Dailyhunt
வேடுவப் பெண்ணாகத் தோன்றி திருவருள் செய்த செஞ்சு லட்சுமி!

வேடுவப் பெண்ணாகத் தோன்றி திருவருள் செய்த செஞ்சு லட்சுமி!

Kalki Online 1 year ago
 கோமளவல்லி தாயாரின் அருள் பெற்ற லட்சுமி குமாரர்!

ச்சரியங்கள் பல அடங்கிய ஸ்தலங்கள் எத்தனையோ இந்த பூலோகத்தில் இருக்கின்றன.

திருமகளின் திருப்பார்வையும், திருப்பாதமும் பட்ட அத்தனை இடங்களுமே அதியற்புதமான ஸ்தலங்களே. நரசிம்மர் திருஅவதாரம் செய்த இடம் என்று சொல்லக்கூடிய அஹோபிலத்தில் நவ நரசிம்மர்களில் ஒருவரான, மாலோல நரசிம்மராக திருமகளின் ப்ரிய நாயகனாக, பிரியா நாயகனாகக் காட்சி அளிப்பது ஒரு அழகு என்றால், அதே அஹோபிலத்தில் திருமகளின் அருட்பார்வை பெற்ற செஞ்சு குலத்தவர்களின் மாப்பிள்ளையாக அங்கே செஞ்சு லட்சுமியை திருமணம் செய்து கொண்டு பாவன நரசிம்மராகக் காட்சி அளிக்கும் அழகே அழகுதான்.

ஆதிசங்கரர் காபாலிகர்களால் தாக்கப்பட்டதும், நரசிம்மர் அவரைக் காப்பாற்றியதும், லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரத்தை அவர் இயற்றியதும் அஹோபிலத்தில்தான். அங்கே மஹாலக்ஷ்மியுடன் சேர்ந்து இருக்கும் நரசிம்மரை, மாலோல நரசிம்மரை அல்லவா ஆதிசங்கரர் தரிசித்திருக்க வேண்டும்? அதனால்தானோ என்னவோ நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம் என்று எழுதாமல் 'லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்' என்று திருமகளோடு திருமாலையும் கொண்டாடி ஸ்தோத்திரம் பாடியிருக்கிறார் ஜகத்குரு. நரசிம்மரின் அருளும் அனுமதியும் இல்லாமல் நம்மால் அஹோபிலத்தை நெருங்க முடியாது என்பர் பெரியோர்கள்.

நரசிம்மரை கட்டுப்படுத்தும் சக்திகள் இரண்டே இரண்டுதான். ஒன்று, தாயாரின் திருக்கடாட்சம். அதற்கு அத்தாட்சியாய்தான் செஞ்சு குலத்தில் பிறந்த செஞ்சு லட்சுமியை மணந்து, அந்த செஞ்சு குலத்தின் மாப்பிள்ளையாகவே ஜம்மென்று வீற்றிருக்கிறார் பாவன நரசிம்மர். நரசிம்மரை கட்டுப்படுத்தக்கூடிய இன்னொரு மாபெரும் சக்தி பக்தி. அதைத்தானே ப்ரக்லாதனும் நமக்குக் காட்டித் தந்திருக்கிறான். 'பத்ரா' என்று திருமகளை குறிப்பிடுவது உண்டு. ஜனக மகாராஜா தனது மகளான சீதையை அந்த ராமபிரானுக்குத் திருமணம் செய்து கொடுக்கும்போது, "ராமா, இதுவரை நீ ராமன். இனி, நீ ராமபத்ரன்" என்று சொல்லித்தான் திருமணம் செய்து கொடுத்தார். 'பத்ரா' என்பதற்கு மங்கலத்தை அருளுபவள் என்றே பொருள். மாலோல லக்ஷ்மி நரசிம்மனாக இருக்கும் அஹோபில நரசிம்மருக்கும் 'பத்ரன்' என்றே பெயர். அப்படிப்பட்ட மங்கலமாய், மங்கல ரூபமாய் திருமால் இருக்கக் காரணமாக இருப்பவளே மங்கலரூபிணியான திருமகள்தானே? திருமால் எடுக்கும் அத்தனை அவதாரங்களிலும் திருமகளும் உடன் வருவாள்.

ஸ்ரீராமராக பெருமாள் அவதாரம் எடுத்து வரும்போது சீதையாக வருபவள்தானே, கிருஷ்ணராக பெருமாள் வரும்போது ருக்மிணியாக வருகிறாள்? காட்டில் வாழும் அஹோபில நரசிம்மனின் திருக்கரத்தைப் பற்ற வேண்டும் என்றால் தானும் ஒரு காட்டுவாசி பெண்ணாக, தான் திருஅவதாரம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாள் திருமகள். அவளின் திருவருளுக்கு தம் பக்தியால் பாத்திரமான செஞ்சு குலத்தைத் தேர்ந்தெடுத்து அக்குலத்திலேயே பிறந்து விட்டாள் தாயார் செஞ்சு லக்ஷ்மியாக. நவ நரசிம்மர்களில் ஒன்பதாவது நரசிம்மராக இருந்து நாம் செய்த அத்தனை பாவங்களையும் போக்குவதற்காகவே செஞ்சு லட்சுமி தாயாரோடு சேர்ந்து சேவை சாதிக்கிறார் பாவன லக்ஷ்மி நரசிம்ம பெருமாள். இந்த செஞ்சு லக்ஷ்மி எனும் திருமகளின் இன்னொரு பெயர் வாசந்திகா என்பதாகும். சிங்கராஜாவான அஹோபிலம் எனும் வள வனத்தின் அரசனான அப்பெருமாளுக்கும் செஞ்சு குலத்தில் பிறந்த அந்த திருமகளுக்கும் நடந்த திருமண வைபவத்தை இன்றும் செஞ்சு குல மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

சீதையின் அருள் பெற்ற அனுமன்!

