Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அண்ணாமலை தோற்றால்.எச்சரித்த மாஜி போலீஸ். அரண்டுபோன பத்திரிகையாளர்கள்!

அண்ணாமலை தோற்றால்.எச்சரித்த மாஜி போலீஸ். அரண்டுபோன பத்திரிகையாளர்கள்!

Minnambalam 2 years ago

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்காக, அக்கட்சி பிரமுகர் கைவிரலை வெட்டிக்கொண்டது தமிழ்நாடு அரசியல் மட்டுமின்றி தேசியளவில் கவனத்தை பெற்றுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டாள், முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துரை ராமலிங்கம். இவர் கோவையில் பாஜக சார்பில் போட்டியிடும் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில், பீளமேடு ஹோப் கல்லூரி அருகே களப்பணியில் ஈடுபட்டிருந்த போது, அவரிடம் வந்து அண்ணாமலை தோல்வி அடைந்துவிடுவார் என ஒருவர் கூற, ஆவேசமடைந்த கே.துரை ராமலிங்கம் அருகில் இருந்த காய்கறிக் கடையில் இருந்து கத்தியை எடுத்து தனது விரலை வெட்டிக்கொண்டார்.

இதனால் கையில் இருந்து ரத்தம் கொட்ட… அப்போதும் "அண்ணாமலை தான் வெற்றி பெறுவார்" என்று கூறியிருக்கிறார்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் இருந்தவாறு வீடியோ வெளியிட்ட அவர், "கடந்த 10 ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வருகிறேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலைக்காக அரவக்குறிச்சி தொகுதிக்கு சென்று பிரச்சாரம் செய்தேன்.

தற்போது கோவையில் அண்ணாமலை போட்டியிடும் நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் கோவைக்கு வந்து களப்பணியாற்றி வந்தேன். இரண்டு திராவிட கட்சிகளும் புறக்கணிக்கப்பட வேண்டிய சமயம் இது.

நேற்று நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, சம்மந்தமில்லாத நபர் ஒருவர் என்னிடம் வந்து அண்ணாமலை வெற்றி பெற மாட்டார் என்றார்.

இதனால், எனது இடது கை ஆள்காட்டி விரலை வெட்டி கொண்டேன். அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துமனையில் அனுமதித்தனர். அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த முறை 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும்" என்று தெரிவித்துள்ளார்.

துரை ராமலிங்கத்தின் செயல் குறித்து நாம் விசாரித்த போது, " இவர், குறிஞ்சிப்பாடியில் காவல் துறை எஸ்.எஸ்.ஐ-ஆக பணியாற்றி வந்தார். போலீஸ் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். 10 ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இணைந்தார். பாஜகவை ஆதரித்து வீடியோ வெளியிட்டு வருவார்.

இந்நிலையில்தான் கோவையில் அண்ணாமலைக்காக வாக்குச் சேகரிக்க சென்ற இடத்தில் இப்படி செய்துகொண்டார். சம்பந்தமில்லாத நபர் அண்ணாமலை தோற்பார் என்று சொன்னதாக அவர் சொல்கிறார். ஆனால், சொந்த கட்சிக்காரரே தான் அண்ணாமலை வெற்றி பெற மாட்டார் என துரை ராமலிங்கத்திடம் சொன்னார்.

இல்லை, இல்லை அண்ணாமலை வெற்றி பெறுவார் என்று துரை ராமலிங்கம் சொல்ல… அந்த நபர் திரும்ப திரும்ப வெற்றி பெற மாட்டார் என்று சொல்ல… ஆவேசத்தில் என்ன செய்வதென தெரியாமல் கையை வெட்டிக்கொண்டார். ஆள் காட்டி விரலில் மேல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது" என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

இதனிடையே பத்திரிகையாளர்கள் துரை ராமலிங்கத்திடம் ஒருவேளை அண்ணாமலை வெற்றி பெறாவிட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

இதற்கு துரை ராமலிங்கம் தந்த பதிலால் பத்திரிகையாளர்கள் அரண்டுபோயிருக்கிறார்கள். தொடர்ந்து எமோஷனலாக வேண்டாம் என்று ஆறுதல் கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

முன்னதாக பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற வேண்டும் என்று கர்நாடகாவைச் சேர்ந்த அருண் வெர்னேகர் என்ற நகைக்கடை வியாபாரி தன் கைவிரலை வெட்டி கொண்டார்.

அவர் தனது கைவிரலின் நுனி பகுதியை வெட்டி, காளிக்கு ரத்த பூஜை செய்ய நினைத்து வெட்டினார். ஆனால், வெட்டும் போது கத்தி கைவிரலின் நடுபகுதியில் பட, விரல் இரண்டு துண்டானது.

உடனே அதை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால் விரலை ஒட்ட வைக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இதுகுறித்து அருண் வெர்னேகர், "அந்த விரலை மோடி பிரதமராக, காளிக்கு பலி கொடுத்ததாக நினைத்துக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

யமஹா RX100 பைக்கில் சென்று வாக்களித்த ரங்கசாமி

யமஹா RX100 பைக்கில் சென்று வாக்களித்த ரங்கசாமி

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam