நடு இரவு. குடிசை கதவை தட்டினார்கள்.
"அடே கோவிந்தா கதவை திற."
கோவிந்தன் அரண்மனையில் இராஜ மாதாவிடம் தனி ஆளாக உதவிகள் செய்து வேலை பார்ப்பவன்.
என்னமோ ஏதோ என்று அஞ்சியபடி கதவை திறந்தான்.
வந்தவர்கள் அரண்மனை வீரர்கள்.
உடன் அவன் கையில் விலங்கு மாட்டினார்கள்.
"அய்யோ, ஏன் விலங்கு போடுகிறீர்கள். நான் என்ன தவறு செய்தேன்" என்றான் கோவிந்தான் அதிர்ச்சியுடன்.
"இது மன்னர் உத்தரவு. ஏதாக இருந்தாலும் மன்னரிடம் கேளு," என்றான் ஒரு வீரன்.
உடன் அவன் மனைவியும் மக்களும் ஓவென அழ, கோவிந்தனை அழைத்துக்கொண்டு நடு இரவில் அரண்மனை சென்றனர்.
மன்னர் முன் நிறுத்தினர்.
"மன்னா நான் என்ன தவறு செய்தேன்?" என்று அழுதபடி கேட்டான் கோவிந்தன்.
"ம். அதை இராஜ மாதாவே கூறுவார்கள்," என்றார் மன்னர்.
கோவிந்தன் கைகட்டி வாய் பொத்தி இராஜமாதாவை பார்த்தான்.
"ஏன்டா கோவிந்தா என் பவித்திர ஜப மாலையை காணவில்லை. இது பரம்பரை பரம்பரையாக இராஜமாதாக்கள் உபயோகித்த இந்த நாட்டின் மாபெரும் பொக்கிஷம். இது அற்புத முத்துக்களும் பவளங்களும்; தங்க குண்டுகளும் ஆக நூற்று எட்டு மணிகள் கொண்ட விலை மதிக்க முடியாத மாலை. அதை இன்று காணவில்லை. ஜபம் செய்த பிறகு என் ஜப மாலை நான் வைத்த இடத்தில் இருக்கிறதா என்று பார்த்த பிறகுதான் உறங்க செல்வேன். மறுநாள் பூசையின் போது அதை அணிவேன். அப்படி பார்க்கும் போது மாலையை காணவில்லை. உன் ஒருவனுக்குத்தான் இந்த இராஜமாதாவின் மாளிகையில் சுதந்திரமாக செல்லும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. வேறு எந்த வீரர்களையோ அல்லது வேலைக்காரர்களையோ நான் நியமிக்க வில்லை. எனவே காணாமல் போன மாலைக்கு நீதான் பதில் சொல்ல வேண்டும்" என்றார் இராஜமாதா.
"சத்தியமாக அது பற்றி எனக்கு தெரியாது. நான் உங்கள் மாலையை எடுக்க வில்லை. இது நீங்கள் வழிபடும் ஆண்டவன் மீது சத்தியம்" என்றான் கோவிந்தன்.
இராஜமாதா மன்னரை பார்த்தார். மன்னர் தளபதியை பார்த்தார்.
"ஏன்டா! உனக்கு இந்த அளவுக்கு திருடும் தைரியம் வந்ததோடு பொய் சத்தியம் செய்யும் தைரியமும் வந்ததா? உன்னை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால்தான் உண்மை வெளிவரும்" என்று கோபத்துடன் கூறிய தளபதி உடன் தன் வீரனை விட்டு சாட்டையை எடுத்து வர கட்டளையிட்டார்.
"அய்யா அடிச்சிடாதீங்க. அது மகா பாவமா போயிரும். வேணாமுங்க. நான் சத்தியமாக எடுக்கலீங்க. தயவு செய்து தண்டனை கொடுத்து பெரும் அநீதி செய்து விடாதீர்கள்" என்று அவன் அச்சத்திலும் பீதியிலும் அதே சமயம் தன் மீது உள்ள நம்பிக்கையிலும் அவ்வாறு உரக்க குரலிட்டு கத்தினான்.
சாட்டை கொண்டு வரப்பட்டது.
தளபதி சாட்டையை ஓங்கி தூக்கி அவனை அடிப்பதற்குள் நாட்டின் குலசாமியை வேண்டிக்கொண்டே மயங்கி விழுந்தான் கோவிந்தன்.
