Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உங்களது உண்மையான முகம் எது? ஜப்பானியர்களின் 3 முக ரகசியம்!

உங்களது உண்மையான முகம் எது? ஜப்பானியர்களின் 3 முக ரகசியம்!

Kalki Online 5 days ago

பாரம்பரியம் மிக்க பழைய பண்பாட்டைக் கொண்ட ஜப்பானியர் தங்கள் அனுபவ மொழிகளைச் சுருக்கமாகச் சொல்லி வைத்துள்ளனர்.

அவற்றில் ஒன்று உங்களுக்கு மூன்று முகங்கள் உண்டு. அது என்ன மூன்று முகங்கள்? மனிதனுக்கு ஒரு முகம் தானே உண்டு?

ஜப்பானியர் குறிப்பிடும் மூன்று முகங்கள்:

1. முதலாவது - உங்களது பொது வாழ்க்கையில் உலகத்தினரிடையே நீங்கள் காட்டும் முகம்.

2. இரண்டாவது - குடும்பத்தில் நீங்கள் காட்டும் முகம்.

3. மூன்றாவது - உங்கள் அந்தரங்க வாழ்க்கையில் நீங்கள் காட்டும் முகம்.

இந்த மூன்று முகங்களைத் தனித்தனியே வைத்திருப்பதன் மூலமாக வாழ்க்கையை சுமூகமாக நீங்கள் நடத்தலாம்.

தனிப்பட்ட அந்தரங்கச் செய்திகளை வேலை நேரத்தில் சகாக்களுடன் பகிர்ந்து கொள்வது தவறானது. ஜப்பானிய நிறுவனங்கள் உங்கள் வேலை முகத்தை வேலை நேரத்தில் கொண்டிருப்பதைப் பெரிதும் ஆதரிக்கின்றன.

எப்போதும் ஒரே மாதிரியாக ஒரே நிலையைக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

மனித குணாதிசயத்தில் பல அடுக்குகள் உண்டு. தேவையான பொழுது தேவையானவற்றை நீங்கள் காட்டலாம்.

தன்னடக்கத்தை விட்டு விட்டு கண்டபடி நடப்பதானது உங்களது மரியாதையைப் பொது வாழ்க்கையில் குறைத்து விடும்.

முதலாவது முகத்தை ஜப்பானியர்கள் 'டடாமே' என்கின்றனர். இது சமூகத்தில் பிணக்கில்லாமல் இணைந்து வாழ அவசியமானது.

இரண்டாவது முகத்தை 'ஹொன்னே' என்கின்றனர். இது குடும்பத்தினரிடையேயும் நண்பர்களிடையேயும் பக்குவமாக நடந்து கொள்ளும் முகம்.

மூன்றாவது முகம் அந்தரங்க முகம். இது உங்களது அந்தரங்க நம்பிக்கைகள், பயங்கள், கனவுகள் ஆகியவற்றைக் குறிக்கும்.

 மூன்று முகம்

முதல் முகமானது ஜப்பானியர்களின் வாய் வழியே காட்டுகின்ற முகம். இது உலகத்தினருக்கானது. அடுத்தது அவர் மார்பு வழியே காட்டும் முகம். இது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் காட்டும் முகம். மூன்றாவது முகம் எங்கு இருக்கிறது என்பது கடவுளுக்கும் கூடத் தெரியாத ரகசியம். இது தான் ஒருவரின் உண்மையான முகம்.

ஜேம்ஸ் கால்வெல் என்பவர் 1975ல் எழுதிய தனது 'ஷோகன்' என்ற தனது நாவலில் இது பற்றி மேற்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

1633ம் ஆண்டு வாக்கில் போர்த்துக்கீசிய மிஷனரியான ஜோவோ ரோட்ரிக்யூஸ் என்பவர் தான் இதுபற்றி முதன் முதலாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே பலரும் இந்த மூன்று முகங்கள் பற்றிய பொன்மொழி இவரிடமிருந்தே உருவானது என்று சொல்கின்றனர்.

இந்த மூன்று முகங்களைக் கொண்டிருப்பதன் மூலம் சமூக வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும், அந்தரங்க வாழ்க்கையிலும் அவர்களால் ஒரு சமச்சீர்தன்மையைக் கொண்டிருக்க முடிகிறது என்பது நிபுணர்களின் கருத்து.

முதலாவதாக சமூக வாழ்க்கையில் சிரித்துப் பேசி ஜோக்குகளை உதிர்த்து தன்னையும் மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்திருக்கும் முகம் சமுதாயத்திற்கானது.

இரண்டாவது சொல்ல வேண்டிய விஷயங்களை மட்டும் சொல்லி நண்பர்களையும் குடும்பத்தினரையும் கவலையின்றி வாழ வைக்கும் முகம் குடும்ப முகம்.

மூன்றாவதாக உண்மையான தன்னைத் தானே அலசி ஆராய்ந்து அந்தரங்கங்களை பரிசீலித்து தன்னை விமரிசித்துக் கொள்ளும் முகம். இந்த முகம் நன்றாக இருந்தால் மற்ற இரு முகங்களும் நன்றாக இருக்கும்.

கஷ்டம் வந்தா மனசு ஏன் முடங்கிப்போகுது? மூளையின் இந்த ரகசியத்தை தெரிஞ்சுக்கோங்க!

இந்த மூன்று முகங்களுமே ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது. சமுகத்தையும் குடும்பத்தையும் குழப்பத்திற்கும், கலவரத்திற்கும் உள்ளாக்காமால் இருக்க இந்த மூன்று முகங்கள் தேவை தான்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது தமிழ்ப் பழமொழி. ஒத்திகை பார்க்காமல் உள்ளதை உள்ளபடி சமயத்திற்குத் தக்கபடி பேசுவது நல்ல பண்பாகும்.

உள்ளதைத் தான் எப்போதும் எங்கும் சொல்வேன் என்பது சமூக நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று.

ஆகவே இந்த மூன்று முகம் என்ற கொள்கையை உணர்ந்து கடைப்பிடித்தால் வாழ்க்கையில் கசப்பான தருணங்களை நிச்சயம் தவிர்க்கலாம்.

எல்லோரும் பல அடுக்குகளைக் கொண்டவர்கள் தான் என்பதை சற்று கூர்ந்து கவனித்தால் நன்கு புரிந்து கொள்ளலாம்.

எந்த நேரமும் பணம் வேலைனு ஓடுற ஆளா நீங்க… அப்போ இத உடனே படிங்க!

உலகத்திற்கு நீங்கள் காட்டும் முகத்தால் நீங்கள் சமூகத்துடன் ஒத்துப் போய் வாழ்க்கையை நடத்த உதவும்.

உங்கள் குடும்பத்தினரிடம் நீங்கள் காட்டும் முகம் உங்களை அவர்களுடன் நன்றாக இழைய வைக்கும்.

உங்கள் அந்தரங்க முகம் உங்களை அலசி ஆராய வைக்கும்.

இதை நன்கு உணர்ந்து கொண்டால் ஏற்படும் மகத்தான நன்மை: நிங்கள் ஒருபோதும் உங்களுடனேயே சண்டை போட்டுக் கொள்ள மாட்டீர்கள்! சரி தானே, நண்பர்களே!

உங்கள் மீதான தேவையற்ற சுய விமர்சனங்களைத் தவிர்த்து, உங்களை நீங்களே முழுமையாகப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவத்தைப் பெறுவீர்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online