Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மக்கள், மாற்றம், மௌனம்: விஜய் அரசியலின் தொடக்க வாசிப்பு

மக்கள், மாற்றம், மௌனம்: விஜய் அரசியலின் தொடக்க வாசிப்பு

Minnambalam 0 months ago

பேரா.நா.மணி

ண்பர் ஒருவர் அழைத்து, "தவெக ஆட்சி தொடக்க நாட்கள் எப்படி இருக்கிறது?" என்று கேட்டார்.

அந்தக் கேள்வி ஒரு அரசை பற்றியதல்ல, தமிழ்நாட்டின் அரசியல் மனநிலையை அறிந்து கொள்ளும் ஆவல் பற்றியது.

மக்களாட்சியில் மக்கள் நினைத்தால் எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியும். நூற்றாண்டைக் கடந்த தேசிய அரசியல் இயக்கங்களிலிருந்து, கடந்த அறுபது ஆண்டுகளாக ஆட்சியை மாறிமாறி வகித்த கட்சிகள் வரை - அனைவருக்கும் மக்கள் பாடம் புகட்ட முடியும் என்பதையே 17வது சட்டமன்றத் தேர்தல் மீண்டும் நினைவூட்டியுள்ளது.

மாற்றத்தின் அறிவிப்பு

தமிழக மாற்றத்தை வெறும் "சினிமா நட்சத்திர மயக்கம்" என்று மட்டும் பார்க்க முடியாது. அரசியல் மாற்றம் வேண்டும் என்ற ஆழமான மக்களின் விருப்பத்தின் வெளிப்பாடு. வேலைவாய்ப்பு நெருக்கடி, உயர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைச் செலவுகள், ஊழல் குறித்த அதிருப்தி, சாதி முரண்பாடுகள், இளைஞர்களின் அரசியல் விரக்தி இவை அனைத்தும் சேர்ந்து புதிய அரசியல் இடத்தை தேடியுள்ளன.

அரசியல் கட்சிகள் மக்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் முழுமையாக பிரதிபலிக்கும் தளமாக செயல்படாதபோது, மக்கள் மாற்று வெளிப்பாட்டு தளங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். அதனால் தான் ரசிகர் மன்றங்களே கூட அரசியல் வெளிப்பாட்டின் கருவியாக மாறுகின்றன. இது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் கவனிக்க வேண்டிய மாற்றம்.

மௌனம் ஓர் அரசியல் மொழி

விஜயின் அரசியல் எழுச்சியின் மையத்தில் அவரது "வெற்று பலகை" அணுகுமுறையே உள்ளது. அவர் தன்னை ஒரு குறிப்பிட்ட கொள்கை அடையாளத்துக்குள் இறுக்கமாக அடைத்துக் கொள்ளவில்லை. அதனால் இடதுசாரி மனநிலை கொண்டவர்களும், திராவிட அரசியலை விரும்புவோரும், தமிழ் தேசிய உணர்வாளர்களும், நடுத்தர வர்க்க இளைஞர்களும் பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்பார்ப்புகளை அவர்மீது பிரதிபலிக்கத் தொடங்கினர். அவரது மற்றொரு முக்கிய அரசியல் உத்தி "மௌனம்". அடிக்கடி கருத்து தெரிவிக்காமல் இருப்பது, ஒவ்வொரு சர்ச்சையிலும் நேரடியாக இறங்காமல் இருப்பது, குறைவாக பேசுவது இவை அனைத்தும் பலவீனம் அல்ல. அரசியல் உத்தியாக மாறியுள்ளது. அதிகமாக பேசும் அரசியலிலிருந்து சோர்ந்து போன சமூகத்தில், அளவான மௌனம் ஒரு புதிய அரசியல் மொழியாக மாறியுள்ளது.

சாதிய முரண்களை கடக்க விரும்பும் மக்கள்

இந்தத் தேர்தல் பல்வேறு அரசியல் ஆசைகள் ஒன்றாகக் கூடிய தருணமாகவும் பார்க்கப்படுகிறது. இடதுசாரி சமூகநீதி கனவுகள், திராவிட மரபின் சமூக சமத்துவ கோரிக்கைகள், தமிழ் தேசிய உணர்வுகள், புதிய தலைமுறை இளைஞர்களின் மாற்றத் தேடல் இவை அனைத்தும் ஒரே அரசியல் வாய்ப்பை நோக்கி நகர்ந்துள்ளன.

தமிழக சமூகத்தில் சாதி முரண்பாடுகள் தொன்றுதொட்டு இருந்து வருகின்றன. அவற்றை முழுமையாக எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் பல சமயங்களில் தயக்கம் காட்டின. குறிப்பாக இடைநிலை ஆதிக்க சாதிகளின் அரசியல் வளர்ச்சி சமூக சமத்துவப் பயணத்தை சிக்கலாக்கியது. "இதற்கு மேல் மாற்றத்தை மக்கள் விரும்ப மாட்டார்கள்" என்ற மனநிலையை அரசியல் அமைப்புகள் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்டன.

ஆனால் மக்கள் அதற்கு மாறான சைகையை இந்தத் தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர். சாதி முரண்பாடுகளை கடக்க வேண்டும் என்ற விருப்பமும் சமூகநீதி மேலும் ஆழப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வெளிப்பட்டுள்ளன.

