Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மாயத்திரைகள் மறைக்க முயன்றாலும், முகிழும் வரலாற்று நாயகர் மு.க.ஸ்டாலினே!

மாயத்திரைகள் மறைக்க முயன்றாலும், முகிழும் வரலாற்று நாயகர் மு.க.ஸ்டாலினே!

Minnambalam 3 weeks ago

ராஜன் குறை

ந்த கட்டுரை வாசிக்கப்படும் நேரத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரத் துவங்கியிருக்கும்.

தேர்தல்கள் என்பவை தனிப்பட்ட நிகழ்வுகள். ஆங்கிலத்தில் இவண்ட் (event) என்பார்கள். இவை வரலாற்றின் பின்னணியில் நிகழும் தனிப்பட்ட நிகழ்வுகள். அத்தகைய நிகழ்வுகளில் வெற்றி பெறுவது வரலாற்றிற்கு உரமாகலாம் என்றாலும் அது மட்டுமே வரலாறல்ல. வரலாறு என்பது எப்படி ஒரு மக்கள் தொகுதியின் தன்னுணர்வு கட்டமைக்கப்படுகிறது என்பதுதான். வரலாறு என்பது நெடுஞ்சாலையென்றால் தேர்தல் என்பது முச்சந்தி அல்லது நாற்சந்தி. பயணம் அதனைக் கடந்து தொடரும்.

அந்த வகையில் நவீன தமிழ்நாட்டின் மக்கள் தொகுதியை திராவிட-தமிழர் என்ற தன்னுணர்வாகக் கட்டமைத்து வளர்த்தெடுத்து வந்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்தான். உலக மக்களாட்சி வரலாற்றிலே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சகாப்தம் தி.மு.க! அதன் வரலாற்றுப் பயணம் இருபத்தோராம் நூற்றாண்டிலே தொடர வகை செய்துள்ளவர் மு.க.ஸ்டாலின்! அவரது கடந்த ஐந்தாண்டு கால ஆட்சி தமிழ்நாட்டின் எதிர்கால மேன்மைக்கு இடப்பட்டுள்ள உறுதியான அடித்தளம் என்றால் மிகையாகாது!

தமிழ் பொதுமன்றத்தில் நிகழும் அரசியல் விவாதங்களின் பலவீனம் என்னவென்றால் குடியரசு தத்துவம், மக்களாட்சி அரசியல் ஆகியவற்றின் உலகளாவிய வரலாற்றையும், அதில் தமிழ்நாட்டின் தனிப் பயணத்தையும் பகுத்தறிந்து புரிந்துகொள்ள முயலாததுதான் எனலாம். இன்றைக்கு பொதுமன்றம் என்பது அச்சு ஊடகம், தொலைகாட்சி ஊடகம், அவற்றின் செய்திகளை விவாதிக்கும் உள்ளூர் அமைப்புகள் என்பதைக் கடந்து கணிணி செல்பேசி மூலம் செயல்படும் சமூக ஊடகங்கள், காணொலிகள் என பிரம்மாண்டமாக விரிவடைந்துள்ளது. அதில் ஏற்படும் இரைச்சலில் தி.மு.க-வின் சாதனைகள், அவற்றின் வரலாற்று முக்கியத்துவம் முழுமையாக பகுத்தறிந்து உள்வாங்கப்படுவதில்லை எனலாம்.

ஐநூறு ஆண்டுகளாக மானுட வரலாற்றில் நிகழ்ந்துவந்துள்ள மாற்றங்கள் என்ன, அதில் உலகின் பல்வேறு மக்கள் தொகுதிகள் தங்களை எப்படி வடிவமைத்துக்கொண்டன, அவற்றின் தன்னுணர்வு எப்படி வடிவம் பெற்றுள்ளது என்பதையெல்லாம் ஒப்பிட்டு புரிந்துகொள்ளும் முனைப்பு இன்றைய பெருகும் பொதுமன்ற வடிவங்களில் குறைவாகவே உள்ளது. இதற்கான காரணம் என்பது மக்களாட்சி அரசியலின் செயல்முறையில்தான் உள்ளது. நாம் முதலில் அதனைப் புரிந்துகொண்டால்தான் நமது அரசியல் விவாதங்களை செழுமைப்படுத்த முடியும்.

