Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சுவிஸ் எங்கெல்பெர்க் லாங்க் வீக் எண்ட் அனுபவம்: பசுமை மலைகளில் உடல்-மனம் ஃபிட்டாகும் பயணம்!

சுவிஸ் எங்கெல்பெர்க் லாங்க் வீக் எண்ட் அனுபவம்: பசுமை மலைகளில் உடல்-மனம் ஃபிட்டாகும் பயணம்!

Kalki Online 1 week ago

சுவிசில் பெரும்பாலும் லாங்க் வீக் என்ட் வந்தால், அவரவர்கள் காரை எடுத்துக்கொண்டு ஒரு நாள் பயணமாகவோ, இரண்டு, மூன்று நாட்கள் பயணமாகவோ வெளியில் சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.

வீட்டைப் பூட்டாமல் சாத்தி விட்டுச் சென்றாலே போதும் என்கிற அளவுக்கு இங்கு பாதுகாப்பு பக்காவாக இருப்பது வியப்பை அளிக்கிறது. இந்த வாரம் திங்கட்கிழமையும் இங்கு தேசீய விடுமுறையாகையால் விடுமுறை நாட்கள் மூன்றாகிவிட்டன.

பொழுது போக்கு அம்சங்களோடு நடைப்பயிற்சி, சைக்கிளிங் போன்றவற்றையும் இணைத்துக் கொள்வதே இங்குள்ளவர்களின் வழக்கம். உடற்பயிற்சிக்கு ஊக்கம் அளித்துச் செயல்படுவதனாலேயே இங்குள்ளவர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது.

அந்தக் காலத்தில் எனது புலவர் நண்பர் உத்திராபதி, பணி நிமித்தம் சில காலம் சென்னை தி.நகரில் தங்கி விட்டு ஊருக்கு வந்தார். தி.நகரின் வீட்டு வாசல்களில், காலையிலேயே பாட்டிமார்கள் தி ஹிந்து நாளிதழைப் படிப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனதாகக் கூறினார். அது போலவே இங்கு வயதானவர்களும் வாக் போவது சாதாரணம்.

நாங்கள் வசிக்கும் காட்டிகன் பகுதியிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரக் கார் பயண தூரத்தில் உள்ளது எங்கெல்பெர்க். கீழிருந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ரோப் காரில் சென்று இறங்கிக் கொள்ளலாம். அங்கிருந்து மலையுச்சி வரை செல்ல ரோப் சீட்டரில் செல்லவேண்டும். இந்த எங்கெல்பெர்க்கை இரண்டு விதங்களில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். குளிர்காலத்தில் 'ஸ்கீ' என்று சொல்லப்படும் பனி சறுக்கு விளையாட்டுக்களை நடத்துகிறார்கள். சம்மரில் ரோப் காரிலிருந்து இறங்கி கீழே நடந்து வரவும், மேலே சென்று வரவும் வசதிகள் செய்து வைத்துள்ளார்கள்.

பசுப் பண்ணைகள் ஆங்காங்கே உள்ளன. மலைச் சரிவுகளில் மாடுகள் மேய்வதைப் பார்க்கவே தனி அழகு. நம்மூரைப்போல், எலும்புகள் தெரியும் மாடுகளை இங்கு எங்குமே பார்க்க முடியவில்லை. 'பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே!'என்ற பாடலைப்போல,'புல்லிலே பிறந்து புல்லிலே வளரும் சுவிஸ் பசுக்களே!'என்று பாடத் தோன்றுகிறது. பசுமை நிறைந்த மலைகளில் வாழ அவை கொடுத்து வைத்துள்ளன போலும்!

கடற்கரை, அரண்மனை, நீர்வீழ்ச்சி: கொச்சியின் டாப் 7 சுற்றுலா இடங்கள்!

சரி! இதோ பாருங்கள்! நாம் போகவேண்டிய ரோப் கார் வந்துவிட்டது. இதில் உட்கார சீட்டெல்லாம் கிடையாது.'ஸ்கீ'செய்யச் செல்பவர்கள் தங்கள் தளவாடங்களைக் கொண்டு செல்ல ஏதுவாகவும், சைக்கிள்களை எடுத்துச் செல்ல வசதியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு. ஐந்தாறு நிமிடப் பயணத்திலேயே நாம் மேலே வந்துவிடுகிறோம்.

கால்களை நீட்டி உட்கார்ந்து ,இடையிலுள்ள கார் கியர் போன்ற கம்பியைப் பிரேக்காக உபயோகித்துப் பயணம் செய்ய வேண்டும். தகர அமைப்பின் மீது இது ஓடும். வேகந்தானே மனிதனின் விரும்பத்தக்க ஒரு செயல். பெரியவர்களும் குழந்தைகளும் இதில் விருப்பமுடன் பயணம் செய்கிறார்கள்.

சற்று தூரம் நடந்து சென்றால் ரோப் சீட்டரில் கால்களைத் தொங்கப் போட்டபடி பயணம் செய்து உச்சியை அடையலாம். அங்கிருந்து திரும்ப எந்திரத்தின் மூலமே ஏறிய இடத்திற்கே திரும்பலாம். ஆனால் இங்குள்ளவர்களோ, அங்கிருந்து இறங்கி நடந்தே ரோப் கார் வரை வருகிறார்கள். அங்கிருந்தும் நடந்தோ, சைக்கிளிலோ கீழே வரவும் நல்ல பாதைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். பல இடங்களில் லிப்ட் இருந்தாலும், அதிக வயதானவர்களும், படியேறுவதில் சிரமம் உள்ளவர்களும் மட்டுமே லிப்டை நாடுகிறார்கள். உடலை பிட்டாக வைத்துக்கொள்வதில் அனைவருமே அதிக சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.

நாங்கள் ரோப் காரில் சென்றோம். பின்னர் டோபோ ரைட் சென்று வந்தோம். ரெஸ்டாரண்டில் அமர்ந்து சாப்பிட்டோம். அதிக ஸ்லோப் இல்லாத பாதைகளில் மலையழகை ரசித்தபடி;

கீழே தீப்பெட்டிகளாய்த் தெரியும் வீடுகளைப் பார்த்தபடி; எதிர் மலையில் இயற்கை அழகில் இந்திய வரை படம் தெரிவதை வியந்து நோக்கிய படி;

மலையடிவாரத்தில் ரயில்களும்,பஸ்களும் சிறுவர்கள் விளையாட்டுப் பொம்மைகள் போல் ஊர்ந்து செல்வதை வேடிக்கை பார்த்தபடி;

வீக்கெண்டில் ஒரு சூப்பர் ட்ரெக்கிங் போக ஆசையா... இந்த அட்டகாசமான மலைக்கு உடனே கிளம்புங்க!

மேலே மலைகளில் பாரா க்ளையிடினர் வட்டமடித்ததை வியந்து நோக்கியபடி; இப்படிப் படிப்படியாய் உற்சாகத்தை உள்ளத்தில் ஏற்றிச் சுமந்தபடி;

இவைகளை உள்ளம் சுமக்கையில் அது எப்படி லேசாகிறது என்ற புதிருக்கு விடை ரோப் கார் நிலையத்தை அடைய, எங்களைக் கீழே கொண்டு செல்ல அது மேலே வந்து கொண்டிருந்தது! அடுத்ததில், குளிருக்கு இதமாக வாட்டர் பால்ஸ் சென்று வருவோம்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online