அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் தொழிலில் பெரும்பகுதி மேற்கு கடலோர பகுதியைச் சேர்ந்த துறைமுகங்களில் உள்ள நிலையில், கிழக்கு கடலோர பகுதியில் ஒடிசா மாநிலத்தில் உள்ள கோபால்பூர் துறைமுகத்தை 3,350 கோடி ரூபாய்க்கு அதானி குழுமத்தை சேர்ந்த அதானி போர்ட்ஸ் நிறுவனம் வாங்குகிறது.
அதானி போர்ட்ஸ் நிறுவனமானது நாடு முழுவதும் பல்வேறு முன்னணி துறைமுகங்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள கோபால்பூர் துறைமுகத்தின் 95 சதவிகிதப் பங்குகளை அதானி போர்ட்ஸ் நிறுவனம் 3,350 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தப் பரிவர்த்தனை இரண்டு கட்டங்களில் நடைபெறுகிறது. முதலில் ஷபூர்ஜி பலோன்ஜி நிறுவனத்திடம் இருந்து கோபால்பூர் துறைமுகத்தின் 56 சதவிகிதப் பங்குகளையும் அடுத்து, ஒரிசா ஸ்டீவ்டோர்ஸ் நிறுவனத்திடம் இருந்து கோபால்பூர் துறைமுகத்தின் 39 சதவிகிதப் பங்குகளையும் அதானி போர்ட்ஸ் வாங்குகிறது.
கோபால்பூர் துறைமுகத்தை கைப்பற்றுவதன் மூலம் கிழக்கு கடலோரப் பகுதியில் அதானி போர்ட்ஸ் நிறுவனம் தனது இருப்பை பலப்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இந்தச் செய்தி வெளியானதை தொடர்ந்து வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ் பங்கு விலை 2 சதவிகிதம் மேல் உயர்ந்தது.
கோபால்பூர் துறைமுகம் ஆண்டுக்கு 20 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்டது. 2006-ம் ஆண்டில் ஒடிசா அரசு கோபால்பூர் துறைமுகத்துக்கு 30 ஆண்டுகளுக்கு சலுகைகளை வழங்கியது.
இந்தச் சலுகைகளைக் கூடுதலாக இரண்டு முறை தலா 10 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசியுள்ள அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கரண் அதானி,
"அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் தொழிலில் பெரும்பகுதி மேற்கு கடலோர பகுதியை சேர்ந்த துறைமுகங்களில்தான் இருக்கின்றன. ஒப்பீட்டளவில் கிழக்கு கடலோர பகுதியில் தொழில் குறைவாகவே இருக்கிறது. இந்தக் குறையை போக்குவதற்கு கோபால்பூர் துறைமுகம் உதவியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இரும்பு, ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட கனிமவளங்கள் சார்ந்த தொழில்களின் வளர்ச்சிக்கு கோபால்பூர் துறைமுகம் முக்கிய பங்களிக்கும் என அதானி போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் கோபால்பூர் துறைமுகம் 11.3 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது; 520 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
ஹெல்த் டிப்ஸ்: உப்பை எந்த அளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

