Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உண்மையான பசுமை பட்டாசு எது? எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?

உண்மையான பசுமை பட்டாசு எது? எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?

Kalki Online 1 week ago

தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது வண்ணமயமான பட்டாசுகளும் வாண வேடிக்கைகளும் தான். ஆனால், அது சுற்றுச்சூழலுக்கும் உடல்நலனுக்கும் ஏற்படுத்தும் பாதிப்புகள் கவலை அளிக்கிறதா?

கவலை வேண்டாம், அதற்கொரு சிறந்த மாற்றாக வந்துள்ளது 'பசுமைப் பட்டாசு'! இந்த பசுமைப் பட்டாசுகள் பற்றிய உண்மைகள் என்ன? உண்மையான பசுமைப் பட்டாசுகளை எப்படி அடையாளம் காண்பது? முழு விவரங்களையும் இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

தீபாவளி என்றால் புத்தாடைகள் இனிப்புகளுடன் பட்டாசுகளும் களத்தில் வெடிக்கும். தீபாவளி அன்று வண்ணங்கள் பொழியும் வாண வேடிக்கைகள் ஊரெங்கும் இரவையும் பகல் போல பளிச்சிட வைக்கும். பட்டாசை விரும்பாதவர்களையும் வேடிக்கை பார்க்க வைக்கும் வானில் வெடிக்கும் இந்த பட்டாசு வண்ணக் கோலங்கள்.

பட்டாசுகள் வெடிப்பது அனைவருக்கும் இஷ்டமானதுதான்.. ஆனால் அதே சமயம் அதிலிருந்து வரும் புகை சுற்றுச்சூழலைக் கெடுப்பதுடன் நமது உடல்நலத்துக்கும் பாதிப்பு உண்டாக்குவதை கவனிக்க வேண்டும். சரி அதற்காக வருடத்தில் ஒரு தடவை வரும் தீபாவளிக்கு நாங்க பட்டாசு வெடிக்கக் கூடாதா என கேட்பது புரிகிறது. கவலை வேண்டாம்.. இருக்கவே இருக்கிறது பசுமைப் பட்டாசு. அதென்ன பசுமைப் பட்டாசு? வாருங்கள் இந்தப் பதிவில் காணலாம்.

பசுமை பட்டாசு (Green Crackers) என்பது வழக்கமாக பயன்படுத்தும் பட்டாசுகளை விடக் குறைந்த அளவு காற்று மாசு குறைவான நச்சுத்தன்மையுள்ள துகள்களை வெளியிடும் வகையிலும் மற்றும் குறைவான ஒலியை ஏற்படுத்தும் வகையிலும் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசுகள் ஆகும்.

இவை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) கீழ் இயங்கும் நீரி (NEERI - National Environmental Engineering Research Institute) அமைப்பால் கண்டுபிடிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டவை. இந்தியாவில் பசுமை பட்டாசுகள் முதன்முதலில் 2019-ஆம் ஆண்டு புதுடெல்லியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன என்றாலும் அவற்றின் ஆராய்ச்சிப் பணிகள் 2018-ஆம் ஆண்டிலேயே தொடங்கியதாக தெரிகிறது.

தூங்கும்போது பறவைகள் மட்டும் கீழே விழாமல் இருப்பதன் சீக்ரெட் இதுதான்!

2018 ம் ஆண்டு இந்தியாவில் காற்று மாசைக் குறைப்பதற்காக பசுமை பட்டாசுகளை உருவாக்கும் ஆராய்ச்சியை CSIR ஆய்வகங்கள் தொடங்கியதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் காரைக்குடியில் உள்ள CSIR-CECRI மற்றும் நாக்பூரில் உள்ள CSIR-NEERI உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்கள் பசுமை பட்டாசுகளை உருவாக்குவதில் பங்களித்தன. 2019 ல் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரால் புதுடெல்லியில் பசுமை பட்டாசுகள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.