பாஜக தவெக உறவு

தவெக மற்றும் பாஜக உறவு குறித்து தேர்தல் முழுவதும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அது உண்மையாக இருந்திருக்கும் பட்சத்தில் ஆட்சி அமைப்பின் போது அதிமுக பாஜக ஆதரவு தன்னிச்சையாக அமைந்திருக்க வேண்டும். அரசியல் நிலைமை இன்னும் சிக்கலானது என்பதையே இது காட்டுகிறது. அதே நேரத்தில், இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகள் திமுகவுடன் கூட்டணி அமைத்தது, கடந்த ஐந்து ஆண்டுகளின் அனைத்து செயல்பாடுகளையும் முழுமையாக ஏற்றுக்கொண்டதால் அல்ல.

மதச்சார்பின்மை

தற்போதைய அரசியல் சூழலில் மதச்சார்பின்மைக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன, அதற்கு எதிராக திமுக தலைமையிலான அணியை அவை முக்கிய பாதுகாப்பு சக்தியாகக் கருதின.அதேபோல், "மதசார்பற்ற ஆட்சிக்காக ஆதரவு தருங்கள்" என்ற விஜயின் அழைப்பை ஏற்று மேற்படி அரசியல் சக்திகள் இணைந்திருப்பதும் தமிழ்நாட்டின் கூட்டணி அரசியலில் ஆரோக்கியமான புதிய சாத்தியங்களை உருவாக்குகிறது.

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு

தமிழக அரசியலில் நீண்ட காலமாக "கூட்டணி இருக்கலாம்; ஆனால் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு இல்லை" என்ற அணுகுமுறை நிலவியது. திமுக, அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளும் பெரும்பாலும் அந்த நடைமுறையையே பின்பற்றின. ஆனால் தவெக தனது முதல் மாநாட்டிலேயே "ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு" என்ற கருத்தை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. இது வெறும் தேர்தல் கூட்டணியைத் தாண்டி, பொறுப்பையும் அதிகாரத்தையும் பகிர்ந்துகொள்ளும் அரசியல் முயற்சி. கூட்டணி கட்சிகளை அதிகார அமைப்புக்குள் இணைப்பதன் மூலம் மட்டுமே நிலையான அரசை உருவாக்க முடியும் என்ற புரிதல்.

முழுமையான சமூக நீதி

தவெக ஆட்சியின் மிக முக்கியமான அரசியல் சைகை சமூக பிரதிநிதித்துவம் குறித்தது. இந்திய அரசியல் சாசனம் சட்டமன்றங்களிலும் உள்ளாட்சியிலும் பட்டியல் சமூகங்களுக்கும் பழங்குடியினருக்கும் இடஒதுக்கீட்டை வழங்கி அரசியல் அதிகாரத்தில் பங்கேற்பை உறுதி செய்தது. அதே சிந்தனையை அமைச்சரவை அமைப்பிற்கும் விரிவுபடுத்த முயற்சித்திருப்பது கவனிக்கத்தக்கது.

234 உறுப்பினர்கள் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்டியல் சமூகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவ விகிதத்துக்கேற்ப அமைச்சரவையிலும் பங்கேற்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை என்பது வெறும் நிர்வாக அமைப்பு அல்ல, அது சமூக அதிகாரத்தின் குறியீடு. அந்த அதிகாரத்தில் விகிதாசார பங்கேற்பை வழங்க முயற்சிப்பது தமிழக அரசியலில் புதிய முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பிற மாநிலங்களில் இதுபோன்ற முயற்சிகள் எவ்வளவு உள்ளது என்பது ஆய்வு செய்ய வேண்டிய முக்கிய கேள்வியாகும்.

சமூக நீதி என்ற கருத்து வெறும் தேர்தல் கோஷமாக இல்லாமல், அதிகார அமைப்புகளின் வடிவமைப்பில் பிரதிபலிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பை இந்த முயற்சி உருவாக்கியுள்ளது.

லஞ்ச ஊழல் நிர்வாக சீர்திருத்தங்களுக்கு காத்திருப்பு

லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து தொடக்கத்திலேயே வெளிப்படையாகப் பேசுவது, நிர்வாக அமைப்பில் மாறுதல் சைகைகளை சுட்டுகிறது. அதிகாரத்தின் மையப்படுத்தலைக் குறைக்கும் முயற்சிகள் குறித்து பேசப்படுவது, இவை அனைத்தும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

ஆனால் எந்த புதிய அரசியலுக்கும் மிகப்பெரிய சவால் எதிர்பார்ப்புகளே. மக்கள் மாற்றத்தை விரும்பி வாய்ப்பை வழங்கியுள்ளனர். அந்த மாற்றம் வெறும் அரசியல் முகமாற்றமாக இல்லாமல், சமூக நீதி, மதச்சார்பின்மை, ஊழல் எதிர்ப்பு, அதிகாரப் பகிர்வு, ஜனநாயக பங்கேற்பு ஆகிய தளங்களில் நடைமுறை மாற்றமாக மாறுமா என்பதே அடுத்த கட்ட கேள்வி.

தமிழக அரசியல் இது ஒரு புதிய திருப்பம். மக்கள் பழைய அரசியலை முழுமையாக நிராகரிக்கவில்லை. அதேசமயம் பழைய அரசியல் போதாது என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். அந்தச் செய்தியை யார் ஆழமாகப் புரிந்துகொள்கிறார்களோ, அவர்கள்தான் எதிர்கால தமிழக அரசியலை வடிவமைப்பார்கள்.

கட்டுரையாளர்

நா.மணி,பேராசிரியர், மேனாள் தலைவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam