'வெற்றிக் கொடி கட்டு' படத்தில் வரும் ஒரு காட்சி அது…
பார்த்திபன் ஒரு ஆட்டைக் கட்டிக் கொண்டு இழுத்துக் கொண்டு வருவார்; அதைப் பார்க்கும் வடிவேலுக்கு, தன்னையே அவர் கட்டி இழுத்துக் கொண்டு வருவது போல தோன்றும்.
அதே காட்சியைப் புதுமையான பின்னணி இசையுடன் போட்டு ஒரு மீம்ஸ். அதில் பார்த்திபன் அருகில் 'மோடி' என்றும், வடிவேலு அருகில் 'அண்ணாமலை' என்றும் டைட்டில் கார்டு…அதன் அர்த்தம் அரசியல் அரங்கத்துக்குப் புரியும்.
அந்தப்பக்கம் வந்து விழுகிறது ஒரு காணொளி…அது 'படையப்பா' படக்காட்சி…
''மாப்பிள்ளை அவருதான்…ஆனா அவரு போட்ருக்கிற பேண்ட் என்னோடது!'' என்று செந்தில் பேண்ட்டைக் காண்பித்து ரஜினி சொல்லும் காட்சியின் வசனத்தை எடுத்துக் கொண்டு, கோவை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கட்டமைப்பைக் காண்பித்து, 'திறந்து வச்சது அவரு தான்; ஆனா திட்டத்துக்கு நிதி கொடுத்தது மோடி அய்யா!' என்று கமெண்ட் போடப்படுகிறது.
இப்படியாக, இந்தப் பக்கத்திலிருந்து கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பறந்தால், அந்தப்பக்கத்தில் இருந்து பேட்ரியாட் பேட்டரியிலிருந்து ஒரு 'பவர்புல்' தோட்டா பறந்து வருகிறது. கோவையில் இப்போது நடப்பது தேர்தல் போர் என்பதை விட, தகவல் தொழில் நுட்ப யுத்தம் என்றே சொல்லலாம்.
அதற்கான காரணம், அங்கே களத்தில் நடக்கின்ற பரப்புரைக்கு நுாறு மடங்காக, சமூக ஊடகங்களில் சடுகுடு, சண்டை நடக்கிறது. பார்த்தாலே தெரிகிறது, அதில் பாதிக்கும் மேலே பொய், புனைவு, மிகைப்படுத்தல் இருப்பது. ஆயினும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், அடைமழை போல கொட்டுகிற மெசேஜ்களை அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு முறை பார்த்து, பரபரப்பாக அதை 'பார்வர்டு' செய்து பரப்புகிறார்கள் கோவை மக்கள்.
எல்லா ஊர்களிலுமே இது நடக்கிற விஷயம் தான். ஆயினும் கோவையில் இது வேற லெவலுக்கு நடக்கிறது. அதற்கும் ஒரு சிறப்புக் காரணம் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியை, 'வாட்சப் யுனிவர்சிட்டி' என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கிண்டலடித்திருந்தார். தமிழ்நாடு பிஜேபி தலைவர் அண்ணாமலையையும், பிரஸ்மீட் பிரசிடெண்ட், சோஷியல் மீடியா பீஸ் என திமுக மற்றும் அதிமுக ஐடி விங் ஆட்கள் பல விதமாக போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், பிஜேபி நிர்வாகிகளும், அண்ணாமலையின் ஆதரவாளர்களும் களத்தில் பணி செய்வதை விட, சமூக ஊடகங்களில் தகவல் பரப்புவதிலேயே அளவுக்கு அதிகமான கவனம் செலுத்துகிறார்கள் என்பது பல நேரங்களில் பல காரணிகளில் வெளிப்பட்டுள்ளது.
அண்ணாமலைக்கு இளைஞர் வட்டாரத்தில் மிகப்பெரிய வரவேற்பு இருப்பதற்கும் காரணம், இது தான். அவர்கள் எளிதாகப் படிப்பதற்கேற்ப அல்லது பார்ப்பதற்கேற்ப, சினிமாக் காட்சிகளின் 'சூப்பர் சீன்'களை 'கட்' செய்து போடுவது போல, எங்கெங்கோ அண்ணாமலை பேசிய பேச்சுக்களை எல்லாம் வெட்டி ஒட்டி அதற்கு மெருகூட்டி, டாப் டக்கர் டயலாக்குகளை வைத்து மீம்ஸ், ரீல்ஸ் போடுகிறார்கள். அது அந்த இளைஞர் பட்டாளத்தை அப்படியே ஈர்க்கிறது; நம்ப வைக்கிறது.