அரண்மனையில் அமளி நடக்கிறது. என்னவோ ஏதோ என்று அஞ்சியபடி பாதி தூக்கத்தில் இருந்த இளவரசன் அங்கு வந்தான்.
"அட, ஏன் கோவிந்தன் மயங்கி கிடக்கிறான்? ஏன் தளபதி சாட்டையை வைத்திருக்கிறார். அப்படி என்ன தப்பு நடந்து விட்டது?" என்று இளவரசன் கேட்க தளபதி விவரம் கூறினார்.
"ஓ" என்று அதிர்ந்தவன் உடன் ஞாபகம் வரவும் தன் கழுத்தில் அணிந்திருந்த அந்த ஜப மாலையை எடுத்து இராஜமாதாவிடம் கொடுத்தான்.
"இதை ஏன் நீ எடுத்தாய்?" மன்னர் கேட்டார்.
"மகாராஜா. நம் வேற்று நாட்டு இளவரச நண்பர்களுடன் நான் ஒரு மலைக்கோயில் சென்றேன். அப்போது தங்க சங்கிலி கழுத்தில் இருப்பதை விட இராஜ மாதாவின் ஜப மாலை இருந்தால் பக்தி பூர்வமாக இருக்கும் என்று நம்பி அதை எடுத்து அணிந்து கொண்டு; மற்ற இளவரச நண்பர்களுடன் மலைக்கோயில் சென்று வந்தேன். ஆனால் ஜப மாலையை மறந்து என் கழுத்திலேயே அணிந்து உறங்கிவிட்டேன். மன்னியுங்கள்" என்றான் இளவரசன்.
"அது சரி அப்படி எடுக்கும் முன் என் அனுமதி பெற வேண்டாமா?" என்றார் இராஜமாதா.
"தாங்கள் கோபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்தான் எடுத்தேன்," என்றான் இளவரசன்.
"ஆனால், இப்போது இருபது ஆண்டுகள் என்னிடம் விசுவாசமாக பணியாற்றிய கோவிந்தன் சாட்டை அடி வாங்க பார்த்தானே. மயங்கி விழுந்து விட்டானே. இது தேவையா. உன்னால்தானே இதெல்லாம் நிகழ்ந்தது" என்று இராஜமாதா கடிந்து கொண்டார்.
அப்போது மெல்ல மயக்கம் தெளிந்து எழுந்தான் கோவிந்தன். அவனுக்கு உண்மை தெரிவிக்கப்பட்டது. அவனை வீட்டுக்கு செல்லலாம் என்று இராஜமாதாவும் மன்னரும் கூறினார்கள்.
இப்போது அவன் பேசினான்.
மன்னா நான் சொல்வதை அருள் கூர்ந்து கேட்க வேண்டும்.
"என்ன, சொல் கோவிந்தா" என்றார் மன்னர்.
"எங்கள் குடும்பம் பரம்பரை பரம்பரையாக அரண்மனைக்கு சேவகம் செய்து வருகிறது. என் தந்தை அரண்மனை கூலி தொழிலாளிதான். நான் சிறுவனாக இருக்கும் போதே என்னையும் அரண்மனைக்கு அழைத்துக்கொண்டு வந்து விடுவார். பிறகு எனக்கு தெரிந்து பத்து வயதில் இருந்து இராஜமாதாவிடம் பணி புரிகிறேன். எனக்கு இப்போது வயது முப்பது. இதுவரை நான் விசுவாசமாகத்தான் பணி செய்தேன். ஒரு வேலைக்காரனையும் முதலாளியையும் இணைக்கும் பாலமே நம்பிக்கைதான். இந்த ஜப மாலை விஷயத்தில் அந்த நம்பிக்கை என்ற பாலம் உடைந்து விட்டது. இனியும் நான் இங்கு வேலை செய்தால் அது எனக்குத்தான் அவமானம். எனக்கு உடல் வலு இருக்கிறது. வயது இருக்கிறது. அதனால் நான் எங்காவது சென்று பிழைத்துக்கொள்வேன். இந்த இரவில் இருந்து நான் என் பதவியை இராஜினாமா செய்கிறேன். என் குடிசையை காலி செய்து நான் நாட்டை விட்டு போவதற்கு ஒரு வாரகாலம் அவகாசம் எடுக்கும். அதுவரை நாட்டில் தங்குவதற்கு எனக்கு அனுமதி தர மன்னரை வேண்டுகிறேன்" என்றான் கோவிந்தன்.