நரசிம்மனாக வந்திருக்கும் அந்தத் திருமாலை, தான் திருமணம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, செஞ்சு குலத்தில் அவதாரம் செய்திருக்கிறாள் திருமகள். அரியின் மீது அலாதி பக்தி கொண்டவர்கள் செஞ்சு மக்கள் என்பதாலேயே அவர்களின் பக்தியில் மயங்கி, தனது திருவருளை அவர்கள் மீது செலுத்தும்வண்ணமாக அக்குலத்திலேயே தோன்றி, ஒரு வேடுவப் பெண் போலவே வளர்ந்து, அஹோபில காடுகளில் எல்லாம் நடந்து தவமிருந்து, கையில் வில்லும் அம்பும் ஏந்தி திருமாலின் அன்புக்குப் பாத்திரமானாள் செஞ்சு லக்ஷ்மி தாயார்.

மலர் படுக்கை ஒன்றை குகைக்குள் அமைத்து அதிலேயே பல நாட்கள் இருந்து வந்தாளாம் திருமகள். அந்தக் குகையை இன்றளவும் பாவன நரசிம்மரின் சன்னிதியிலிருந்து நாம் பார்க்க முடியும். திருமாலின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார்கள் செஞ்சு இன வேடுவ மக்கள் என்பதற்காகவே திருமகள் அந்தக் குலத்தின் குலமகளாக அஹோபிலத்தில் தோன்றி, அக்குலமகளாகவே இருந்து பாவன நரசிம்மரை கைப்பிடித்தாள். திருமகளின் பரிபூரண திருவருளுக்குப் பாத்திரமான அந்த செஞ்சு மக்கள் தற்போது வரை நரசிம்மனை தங்கள் மாப்பிள்ளையாகவே பாவித்து தேன், தினை மாவு தொடங்கி சகலவிதமான சீர்களை நரசிம்மரின் உத்ஸவங்களின்போது உற்சாகமாக சமர்ப்பிப்பதையும், அதை அந்தத் திருமால் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொள்வதையும் நம்மால் பார்க்க முடியும்.

திருமகளின் திருவருளுக்கு, ப்ரியத்திற்கு பாத்திரமானவர்கள் என்பதாலேயே அந்த வேடுவ குல மக்கள், சில விலங்குகளை பக்தியின் வெளிப்பாடாய் திருமகளின் மணாளனுக்காக படையலாக இடுவதைக் கூட பெருமாள் இங்கே ஏற்றுக்கொள்கிறார். திருமாலை திருப்திப்படுத்த என்ன செய்ய வேண்டும்? திருமகளின் ப்ரியத்திற்கு பாத்திரமாக வேண்டும்.

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

அவளின் ப்ரியத்திற்கு எப்படி பாத்திரமாவோம்? திருமாலின் மீது அதீத பக்தி கொள்பவர்களாக நாம் இருக்கும்போது திருமகளின் திருவருள் என்பது தாமாகவே நமக்குக் கிடைத்து விடும். கண்மூடித்தனமான அன்பு, நம்பிக்கை என்பதன் மறுபெயர்தானே பக்தி? அப்படித்தான் (வேடுவ குலமான) செஞ்சு குலத்து மக்களும் அந்த நரசிங்கனிடம் அதீத அன்பு கொண்டிருந்தனர். தாங்கள் உண்ணும் உணவையே அப்பெருமாளுக்குக் கொடுப்பது, தங்கள் குலதெய்வமாகவே, தங்களோடு காட்டில் வசிக்கும் அந்த நரசிம்மனை பல காலம் போற்றி வந்தனர்.

தனது கணவனின் மீது இவ்வளவு அன்பு கொண்டவர்கள் மீது தனி ஒரு அன்பை அந்தத் திருமகளும் அதனால்தான் வைத்து, அக்குலத்திலேயே பிறந்து, தனக்காகவே அந்த நரசிம்மனையும், கையில் வில்லையும் அம்பையும் எடுக்க வைத்து, தனது திருவருளுக்குப் பாத்திரமான செஞ்சு குலத்து மாப்பிள்ளையாகவே மாறும்படி திருமாலை, அரியை, நரஹரியை, நல்லமலை காடு சூழ்ந்த இவ்விடத்தில் அமரச் செய்து விட்டாள் தாயார். அடித்த கையைப் பிடிக்கும் பெருமாளான இந்த நரசிம்மர், திருமகளின் திருவடியை கெட்டியாக நம் மனதில் நாம் நிற்க வைத்துகொள்ளும்போது, நம்மையும் தனது திருவருளால் பிடித்து கொள்வான்.

திருமகளின் திருவருளை தொடர்ந்து ப(பி)டிப்போம்.

(இந்த திருமகள் திருவருள் தொடர் வெள்ளிதோறும் இடம்பெறும்)

திருமகள் திருவருள் - அனைத்து அத்தியாயங்களையும் படிக்க 'Click Here'

Click Here
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online