Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உன்னத மருந்து உமிழ்நீர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உன்னத மருந்து உமிழ்நீர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Kalki Online 1 year ago

மிழ்நீர் ஒரு நல்ல மருந்து. அது உடலிலுள்ள நோய்களை அடையாளம் காட்டும் மீட்டர் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உமிழ்நீர் என்பது வாயில் ஊறும் நீர்மம். இது நாம் உண்ணும் உணவை எளிதாக உட்கொள்ள உதவுமாறு ஈரப்படுத்தியும், உணவைச் செரிக்க உதவும் அமிலங்கள் என்னும் நொதியும் கொண்டதாகவும் உள்ளது உமிழ்நீரே. ஒரு நாளைக்கு மனிதனின் வாயில் 1 முதல் 2 லிட்டர் அளவு உமிழ்நீர் சுரக்கின்றது. மனிதர்களின் வாயில் உள்ள மூன்று பெரிய உமிழ்நீர்ச் சுரப்பிகளும், நாக்கு, கன்னம், உதடு, மேலண்ணம் போன்ற பகுதிகளில் உள்ள சிறு சிறு சுரப்பிகளும் உமிழ்நீரை வாயில் ஊறச் செய்கின்றன. உணவின் மணம் உணர்ந்தாலே வாயில் உமிழ்நீர் சுரத்தல் இயல்பாக நடைபெறும்.

உமிழ்நீரிலுள்ள சில புரோட்டீன்கள் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை பற்களில் ஒட்ட வைத்து பல்லில் சொத்தை ஏற்படுத்தும் கிருமிகளை விரட்டுகிறது. சரும வெடிப்புகள், கொப்புளங்களை குணப்படுத்தும் ஆற்றல் நம் வாயில் சுரக்கும் உமிழ்நீரில் உள்ளது என்பதை தமது ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளார் இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட் மிடில் மருத்துவ கல்லூரி ஆய்வாளர் பிரையன். சிலரின் உமிழ்நீரில் எய்ட்ஸ் கிருமிகளைக் கொல்லக்கூடிய புரதம் உள்ளது என்கிறார் இவர்.

அலெக்சாண்டர் பிளெமிங் பென்சிலினை கண்டுபிடிக்கும் முன் உமிழ்நீரைப் பற்றிதான் ஆராய்ந்திருக்கிறார். உமிழ்நீரில் உள்ள 'லைசோசைம்' எனும் இரசாயனப் பொருள் பாக்டீரியாக்களின் செல்களை துளைத்து அழிக்கும் ஆற்றல் கொண்டது என்பதை முதன்முதலாக சொன்னவர் இவர்தான். உமிழ்நீரில் மற்றொரு பாக்டீரியா எதிர்ப்பு பொருளான 'நைட்ரிக் ஆக்சைடு' உள்ளது என்பதை கண்டுபிடித்து கூறியவர் டாக்டர் நைஜல் பெஞ்சமின். நாய்கள் தங்களுக்கு ஏற்படும் புண்களை தாங்களே ஆற்றிக் கொள்வதற்குக் காரணம் அதன் உமிழ்நீரிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு சக்திதான் என்கிறார் இவர். இதே முறையில் நாமும் சருமத்தில் தோன்றும் வெடிப்புகளை நம் வாயில் உருவாகும் உமிழ்நீரை தடவியே குணமாக்கலாம் என்கிறார் இவர்.

மனிதனின் உணவுப் பாதை வாயில் தொடங்கி, ஆசன வாயில் வரையுள்ள 25 அடி முதல் 34 அடி வரை நீளமுள்ள ஒரு நீண்ட குழாயாகும்.செரிமானப் பாதையின் துவக்கம் வாயில்தான். வாயில் இடப்பட்ட உணவு வாய்க்குழியிலுள்ள பற்களால் அரைக்கப்பட்டு உமிழ்நீருடன் கலந்து கவளமாகிறது. ஆங்கிலத்தில் 'சலைவா' என்று அழைக்கப்படும் உமிழ்நீரில் 99.5 சதவீதம் நீர்தான். திடப்பொருள் 0.5 சதவீதம்தான். இது நிறமற்ற மேற்புறம் ஒரு வகையான மேகமூட்டத்தன்மையுடன் காணப்படும். இதற்குக் காரணம் உமிழ்நீரிலுள்ள செல்களுக்கு, மியூசிக் என்ற வேதிப்பொருளும்தான்.

பலரையும் ஆட்டுவிக்கும் அடெலோஃபோபியாவை சமாளிப்பது எப்படி?

உமிழ்நீரில் சில வகையான என்சைம்கள் உள்ளன. அவை டயரின், மால்ட்டோஸ் என்பன. இதில் டயரின் உணவுப்பொருட்களிலுள்ள ஸ்டார்ச்சை டெக்ஸ்டீரினாக மாற்றுகிறது. இவை மீண்டும் உடைக்கப்பட்டு மால்ட்டோஸ் எனும் எளிய சர்க்கரையாக மாற்றப்படுகிறது. உமிழ்நீரிலுள்ள இன்னொரு என்சைம் மால்ட்டோஸ் சர்க்கரையை உடைத்து டெக்ஸ்ட்ரோஸாக மாற்றுகிறது. இத்தகைய வேதியியல் மாற்றங்கள் உணவு கவளம் இரைப்பையை சென்றடையும் வரை நிகழ்கிறது.

உமிழ்நீரில் சோடியம் குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு, கால்சியம் கார்பனேட், கால்சியம் பாஸ்பேட், சோடியம் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் தையோசயனேட்டு போன்ற கனிம உப்புகள் உள்ளன. இதிலுள்ள கரிமப் பொருட்கள் யூரியா, அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் கொலஸ்ட்ரால், வாயுகளான ஆக்ஸிஜன், நைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு கூட உமிழ்நீரில் உள்ளது. அதோடு ஈஸ்ட், பாக்டீரியா, லியுகோசைட்ஸ் (வெள்ளை அணுக்கள்), புரோட்டோசோவா போன்றவையும் உள்ளன.

உணவுடன் கலந்து உணவு செரித்தல் எனும் முக்கியப் பங்காற்றுகிறது உமிழ்நீர். நாம் பேசும் பேச்சையும் தெளிவாக்குகிறது.வாயில் எஞ்சிய உணவுத் துகள்களை அகற்றுவதும் உமிழ்நீரே. இதனால் பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் வளர்வது குறைக்கப்படுகிறது. சூடான உணவுப் பொருட்களை குளிர்விக்கப் பயன்படுவது உமிழ்நீரே. உணவின் சுவையை தெரிய வைப்பது உமிழ்நீரே. இரைப்பையில் இருக்கும் மியூகஸ் சவ்வுக்கு ஊறுவிளைவிக்கும் பொருட்களின் வீரியத்தை குறைக்க உதவுவது உமிழ்நீரே. வாய்க் குழியின் உயவுப் பொருளும் அதன் மூலம் நம் தாகத்தை தணிப்பதும் கூட உமிழ்நீரே. வாயில் உமிழ்நீர் சுரப்பது குறைந்தால் பாக்டீரியாக்களின் தன்மை அதிகரித்துவிடும். வாயில் உமிழ் நீர் குறைந்தால் நா வறட்சி, ஈறுகளில் வெடிப்பு போன்றவை ஏற்படலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online