"அய்யோ, கோவிந்தா. அதான் மாலை கிடைத்து விட்டதே. நீ போகாதே. ஒரு அரண்மனையில் ஏதாவது ஒரு பொருள் காணவில்லை என்றால் உடனே வேலை செய்பவர்களை விசாரிக்கத்தான் செய்வார்கள். அதனால் வருத்தப்படாதே. நீ வேலையில் தொடர்ந்து இரு. உனக்கு இன்னும் அதிக சம்பளம் போட்டு தர சொல்கிறேன்" என்றார் இராஜமாதா.
"மன்னிக்கனும் இராஜமாதா. விசாரிப்பதற்கும் விலங்கிட்டு குற்றவாளியாக அழைத்து வருவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. நான் கூறியதை நம்பாமல் உண்மையை வரவழைக்கிறேன் என்று குரலிட்டு சாட்டையை எடுத்து வரச்செய்தது எந்த விதத்தில் நியாயம். இப்போது என் மனசு காயப்பட்டு விட்டதே. அதுவும் ஆறாத காயம். இவன் இப்படிப்பட்டவனாக இருப்பான். இவன் இந்த காரியத்தை செய்யமாட்டான். இருபது ஆண்டுகள் ஒரு சிறு தவறு கூட செய்யாதவன் இந்த பெரும் தப்பை செய்வானா என்ற சிறு சிந்தனை கூட ஏன் நம்பிக்கை கூட இல்லாமல் கைது செய்து இழுத்து வந்தது குற்றத்திலும் பெரும் குற்றம். நான் சிறு தொழிலாளியாக இருந்தாலும் என் மனசாட்சி இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் என்னை விடுவியுங்கள்" என்று அழுதான் கோவிந்தன்.
இராஜமாதாவும் அழுதார். "கோவிந்தா போகாதேடா. ஏதோ தவறு நிகழ்ந்தது உண்மைதான். ஆனால் உன்னை போன்ற நேர்மையான பணியாள் கிடைக்கமாட்டான்டா. போகாதே" என்று இராஜமாதா மன்றாடி கேட்டுக்கொண்டார்கள்.
"இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் நீங்கள் நிச்சயம் கோவிந்தன் இதை செய்திருக்க மாட்டான் என்று நம்பவில்லையே. அப்ப என் மீது உள்ள நம்பிக்கை போய் விட்டதல்லவா. அதைத்தானே நான் ஒரு பணியாளுக்கும்; முதலாளிக்கும் உள்ள பாலம் என்று கூறினேன். அந்த பாலம் சுக்கு நூறாக உடைந்த பிறகு எப்படி இங்கு நான் வேலை செய்ய முடியும்" என்று உரக்கவே கேட்டான் கோவிந்தன்.
"சரி, மன்னன் என்ற முறையில் நான் ஒரு உத்தரவு பிறப்பிப்பேன். அதற்கு நீ சம்மதித்துதான் ஆக வேண்டும்" என்றார் மன்னர்.
அவன் எதுவும் பேசாது நின்றிருந்தான்.
ஒரு வீரனை அழைத்தார் மன்னர். அவனும் ஓடிவந்தான்.
உடன் கோவிந்தன் கண்களை துணியால்; கட்டு என்றார்.
கோவிந்தன் கண்கள் கட்டப்பட்டன.
உடன் கோவிந்தனை மன்னர் கைத்தாங்கலாக அழைத்து சென்று மன்னர் அமரும் சிம்மாசனத்தில் அமர வைத்தார்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
உடன் மன்னர் அறிவுரைப்படி ஜப மாலை கோவிந்தன் கழுத்தில் அணிவிக்கப்பட்டது.
இப்போது இளவரசனுக்கு மன்னர் உத்தரவிட்டார்.
"அடே இளவரசா, நீ செய்த சிறு தவறு இன்று ஒரு நிரபராதியை ஒரு நேர்மையான பணியாளை சிறைபிடித்து தண்டிக்கும் நிலை உருவாயிற்று. மூல காரணம் நீதான். உடன் இந்த கோவிந்தனை மூன்று முறை வலம் வந்து நமஸ்காரம் செய்" என்றார்.
அவனும் தன் தவறை உணர்ந்தும் கோவிந்தனின் உழைப்பின் பெருமை உணர்ந்தும் அவன் அமரவைக்கப்பட்டிருந்த மன்னர் சிம்மாசனத்தை மூன்று முறை வலம் வந்து அவன் பாதங்களில் விழுந்து மன்னிப்பு கேட்டு எழுந்தான்.