மக்களாட்சிக் குடியரசின் மூன்று பரிமாணங்கள்

மக்களாட்சிக் குடியரசு என்பது மூன்று முக்கிய பரிமாணங்களைக் கொண்டுள்ளது. ஒன்று, குடியரசின் விழுமியங்களையும், அதன் மூலம் சட்டங்களையும், திட்டங்களையும் வடிவமைக்கும் கருத்தியல் விசை. மற்றொன்று அரசு இயந்திரத்திற்கும், அதனால் நிர்வகிக்கப்படும் மக்களுக்கும் இடையிலான நடைமுறை அரசியல், மூன்றாவது மக்கள் பிரதிநிதிகளால் உருவாகும் அரசாங்கத்தை வடிவமைக்க நிகழும் முரணரசியல். இந்த மூன்று பரிமாணங்களும் முக்கியமானவை என்றாலும், எந்தெந்த பரிமாணங்கள் பொதுமன்றத்தில் முக்கியத்துவம் பெறும் என்பதும் ஆய்வுக்குரியது.

கட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகள் இடையேயான முரணரசியல் என்பது பெருமளவு மக்கள் கவனத்தை ஈர்க்கும். ஏனெனில் சமூக வாழ்விலும், தனி நபர்களுக்கு இடையிலான போட்டிகள், நண்பன் யார், எதிரி யார் என்ற அணிசேர்க்கைகள் முக்கியமானவை. தொழில் போட்டி, உள்ளூர் அதிகாரப் போட்டி. குடும்ப சண்டைகள் என எல்லாமே முரணரசியலின் ஊற்றுக் கண்கள். அதனால் பெரும்பாலும் உள்ளூர் அளவில் ஒரே குடும்பத்தை, ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிரெதிர் அரசியல் கட்சிகளில் இருப்பார்கள். இந்திரா காந்தியின் இரண்டு மருமகள்களில் ஒருவர் காங்கிரஸ் தலைவராக இருக்க, மற்றொருவர் பாஜக அமைச்சராக இருந்ததை உதாரணமாகக் கூறலாம்.

இந்த முரணரசியலின் தொடர்ச்சியாக நடைமுறை அரசியல் அமையும். ஒரு கட்சியின் ஆட்சி முற்றிலும் சரியில்லை என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கட்சியினர் கூறுவார்கள். ஊழல் குற்றச்சாட்டுகள், நிர்வாகச் சீர்கேடுகள் என்று பலவகைப்பட்ட குற்றச்சாட்டுகள் காரசாரமாக பகிரப்படும், விவாதிக்கப்படும். எந்த கட்சியாலும் மக்களின் தேவைகளை, எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது என்பதால் எதிர்கட்சிகள் அந்த அதிருப்தியை பயன்படுத்திக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிப்பார்கள்.

பொதுமன்ற விவாதங்கள் பெரும்பாலும் முரணரசியல், நடைமுறை அரசியல் சார்ந்துதான் அமையும். அது மக்களுக்கு ஆர்வத்தையும் ஏற்படுத்தும், சலிப்பையும் ஏற்படுத்தும். சிலர் ஜாதி, மத அடையாளங்கள் சார்ந்து சில தலைவர்களை ஆதரிப்பார்கள். வேறு சிலர் அவர்கள் தனிப்பட்ட முறையில் அடைந்த நலன்கள், பலன்கள் அடிப்படையில் ஆதரிப்பார்கள். ஒரு குறிப்பிட்ட தலைவரின் ஆட்சியில்தான் எங்கள் கிராமத்திற்கு மின்சாரம் வந்த து என்று சொல்லி அந்த தலைவரை, அவரது கட்சியை ஆதரிப்பார்கள்.

