பிரித்தானிய அமைச்சரவையில் தமிழ் பெண் உமா குமரன் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய அமைச்சரவையில் முதல் தமிழ் பெண்
பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஆன்டி பர்னாம், அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளார்.
இதில், இலங்கை தமிழ் வம்சாவளியான உமா குமரனுக்கு வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு இணைஅமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில் நாடாளுமன்ற துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன்.
உலகளவில் நிலையற்ற ஒரு காலகட்டத்தில், பிரித்தானியாவின் குரலும் சர்வதேசத் தலைமைத்துவமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நமது மாபெரும் நாட்டிற்கு சேவையாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் இரண்டு இந்திய வம்சாவளி அமைச்சர்கள்
யார் இந்த உமா குமரன்?
உமா குமரனின் பெற்றோர், இலங்கையில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக 1980களில் அங்கிருந்து வெளியேறி லண்டனில் குடியேறியுள்ளனர்.

லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில், கலைத்துறையில் அரசியல் சிறப்பு இளங்கலைப் பட்டப்படிப்பையும், பொதுக் கொள்கை முதுகலைப் பட்டப்படிப்பையும் கற்றுள்ளார்.
இங்கிலாந்தின் தேசிய சுகாதாரத்துறை ஊழியராக (NHS) தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய உமா, இளவயதிலேயே லேபர் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார்.
லண்டன் மேயர் சாதிக் கானின் மூத்த ஆலோசர், கெய்ர் ஸ்டார்மரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துணை இயக்குநர், C40 நகரங்களின் காலநிலை தலைமைத்துவக் குழுவின் இராஜதந்திர மற்றும் சர்வதேச உறவுகளுக்கான இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டில் போர் நடந்து கொண்டிருந்த போது, அப்போதைய பிரதமர் கோர்டன் பிரவுனை சந்திக்கச் சென்ற தமிழர்கள் குழுவில் உமாவும் இருந்தார்.
2024 ஆம் ஆண்டில் கிழக்கு லண்டனில் புதிதாக உருவாக்கபட்ட Stratford and Bow தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலம், முதல் முறையாக பிரித்தானியா நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ் எம்பி என்ற பெருமையை பெற்றார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவரது முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக, இலங்கையில் போர்க்குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மக்னிட்ஸ்கி பாணியிலான தடைகளை விதிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
போர் குற்றங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்க தொடர்ந்து வலியுறுத்துவதோடு, தமிழ் புலம்பெயர்ந்தோரின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