அடுத்து இராஜமாதா. "தன் பணியாளின் நேர்மை குணம் தெரியாமல் அவனை சந்தேகப்பட்டது மாபெரும் குற்றம் எனவே வயதான காரணத்தால் ஒரு முறை சுற்றி வந்து பாதம் பணி" மன்னர் கட்டளை கொடுக்க இராஜமாதாவும் அப்படியே செய்தார்கள்.
"இராஜமாதாவின் பேச்சை கேட்டு தீர விசாரிக்காமல் உன் சேவைத்தன்மையை புரிந்து கொள்ளாமல் ஒரு மன்னன் என்ற ஆணவத்தில் கைது செய்து அழைத்துக்கொண்டு வரச்செய்தது மாபெரும் குற்றமே" என்று கூறியவர் தன் மகாராணியுடன் மன்னரும் மூன்று முறை வலம் வந்து அவனை பாதம் தொட்டு வணங்கினார்.
சிறுவர் சிறுகதை: முத்தான 2 முல்லா கதைகள்"அடுத்து தளபதி தன்னிடம் வேலை செய்யும் ஒரு பணியாள் இப்படி இருப்பான் இருக்க மாட்டான் என்பது கூட தெரியாமல் சாட்டையை ஓங்கியது பெரும் குற்றம். அவருக்கும் அதே தண்டனைதான்" என்றதும் தளபதியும் மூன்று முறை வலம் வந்து அவன் பாதம் தொட்டு வணங்கினார்.
பின் அவன் கட்டுக்கள் அவிழ்த்து விடப்பட்டன.
விவரம் புரிந்த கோவிந்தன் "அய்யோ, ஏன் இப்படி செய்தீர்கள்" என்று கூறி அழுதபடி இராஜமாதா காலில் விழுந்தான்.
சிறுவர் சிறுகதைகள்: உறுதியான மனமும், உண்மையான வெற்றியும்!"இல்லை, இல்லை, நாங்கள்தான் விழ வேண்டும். அதையும் செய்து விட்டோம். தப்பு செய்த நாங்கள் உடனே தண்டனை பெற்று விட்டோம். எனவே இந்த சம்பவம் நல்லபடியாக முடிவுக்கு வந்து விட்டது. நாளை முதல் நீ பழைய கோவிந்தனாக வேலைக்கு வரவேண்டும்" என்று இராஜமாதா கூறவும் கோவிந்தனும் "சம்மதம்" என்று கூறி அழுத கண்களை துடைத்து கொண்டான்.
மன்னர் அவனுக்கு பாலும் பழமும் இனிப்புகளும் கொடுத்து உண்ண செய்து பின் அவனை ஒரு பல்லக்கில் வீட்டில் கொண்டு விட ஆணை பிறப்பித்தார்.
"கோவிந்தா உன் மூலம் இன்று ஒன்றை நான் புரிந்து கொண்டேன்.
ஆம் மன்னன் என்பவன் வெறும் அதிகாரம் படைத்தவன் மட்டும் அல்ல. மாறாக ஒவ்வொரு மனிதனின் செயல் அவன் குணம் இதை தெரிந்து ஆட்சி செய்ய வேண்டும். வெறும் குருடனாக ஆட்சி செய்யாமல் குணவானாக சிறந்த நீதி பரிபாளனம் செய்யும் ஒருவனாக அதே சமயம் தவறு ஒரு மன்னனோ இளவரசனோ இல்லை இராஐ மாதாவோ செய்தாலும் செய்த தவறுக்கு தகுந்த தண்டனை கொடுத்து ஆட்சி செய்தால்தான் அவன் அமரும் சிம்மாசனத்துக்கு அது பெருமை. அப்படி அமருபவனே மன்னன். இப்போது என் மனசாட்சி என்னை மன்னன் என்று ஏற்றுக்கொள்கிறது" என்றவர் அவனை வாயில் வரை வந்து அவன் பல்லக்கில் ஏறும் வரை இருந்து வழி அனுப்பி வைத்தார்.
நீதி: தப்பு செய்தவன் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். குணவான் சத்தியவான் நிச்சயம் போற்றப்பட வேண்டும். அப்போதுதான் மன்னனின் கொற்றம் புகழப்படும். அதுவே சிறந்த ஆட்சியாகவும் இருக்கும்.