பலர் எந்த கட்சி வந்தாலும் எங்களுக்கு எந்த பலனும் இல்லை என்று அலுத்துக்கொள்வார்கள். அதைவிட முக்கியம் தங்களுக்குள் உள்ள முரண்களின் அடிப்படையில் வெவ்வேறு தலைவர்களை ஆதரிப்பார்கள். ஒருவருக்கு அவர் உறவினருடன் சொத்துப் பிரச்சினை என்றால் அவர் உறவினர் ஆதரிக்கும் கட்சிக்கு எதிர்கட்சியை ஆதரிப்பார். இதுதான் முரணரசியலின் சமூக அடிப்படை.

இந்த முரணரசியல், நடைமுறை அரசியல் ஆகிய இரண்டு அன்றாட பரிமாணங்களையும் கடந்து குடியரசின் விழுமியங்களை வடிவமைக்கும் கருத்தியல் விசை சார்ந்த அரசியல் வரலாற்றிற்கு முக்கியமானது. இந்த கருத்தியல் அடிப்படை மற்ற இரு பரிமாணங்களால் அழுத்தம் குறைந்துவிடக் கூடாது என்று சில இயக்கங்கள் சமூக இயக்கங்களாகவே தங்களை இருத்திக் கொள்ளும். ஆனால் அதன் கருத்தியலுக்கு நெருக்கமான அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருக்கும். ஆர்.எஸ்.எஸ் (ராஷ்டிரீய சுயம்சேவக் சங்க்) என்ற ஆரிய பார்ப்பனீய இந்துத்துவ கருத்தியல் விசைகொண்ட அமைப்பும், அதற்கு நேரெதிரான பார்ப்பனரல்லாதோரின் திராவிட பகுத்தறிவுக் கருத்தியல் கொண்ட சுயமரியாதை இயக்கமும் (பின்னாளில் திராவிடர் கழகம்) இந்தியாவில் 1925-ஆம் ஆண்டில் தோன்றின. ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் கட்சி வடிவம்தான் பாரதீய ஜனதா கட்சி. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தாலும் அதன் கருத்தியலை தொடர்ந்து பின்பற்றுவது திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தி.மு.க. எனவே பாஜக, தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்கு இடையிலான கருத்தியல் முரண் மிக ஆழமானது, நூறாண்டுகால வரலாறு கொண்டது.

தி.மு.க-வின் வரலாற்றுச் சாதனை என்ன?

இந்திய நிலப்பகுதியில் இருந்த பல்வேறு மன்னராட்சிப் பகுதிகளை, நாடுகளை, சிறிது சிறிதாக தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்தது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி. பின்னர் 1858-இல் இங்கிலாந்து அரசியின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்கள். அவர்கள்தான் ஒட்டுமொத்த இந்திய துணைக் கண்டத்தையும் ஒரே ஆட்சியின் கீழ் ஒருங்கிணைத்தார்கள். அப்போது ஐரோப்பாவில் நிகழ்ந்த தொழிற்புரட்சி, ரயில்கள், பேருந்துகள் போன்ற போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தினார்கள். நவீன கல்வியை, அரசமைப்பை, நிர்வாக முறைகளை, நீதிபரிபாலனத்தை அறிமுகப்படுத்தினார்கள்.

அப்போது இந்தியாவில் கல்வி பெற்றிருந்த பார்ப்பன சமூகத்தினர், வேறு சில முன்னேறிய வகுப்பினர், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய சில பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோர் ஆங்கில கல்வி பயின்று நவீன அரசமைப்பு, சமூக அமைப்பு, அதற்கான சட்ட நடைமுறைகள் ஆகியவற்றைப் பயின்றார்கள். அதன் விளைவாக அவர்கள் மத்தியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியா ஒரு தேசமென்ற கருத்து உருவானது. இந்திய தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பு 1885-இல் தோன்றியது. அது இந்தியர்களின் சுயாட்சி உரிமைகளுக்காக வாதாடத் துவங்கியது.

