திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை இன்றிரவுக்குள் ராகுல் காந்தி அறிவிப்பார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற கோரிக்கைகள் காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்தது. ஆனால் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை தமிழகத்திற்கு ஒத்து வராது என முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாகவே அறிவித்தார். இதுபோன்றபல்வேறு இழுபறிகளுக்கு இடையே காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்து முதல்வர் ஸ்டாலின் மார்ச் 28ஆம் தேதி அறிவித்தார். அதே நாளில் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். ஆனால், கூட்டணியில் அதிக இடங்களைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி இதுவரை தனது வேட்பாளர்களை அறிவிக்காமல் இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் திருவாரூரில் பிரச்சாரத்தைத் தொடங்கிய நிலையில், இன்று மூன்றாவது நாளாக ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரம் செய்யும் இடங்களில், காங்கிரஸ் தொகுதியில் போட்டியிடும் தொகுதிகளில் சகோதரர் ராகுல் காந்தி அறிவிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
இந்நிலையில், இன்று ஈரோட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இன்று இரவுக்குள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை ராகுல் காந்தி அறிவிக்க உள்ளார். அந்த வேட்பாளருக்கும் நீங்கள் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.எனவே, இன்று இரவுக்குள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

