Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உங்கள் இலக்கை அடைய இதுதான் ஒரே வழி!

உங்கள் இலக்கை அடைய இதுதான் ஒரே வழி!

Kalki Online 2 months ago

வாழ்க்கையில் ஒருவருடைய வெற்றியை தீர்மானிப்பதில் பயிற்சியும் முயற்சியுமே முக்கிய பங்கு வகிக்கும். இவை இரண்டின் சேர்க்கை மட்டுமே நாம் நினைத்த இலக்கை அடைய உதவும்.

எந்த ஒரு செயலுக்கும் முயற்சிதான் தொடக்கப் புள்ளியாக இருக்கும். ஒரு காரியத்தை எப்படி செய்வது என்று சிந்தித்து, அதை தொடங்குவதற்கான துணிச்சலையும் ஈடுபாட்டையும் இந்த முயற்சி தான் தருகிறது.

ஒருவர் வாழ்வில் தான் நினைத்ததை அடைய முடியாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்றுதான் பொருள். வெற்றி பெறாமல் இருப்பது தோல்வி அல்ல முயற்சி செய்யாமல் இருப்பதே தோல்வி என்பதை உணரவேண்டும்.

எந்தவொரு புதிய செயலையும் தொடங்குவதற்கும், தோல்வியைக் கண்டு சலியாமல் தொடர்ந்து செயல்படுவதற்கும் முயற்சி மிகவும் அவசியம். தொடர்ச்சியான முயற்சி மட்டுமே ஒருவரை எந்தத் துறையிலும் நிபுணராக ஆக்கும். தொடர்ச்சியான முயற்சியும், பயிற்சியின் மூலமுமே நம் திறன்கள் மெருகேறுகின்றன. இதனால் தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது.

 விடாமுயற்சி

ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப ஆர்வத்துடன் பயிற்சி செய்யும் பொழுது நாம் அந்த விஷயத்தில் நிபுணத்துவம் பெற்று விடுகிறோம். யாருமே நிபுணர்களாக பிறப்பதில்லை; பயிற்சியால்தான் உருவாக்கப் படுகிறார்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் தொடர்ச்சியாக செய்த பயிற்சிகளின் மூலம்தான் வெற்றி காண முடியும்.

எவ்வளவு படித்த புத்திசாலியாக இருந்தாலும் ஒரு வேலை அல்லது தொழிலில் சேர்வதற்கு முன்பு அதற்கான பயிற்சியைப் பெறுவது அவசியம். இதனால்தான் பெரிய நிறுவனங்கள் கூட பயிற்சி மையங்களை அமைத்து, புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு பயிற்சி வழங்குகிறார்கள். இதைத்தான் நம் முன்னோர்கள் 'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' என்று சொல்லியுள்ளனர்.

எந்த ஒரு வேலையுமே தொடர்ந்து பயிற்சி செய்ய செய்ய அதில் தேர்ச்சி பெறமுடியும். முயற்சி (effort), பயிற்சி (practice) இரண்டும் ஒருவரின் வெற்றியை தீர்மானிக்கும் மிக முக்கிய தூண்களாகும்.

எந்த ஒரு வேலையையுமே பயிற்சியால் தான் எளிதாகச் செய்ய முடியும். உதாரணத்திற்கு நம்முடைய சின்ன வயதில் நாம் பலமுறை விழுந்து எழுந்து நடக்க பழகினோம். பலமுறை அடிபட்டாலும் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டோம். நீந்துவதற்கு பலமுறை தண்ணீர் குடித்து நீச்சலை கற்றுக்கொண்டோம்.

இப்படி அனைத்துமே நாம் மேற்கொண்ட இடைவிடாத முயற்சி மற்றும் பயிற்சியால்தான் சாத்தியமாயிற்று. அப்படி மேற்கொண்ட பயிற்சியினால்தான் இன்று நம்மால் அவற்றை மிகவும் எளிதாகச் செய்ய முடிகிறது.

முயற்சி திருவினையாக்கும். ஆனால் பயிற்சி இல்லாத முயற்சியால் எந்தவொரு பயனும் இல்லை. விடாமுயற்சியுடன் கூடிய பயிற்சி வெற்றியைத் தேடித்தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

அமைதியான வாழ்க்கை வேண்டுமா? இன்றே இந்த 8 பழக்கங்களைத் தொடங்குங்கள்!

ஒரு மனிதன் தன் இலக்கை அடைவதற்கு திறமை மட்டும் இருந்தால் போதாது; தொடர்ச்சியான பயிற்சியும், சோர்வில்லாத முயற்சியும் மட்டுமே அவனை வெற்றியாளராக மாற்றும். தடைகள் வரும்போது பின்வாங்காமல் இலக்கை நோக்கி ஓடுவதே உண்மையான முயற்சி. அதேபோல் வெறும் கனவு காண்பதால் மட்டும் வெற்றி கிடைக்காது. அதற்கான உழைப்பை (effort) முதலீடாகப் போடவேண்டும்.

பலமுறை தோல்வியுற்ற பொழுதும் தாமஸ் ஆல்வா எடிசன் தன் முயற்சியைக் கைவிடாமல் உழைத்ததால்தான் அவரால் மின்விளக்கை கண்டுபிடிக்க முடிந்தது. ரொனால்டோ போன்ற சாதனையாளர்கள் தங்களுடைய அசாத்திய திறமைக்குப் பின்னால் தினமும் பல மணி நேரம் கடினப் பயிற்சியை மேற்கொள்கின்றனர்.

ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்து தன்னுடைய தொடர் உழைப்பாலும் லட்சிய முயற்சியாலும் இந்தியாவின் ஏவுகணை நாயகனாகவும், ஜனாதிபதியாகவும் உயர்ந்தவர் நம் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள்.

சோஷியல் மீடியா நிறுவனங்கள் உங்க மனச எப்படி ஹேக் பண்றாங்க தெரியுமா?

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் திறமை என்பது ஒரு வாகனத்தினுடைய இன்ஜின் போன்றது என்றால், பயிற்சியும் முயற்சியும் அதற்குரிய எரிபொருள் (fuel) போன்றது. எரிபொருள் இல்லாமல் வாகனம் நகர முடியாது. எனவே நம் இலக்கு எதுவாக இருந்தாலும் அதில் தினமும் பயிற்சியும் முயற்சியும் மேற்கொள்வதே வாழ்வில் வெற்றியடைய சிறந்த வழியாகும்.

வாழ்வின் எந்தத் துறையிலும் நீங்கள் முன்னணியில் நிற்பதற்கான ரகசியத்தை அறிவீர்கள். சோம்பலைத் தவிர்த்து, பயிற்சியையும் முயற்சியையும் உங்கள் அன்றாட பழக்கவழக்கமாக மாற்றுவதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றியை எளிதாகத் தொடுவீர்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online