இந்திய தேசியத்தின் உந்துவிசையாக மார்வாரி,பனியா வர்த்தக சமூகங்களின் பொருளாதார ஆற்றலும், பார்ப்பனீய கருத்தியலின் ஆற்றலும் அமைந்தன. இந்திய தேசியம் இயல்பாகவே அவர்கள் பார்வையிலேயே வடிவமைக்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் வர்ண தர்ம சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. பல்வேறு சமூக சீர்திருத்த கருத்துக்கள் தோன்றின. ஆனால் அவை பார்ப்பனீய வர்ண தர்ம சிந்தனையுடன் முற்றிலும் முரண்படுவது கடினமாக இருந்தது. பல்வேறு சமரசங்களை செய்துகொள்ள வேண்டியிருந்தது.

தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதோரின் அரசியல் அமைப்பாக நீதிக்கட்சி 1916-ஆம் ஆண்டு தோன்றியது. காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிய பெரியார், அந்த கட்சியால் வர்ண தர்மத்தினை முற்றிலும் எதிர்க்க முடியாது என்பதைக் கண்டபோது அதிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். பின்னர் சமஸ்கிருதமயமான இந்தி மொழியை தமிழ்நாட்டில் கட்டாயமாக பயிற்றுவிக்க காங்கிரஸ் ஆட்சி முனைந்தபோது நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்து திராவிடர் கழகம் தோன்றியது. இந்தியா சுதந்திரமடைந்த பின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து அண்ணா, கலைஞர் உள்ளிட்ட இளைஞர்களுடன் இணைந்து தி.மு.க-வை தோற்றுவித்தார்.

இந்த பின்னணியில்தான் நாம் தி.மு.க-வின் வரலாற்றுச் சாதனையை புரிந்துகொள்ள வேண்டும். அந்த சாதனையை மூன்று முக்கிய பிரிவுகளில் வகைப்படுத்தலாம். ஒன்று, அமைதிவழியில் அடித்தட்டு மக்களை, அதாவது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களை அணிகளாக்கி தேர்தல் பங்கேற்பின் மூலம் அதிகாரப் பரவலை சாத்தியமாக்கியது. தி.மு.க போல செல்வாக்கும், பணபலமும் இல்லாமல் கட்சி அமைப்புகளை வேர்மட்டத்தில் கட்டியெழுப்பி, அரசியல் ஆற்றலாக மாற்றிய கட்சிகளைக் காண்பது அரிது. இரண்டாவது திராவிட-தமிழ் பண்பாட்டு அடையாளத்தை சுயாட்சி நோக்கில் முன்னிறுத்தினாலும் அதனை தேசியவாதமாக மாற்றாமல் கூட்டாட்சியத்தின் அடிப்படையாகக் கருதியது. அண்ணா உலகக் கூட்டாட்சிக் குடியரசு என்ற வடிவத்தை எதிர்நோக்கினார். மூன்றாவது முதலீட்டியத்தின் வளர்ச்சியை அங்கீகரித்த நேரத்தில் அதனை சோஷலிஸ நோக்குள்ளதாக, மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற இலட்சியத்தை உருவாக்கியது. இந்த மூன்றையும் இணைத்துப் பார்க்கும்போதுதான் உலக மக்களாட்சி வரலாற்றில் அதன் தனித்துவம் புரியும்.

