Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தன்னம்பிக்கை கதைகள் 2!

தன்னம்பிக்கை கதைகள் 2!

Kalki Online 3 weeks ago
 MM strip

1. ராஜம்மா:

 தமிழ் கதைகள் | a young man is speaking with old woman

'என்ன வாழ்க்கை இது? எதுவுமே நாம நினைக்கற மாதிரி நடக்கறதில்ல.

வெறுப்பா இருக்கு,' தனியே புலம்பியபடியே நடந்தேன்.

என்ன செய்வது, மென்பொருள் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தேன். கை நிறைய சம்பளம், அழகான மனைவி, இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை, ஆசை ஆசையாய் வாங்கின வீடு, நிறைவான வாழ்க்கை. எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது.

திடீரென இதில் சூறாவளி வீசினால்? ஆட்குறைப்பு என்று சொல்லி என்னை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள். ஒரு மாதமாக வேறு வேலைக்கு முயற்சிக்கிறேன். எதுவும் ஒழுங்காக அமையவில்லை. வாழ்வே வெறுமையான ஒரு உணர்வு. இருக்கும் சேமிப்பில் நாட்களை நகர்த்த, சேமிப்பு தேய்ந்துகொண்டிருக்கிறது. வீட்டு லோன் வேறு போய்க்கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் என்ன செய்யப்போகிறேன் என்று தெரியாமல் புதிரான நாட்களை எதிர்கொள்வது அத்தனை சுலபமில்லை.

மனம் முழுவதும் இனம்புரியாத ஒரு பயம். எதிர்காலம் பற்றிய கேள்விகள் துரத்துகின்றன. இதுபோல் ஒரு சூழ்நிலை வருமென்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.

திடீரென வாழ்க்கை சூன்யமான ஒரு உணர்வு. எதிலும் பிடிப்பில்லாமல் ஏதோ வாழ்க்கை ஓடுகிறது. குழம்பிய மனதுடன் வந்த என் கண்ணில் ராஜம்மா எதிர்ப்பட்டார்.

ராஜம்மா, நாங்கள் முன்பு குடியிருந்த வீட்டில் வீட்டு வேலை செய்தவர். நாங்கள் புதுவீடு வாங்கி வந்தபிறகு இன்றுதான் அவரை மறுபடி பார்க்கிறேன்.

"என்ன ராஜம்மா, எப்படியிருக்கீங்க? உங்க வீட்டுக்காரர் பசங்க எல்லாம் நல்லாயிருக்காங்களா?"

"அடடே, வருண் தம்பி நீங்களா? நாங்க நல்லாயிருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க? அம்மா நல்லாயிருக்காங்களா? பொண்ணுதானே உங்களுக்கு, பாப்பா நல்லாயிருக்காளா?"

"எல்லாம் நல்லாயிருக்கோம். ஆமா, என்ன இந்த நேரத்துல இவ்வளவு சாமானோட கடைவீதில? இப்போ வீட்டு வேலைக்குப் போறதில்லையா?"

சிறுகதை: உண்மையான அழகு எது?

"இல்லைங்க தம்பி, என் வீட்டுக்காரருக்கு ஆக்சிடென்ட் ஆகி கால் நடக்கமுடியாம போயிருச்சு. அதனால அவரு தள்ளுவண்டி வியாபாரம் பண்றதில்ல. வீட்டோட இருக்கணும்னு டாக்டர் சொல்லிட்டாரு. அவர வீட்டுல தனியா விட்டுட்டு நான் வீட்டு வேலைக்கு எப்படி தம்பி போகமுடியும்? அதான், இப்ப வீட்டுலயே இட்லி கடை போட்டுட்டேன். அவரும் உக்கார்ந்த மாதிரியே எனக்கு ஒத்தாசையா இருக்காரு. நல்லாப் போகுது தம்பி. எதுக்கும் உபயோகமில்லாம ஆயிட்டமேன்னு அவர் கவலைப்பட்டுட்டு இருந்தாரு. ஆனா இப்போ சந்தோஷமா இருக்கோம் தம்பி. வரட்டுங்களா. அம்மாகிட்ட விசாரிச்சேன்னு சொல்லுங்க."