தமிழ்நாட்டில் காரைக்குடி மட்டுமின்றி சிவகாசி பட்டாசுத் தொழிலும் அவற்றின் உற்பத்தியில் முக்கியப் பங்களிப்பை தந்த நிலையில் 2020ம் ஆண்டு தீபாவளியில் இருந்து சிவகாசியில் தயாரிக்கப்பட்ட குறைந்த மாசு வெளியிடும் பட்டாசுகள் சந்தையில் பரவலாகக் கிடைக்கத் தொடங்கின.

பசுமைப் பட்டாசின் சிறப்புகள் இங்கு..

வழக்கமான பட்டாசுகளை விட 30% முதல் 40% வரை குறைவான காற்று மாசுபாட்டையே (தூசி மற்றும் நச்சு வாயுக்கள்) உருவாக்குகின்றன.

சாதாரண பட்டாசுகள் சுமார் 160 டெசிபல் சத்தத்தை எழுப்பும் நிலையில், பசுமை பட்டாசுகள் சுமார் 110 டெசிபல் அளவிலான ஒலியை மட்டுமே ஏற்படுத்துகின்றன.

சாதாரண பட்டாசுகளை விட இதில் நச்சு உலோகங்கள் குறைவு. குறிப்பாக பேரியம் நைட்ரேட் (Barium nitrate) போன்ற ஆபத்தான வேதியியல் பொருட்கள் தவிர்க்கப்பட்டுள்ளன அல்லது மிகக் குறைவாகப் பயன்படுத்தப்படுவது சிறப்பு.

 பசுமை பட்டாசு | Green Crackers

உண்மையான பசுமை பட்டாசுகளை எப்படிக் கண்டறிவது?

வாங்கும் பட்டாசுப் பொட்டலத்தில் CSIR-NEERI தொடர்பான அங்கீகார விவரங்கள் மற்றும் QR குறியீடு உள்ளதா எனப் பாருங்கள். மேலும் உற்பத்தியாளர் விவரங்கள் மற்றும் உரிம விவரங்களைச் சரிபாருங்கள்.. அத்துடன் நம்பகமான, உரிமம் பெற்ற விற்பனையாளரிடமிருந்து வாங்குவதே சிறந்தது.

வெறும் 'Green Crackers' என்ற பெயர் அல்லது விளம்பரத்தை மட்டும் நம்புவதைத் தவிருங்கள்.

அப்படியென்றால் பசுமை பட்டாசுகள் முழுமையாகப் பாதுகாப்பானவையா?

நிச்சயமாக இல்லை. பசுமை பட்டாசு என்பது மாசை முற்றிலும் ஏற்படுத்தாத பட்டாசு அல்ல; மாசு உமிழ்வைக் குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட பட்டாசு அவ்வளவே. அவற்றிலும் புகை மற்றும் நுண்துகள்கள் வெளிப்படலாம். இதனால் குழந்தைகள், முதியவர்கள், ஆஸ்துமா உள்ளவர்கள் பாதிக்கப்படலாம். வெளிப்படும் தீப்பொறியினால் தீக்காயம் மற்றும் கண் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஒலியால் காது பாதிப்பு ஏற்படலாம். எனவே, பசுமை பட்டாசுகளையும் குறைந்த அளவில், பாதுகாப்பான இடத்தில், உரிய முன்னெச்சரிக்கைகளுடன் மட்டுமே வெடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமையல் குப்பையைத் தூக்கி எறியறீங்களா? இந்தத் தவறை இனி செய்யாதீங்க!

பசுமைப் பட்டாசு உருவானதின் நோக்கம் மாசைக் குறைப்பது மட்டுமே. முழுமையாக பட்டாசு பாதிப்புகளை அல்ல என்பதை நினைவில் கொண்டு தீபாவளியில் பட்டாசுகளைத் தவிர்ப்பது அல்லது மிகக் குறைவாகப் பயன்படுத்துவது காற்று மாசைக் குறைக்க உதவும்.

இந்தப் பதிவின் மூலம் நீங்கள் பசுமை பட்டாசுகள் பற்றிய தெளிவான புரிதலைப் பெற்று, சுற்றுச்சூழல் மற்றும் உங்களது குடும்பத்தினரின் உடல்நலத்தைப் பாதுகாக்கத் தேவையான விழிப்புணர்வைப் பெறுவீர்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online