இந்திய குடியரசின் மக்களாட்சி வரலாறு

இந்திய தேசிய காங்கிரஸ் அதன் இயல்பிலேயே பல்வேறு கருத்தியல் போக்குகளின் பெருங்கூடாரமாக இருந்தது. காந்தி, நேரு உள்ளிட்ட ஆளுமைமிக்க தலைவர்களால் அது இந்தியக் குடியரசின் மக்களாட்சி விழுமியங்களையும். நடைமுறைகளையும் உருவாக்குவதில் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து இந்தியாவின் பன்மைத்துவம் கோரிய கூட்டாட்சி வடிவத்தை நோக்கி அதனால் நகர முடியவில்லை. மக்களாட்சி நடைமுறைகள் வலுவடைந்தபோது முரணரசியல் என்பது மாநிலங்களிலேயே வடிவம் கொள்வது இயல்பானது. பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வலுவிழந்து மாநில கட்சிகள் தோன்றின.

இந்த நிலையில்தான் இந்திய பெருந்தேசியத்தை இந்துத்துவ கருத்தியல் அடிப்படையில் ஒற்றை தேசிய அரசாக வடிவமைக்கும் வேலைத்திட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி வலுப்பெற்றது. சிறுபான்மை மதங்களுக்கு, குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிரான அதன் மதவாத பாசிச சொல்லாடல் மக்களை வட மாநிலங்களில் அணிதிரட்ட அதற்கு உதவியது. அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடம்தான் ராமர் பிறந்த இடம் என்ற இயக்கத்தின் மூலம் அது மாநில அளவிலான பிற்படுத்தப்பட்டோர் அரசியல் எழுச்சியை, மதவாத அரசியல் மூலம் எதிர்கொண்டது. இயல்பாகவே அதன் ஒற்றைத் தேசிய அரசு நோக்கு பெருமுதலீட்டிய நலன்களுக்கு உகந்ததாக இருக்கிறது. பார்ப்பன-பனியா கருத்தியல் மற்றும் சமூக மேலாதிக்கத்தின் வாகனமாக பாஜக இயங்குகிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே உள்ள பிரிவினைகளை ஊக்குவித்து அந்த பிரிவுகளை உள்வயப்படுத்துகிறது.

இன்றைய நிலையில் எழுபத்தைந்து ஆண்டுகால இந்திய குடியரசின் விழுமியங்களை சிதைத்து, அதன் கட்டமைப்புகளை மாற்றி, அதனை முற்றிலும் மறு உருவாக்கம் செய்யும் பாசிச முனைப்பில் பாஜக இயங்குகிறது. அதனை வெற்றிகரமாக எதிர்க்கும் சக்திகள் மாநில முரணரசியலில் வேர்கொண்ட சக்திகளாக உள்ளன. இடையில் ஒரு குடிமைச்சமூக ஆற்றலாக, ஒரு சில மாநிலங்களில் மட்டும் முரணரசியலில் பங்கேற்பதாக, பலவீனமான பழைய பெருங்கூடார அணுகுமுறையக் கொண்டதாக இந்திய தேசிய காங்கிரஸ் விளங்குகிறது.

இந்த நிலையில்தான் பாஜக-விற்கு எதிரான நூறாண்டுகால கருத்தியல் பயணத்தைக் கொண்ட தி.மு.க, தமிழ்நாட்டில் வலுவான வெற்றிபெறுவது இந்திய குடியரசைக் காப்பதற்கு, அதன் விழுமியங்களை செழுமையுறச் செய்வதற்கு இன்றியமையாததாக இருக்கிறது. எந்த ஒரு மாநிலத்தின் முரணரசியலையும் நாம் இந்தியக் குடியரசின் வரலாற்றிலிருந்து, அதனை வடிவமைக்கும் கருத்தியல் முரண்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.