ராஜம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். படிப்பறிவு இல்லையென்றாலும், இந்த அறுபது வயதிலும் மனம் தளராமல் வாழ்வில் வரும் சவால்களைக் கையாளும் ராஜம்மா என் மனதில் உயர்ந்து நின்றார். மனமிருந்தால் நானும் சாதிக்கமுடியுமல்லவா. வெறுமை நீங்கி, வெற்றிக்கான பாதை கண்ணில் தெரிந்தது. வாழ ஏதோ ஒரு வழியிருக்கும் என்ற நம்பிக்கையுடன் வீட்டிற்குத் திரும்பினேன்.

2. உறவுகளின் பாலம்:

 தமிழ் கதைகள் | Child and family

"அம்…மா…, கவின் என்னைத் தள்ளிவிட்டுட்டான் மா."

முழங்கையில் எட்டிப்பார்த்த ரத்தத்தைக் காட்டி அழுதபடியே சொன்னான் ஆறு வயது செந்தில்.

மலர்விழி, தன் மகனைத் தேற்றி அடிபட்ட இடத்தை சுத்தம் செய்து மருந்து போட்டுவிட்டாள்.

"இதுக்கெல்லாம் அழலாமா செல்லம்? விளையாடும்போது அடிபடறது சகஜம்தானே. அம்மா மருந்து போட்டிருக்கேன், இனிமேல் வலிக்காது."

சிறுகதை: தோட்டக்காரன்..!

அதற்குள்ளாகவே கபிலன் கத்த ஆரம்பித்தான்.

"அவன்கூட சேராதேன்னு சொன்னாக் கேக்கறியா? விளையாடறதுக்கு இவ்ளோ வாங்கிப் போட்டிருக்கேனில்ல. வீட்டுக்குள்ளயே விளையாட வேண்டியதுதானே?"

கோபத்துடன் பெருங்குரலில் தன் தந்தை கத்தியதும் பயத்தில் செந்திலின் அழுகை அதிகமானது. அவனை சமாதானம் செய்து அறைக்குள் அனுப்பிய மலர்விழி, தன் கணவனிடம் பொறுமையாகச் சொன்னாள்.

"என்னங்க இது, குழந்தை மனசுல விஷத்தை விதைக்கறீங்க. குழந்தைங்க விளையாடும்போது இந்த மாதிரி நடக்கறது சகஜம்தான். அதுக்காக வெளியே போகக்கூடாது, யார்கூடவும் சேரக்கூடாதுன்னு இப்படிக் கோபப்பட்டுப் பேசறீங்களே, தப்புங்க."

"ஆமா, முரட்டுத்தனமா இந்தமாதிரி நடக்கற பசங்ககூட எதுக்கு நம்ம பையன் சேரணும்? அப்புறம் எதுக்கு இப்படி அழுதுட்டு வரணும்?"

"உங்க எண்ணம்தான் முரட்டுத்தனமா இருக்கு. இப்படித்தான், ரெண்டு நாள் முன்னாடி கல்யாண வீட்டுல உங்க பெரியப்பா பேரன்கூட செந்தில் விளையாடினதுக்கு கோபப்பட்டீங்க. ஆனா உங்க பெரியப்பாவும், அவங்க மகன் குமரவேல் அண்ணனும் பழைய பகையெல்லாம் மறந்து நம்ம செந்திலைத் தூக்கிக் கொஞ்சி, பழைய கசப்பான சம்பவங்களை மறக்கச் சொல்லி உங்ககிட்டயும் மன்னிப்பு கேட்டாங்க. அதை மறந்துட்டீங்களா?

பிரிஞ்சிருந்த உறவுகளைச் சேர்த்து வச்சது நம்ம குழந்தை செந்தில். உறவுகளை இணைக்கற பாலமா இருக்கறதே குழந்தைங்கதான். குழந்தைங்க மூலமா நமக்கு நிறைய நட்பு கிடைக்குது. உறவுகள் பலப்படுது.

நீங்க இந்தமாதிரி சொல்லி அவனைத் தனிமைப்படுத்திடாதீங்க. அவன் வளர்ந்தபிறகு சமூகத்தை எதிர்கொள்ளக்கூடிய பக்குவமே இல்லாம போயிரும்."

தன் மனைவியின் பேச்சில் இருந்த உண்மை உறைக்க, தன் தவறை உணர்ந்தான் கபிலன்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online