனநிறைவாக தெரிந்தது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online