கருத்தியல் அடிப்படையில் கட்சிகளை ஆதரிப்பதன் அவசியம்

இப்போது தமிழ் பொதுமன்றத்தில் நிகழும் குழப்பம் என்னவென்றால் பல்வேறு இலட்சியவாதிகள், இலக்கியவாதிகள், ஊடகத்துறை சார்ந்தவர்கள் கருத்தியல் அடிப்படையில் மட்டும் ஒரு கட்சியை ஆதரிக்க முடியுமா என்று கேட்கிறார்கள். நடைமுறை அரசியலில், முரணரசியலில் அந்த கட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டாமா என்று கொந்தளிக்கிறார்கள். இதில் என்ன சிக்கல் என்றால் நடைமுறை அரசியல், முரணரசியல் தளங்களில் எந்த கட்சியுமே மற்றொரு கட்சியின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தும் என்பதுதான். அரசின் புலனாய்வு அமைப்புகள், நீதிமன்றங்கள், ஊடகங்கள் எல்லாமே சார்புத்தன்மையுடன் இயங்குவதால் எந்த குற்றச்சாட்டை நம்புவது, எதனை அதிக தீமையுள்ளதாக பார்ப்பது என்பதெல்லாம் எவர் ஒருவருக்கும் பெரும் சவாலாக மாறுகிறது.

உதாரணமாக போஃபர்ஸ் பீரங்கிகள் வாங்கியதில் ஊழல் என்று செய்யப்பட்ட மிகப்பெரிய பிரசாரம், ராஜீவ் காந்தி பதவியிழக்கக் காரணமானது. ஆனால் அதன் பின் வந்த அரசுகளால் அந்த குற்றச்சாட்டுகள் எதையும் நிரூபிக்க முடியவில்லை. அதே போல மீண்டும் பல ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தேர்தலில் பதவியிழந்தது. அதில் தி.மு.க தொடர்புடைய 2G வழக்கும் ஒன்று. ஆனால் 2 G தொடர்பான குற்றச்சாட்டுகள் எதற்கும் ஆதாரங்களை காணவில்லை என்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மன்மோகன் சிங் ஆட்சியின் மீதான வேறு எந்த குற்றச்சாட்டுகளுமே நிரூபிக்கப் படவில்லை.

ஆனால் பாஜக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. மாநில அளவிலான வியாபம் ஊழல், கர்நாடகா எடியூரப்பா ஊழல்கள் தவிர தேசிய அளவில் ஹிண்டென்பெர்க் வெளிப்படுத்திய அதானி பங்குச்சந்தை முறைகேடுகள், வங்கிக் கடன் தள்ளுபடிகள், வாராக்கடன் மோசடிகள், தேர்தல் பத்திர முறைகேடுகள், ரஃபேல் ஊழல், வாக்காளர் பட்டியல் வோட்டுத் திருட்டு முறைகேடுகள் என எத்தனையோ ஊழல் குற்றச்சாட்டுகள் வெடித்தாலும் பாஜக ஊடகத் திரை போட்டு மறைத்துவிடுகிறது. பெரும்பாலான இந்தி, ஆங்கில மொழி, தமிழ் மொழி தொலைகாட்சிகள், பத்திரிகைகள் அதன் வசம் இருக்கின்றன.

இந்த நிலையில் கருத்தியல் அடிப்படையில் பாஜக-வின் பாசிச முனைப்பை எதிர்ப்பது, இந்தியக் குடியரசை ஒற்றை தேசிய அரசாக மாற்றுவதை எதிர்ப்பது. தி.மு.க வலியுறுத்தும் கூட்டாட்சிக் குடியரசை ஆதரிப்பது என்பது மிக அவசியமானதாகும். ஆனால் சமூக ஊடகங்களில் இத்தகைய நிலைபாடு அரசியல் முதிர்ச்சியற்றவர்களால் விமர்சிக்கப்படுகிறது. ஒரு எழுத்தாளர் கோட்பாடுகளைப் பயின்ற அறிஞர்கள் அரசை விமர்சிக்க வேண்டாமா, கருத்தியல் அடிப்படையில் கண்களை மூடிக்கொள்ளலாமா என்று கேட்கிறார். மற்றொருவர் கருத்தியல் அடிமைத்தனத்தால் ஆன்மா அழுகிவிடும் என்று கூறுகிறார். ஊடகத்துறை நண்பர் ஆய்வாளர்கள் என்னென்ன விளக்கங்கள் தருவார்களோ என்று அச்சமாக இருப்பதாகக் கூறுகிறார்.

இவர்களுக்கெல்லாம் என்ன புரிவதில்லையென்றால் கருத்தியல் என்பதுதான் தேசத்தின் ஆன்மா என்பது புரிவதில்லை. அதுதான் குடியரசு விழுமியங்களை வடிவமைப்பது என்று புரிவதில்லை. நடைமுறை அரசியல் பிரச்சினைகள், முரணரசியல் பிரச்சினைகள் வரும் போகும்; ஊடகங்களுக்குத் தீனியாகும். ஆனால் வரலாற்றை வழிநடத்துவது கருத்தியல் மோதல்கள்தான். மோகன் தாஸ் காந்தியை, சாவர்க்கரின் இந்துத்துவ சீடர் கோட்ஸே கொன்றது தனிநபர் விரோதமல்ல, இந்தியக் குடியரசின் அடிப்படை முரணைத் தீர்மானித்த கருத்தியல் கொலை. கெளரி லங்கேஷைக் கொன்றது ரியல் எஸ்டேட் மாஃபியா அல்ல. கருத்தியல் தீவிரவாத கூலிப்படை.

ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவிலேயே பாஜக-வை சமரசமின்றி கருத்தியல் அடிப்படையில் எதிர்க்கும் இயக்கம் என்பதற்கு சமீபத்திய இரண்டு முக்கிய உதாரணங்களைக் கூறலாம். இந்த இரண்டுமே ஆழமான கருத்தியல் முரண்களின் வெளிப்பாடுகள்.

பாஜக அரசு காஷ்மீரின் மாநில அந்தஸ்த்தை அடாவடியாக நீக்கியது; காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்களையெல்லாம் கைது செய்தது. அப்போது டில்லியில் அனைத்துக் கட்சி பொதுக்கூட்டத்தைக் கூட்டி அதனை கண்டித்தது தி.மு.க. ஒன்றிய அரசு நினைத்தால் ஒரு மாநிலத்தையே அந்தஸ்து நீக்கம் செய்ய முடியும் என்பது எவ்வளவு ஆபத்தான முன்னுதாரணம் என்பதை உணர்ந்ததால்தான் தி.மு.க அதனைச் செய்தது. கூட்டாட்சியத்தின் அஸ்திவாரத்தையே பாஜக தகர்த்த தருணம் அது. உச்சநீதிமன்றமும் அடிப்படைக் கட்டுமான தத்துவத்தின் அடிப்படையில் அதனை ரத்து செய்ய மறுத்துவிட்டது மிகப்பெரிய சரிவாகும்.

அதேபோல சமூக நீதி விழுமியத்தின் நெஞ்சில் விஷ ஈட்டியை பாய்ச்சிய பொருளாதார நலிவுற்றோருக்கான (EWS) இட ஒதுக்கீடு என்ற மிகத்தவறான சட்டத்தைக் கடுமையாகச் சமரசமின்றி எதிர்த்தது தி.மு.க. பொருளாதார நலிவு என்பது சமூக ரீதியாக விளைந்த அநீதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஒருவரது தவறான நட த்தையாலும் ஏற்படலாம் என்னும்போது இப்படி ஒரு இட ஒதுக்கீடு செய்யப்படுவது சமூக நீதி விழுமியத்தைச் சிதைப்பதாகும்.

இதையெல்லாம் கருத்தில் கொள்ளும் யாரும், திராவிட இயக்க வரலாற்றை முன்னெடுத்துச் செல்லும் மு.க.ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்று போற்றத்தான் செய்வார்கள். அத்துடன் முழுமையான இந்தியக் கூட்டாட்சிக் குடியரசு மலரட்டும் என்பதையும் சேர்த்துக் கொள்வார்கள்.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன்- பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam